இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் பங்கேற்று வந்த 3 வகையான கிரிக்கெட் போட்டிகளும் நிறைவுக்கு வந்துள்ளது. இந்த சுற்றுப் பயணத்தில் முதலாவதாக நடந்த 5-வது டெஸ்ட் போட்டியில் அதிரடி வெற்றி பெற்ற இங்கிலாந்து 2 – என்ற கணக்கில் தொடரை சமன் செய்தது. ஆனால் அதன்பின் நடந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் கேப்டன் ரோகித் சர்மா திரும்பியதும் அட்டகாசமாக செயல்பட்டு 2 – 1 என்ற கணக்கில் தொடரை வென்று பதிலடி கொடுத்த இந்தியா கடைசியாக நடந்த ஒருநாள் தொடரிலும் சிறப்பாக செயல்பட்டு 2 – 1 (3) என்ற கணக்கில் கோப்பையை வென்று இந்த சுற்றுப் பயணத்தை வெற்றியுடன் நிறைவு செய்துள்ளது.

இதில் டி20 மற்றும் ஒருநாள் தொடரை இந்தியா வெல்வதற்க்கு நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்டியா ஆல்-ரவுண்டராக செயல்பட்டு முக்கிய பங்காற்றினார் என்றே கூறலாம். ஏனெனில் முதலாவதாக நடந்த டி20 தொடரின் முதல் போட்டியில் 51 ரன்கள் 4 விக்கெட்டுகளை எடுத்து அசத்திய அவர் 2-வது போட்டியிலும் 12 ரன்கள் மற்றும் 1 விக்கெட் எடுத்து ஆரம்பத்திலேயே இந்தியா தொடரைக் கைப்பற்ற உதவினார்.
அதே போல் அடுத்ததாக நடந்த ஒருநாள் தொடரில் 3 போட்டிகளிலும் அசத்திய அவர் 100 ரன்களையும் 6 விக்கெட்டுகளை எடுத்து தொடர் நாயகன் விருது வெல்லும் அளவுக்கு அபாரமாக செயல்பட்டார். சொல்லப்போனால் மான்செஸ்டரில் நடந்த கடைசி போட்டியில் இந்தியா சறுக்கிய போது ரிஷப் பண்ட் உடன் இணைந்து 133 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அவர் 71 (54) ரன்களையும் 4 விக்கெட்டுகளையும் எடுத்து வெற்றிக்கு கருப்பு குதிரையாக செயல்பட்டார்.

திரும்பிய பாண்டியா:
உள்ளூர் தொடரில் அசத்தி ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் சிறப்பாக செயல்பட்ட இவர் கடந்த 2016இல் அறிமுகமாகி சர்வதேச அளவில் அறிமுகமாகும் வாய்ப்பை பெற்றார். அடுத்த சில வருடங்களிலேயே தனது சிறப்பான பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் செயல்பாடுகளால் 3 வகையான இந்திய அணியிலும் முதன்மை ஆல்-ரவுண்டராக உருவெடுத்தார். அதனால் கபில் தேவுக்கு பின் நல்ல வேகப்பந்து வீச்சாளர் ஆல்-ரவுண்டர் கிடைத்துவிட்டார் என்று ரசிகர்கள் மகிழ்ந்த நிலையில் 2019 உலகக்கோப்பைக்கு பின் ஏற்பட்ட துரதிஷ்டவசமான காயத்தால் பந்துவீச முடியாமல் அவதிப்பட்ட அவர் பேட்டிங்கிலும் சுமாராக செயல்பட்டார்.
இருப்பினும் அவரை நம்பி துபாயில் நடந்த 2021 டி20 உலக கோப்பையில் தேர்வு செய்த தேர்வுக்குழுவினர் ஏமாற்றமடையும் வகையில் சுமாராக செயல்பட்டதால் பந்து வீசும் வரை அணியில் இடமில்லை என்று அதிரடியாக நீக்கப்பட்டார். அதே காரணத்தால் தம்மை வளர்த்த மும்பை நிர்வாகமும் கழற்றிவிட்ட நிலையில் ஐபிஎல் 2022 தொடரில் 15 கோடிக்கு நம்பி வாங்கிய குஜராத்துக்கு அனுபவமில்லாத கேப்டன்ஷிப் பதவியில் அசத்திய ஹர்திக் பாண்டியா 487 ரன்களையும் 8 விக்கெட்டுகளையும் எடுத்து முதல் வருடத்திலேயே கோப்பையை வென்று காட்டினார்.

மொத்தமா மாறிட்டாரு:
அதனால் மீண்டும் இந்திய அணியில் கம்பேக் கொடுத்த அவர் தென் ஆப்பிரிக்க டி20 தொடரில் அசத்தி அயர்லாந்து தொடரில் கேப்டனாகவும் கோப்பையை வென்று கொடுத்து தற்போது இங்கிலாந்து தொடரிலும் அற்புதமாக செயல்பட்டு அதே பழைய பார்முக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் காயத்தால் தடுமாறிய ஹர்திக் பாண்டியா கேப்டனாக ஐபிஎல் கோப்பையை வென்றபின் பொறுப்புடன் முதிர்ச்சியடைந்த வீரராக முழுவதுமாக மாறியுள்ளதாக முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மன்ஜரேகர் பாராட்டியுள்ளார். இதுபற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பாராட்டி பேசியது பின்வருமாறு.
“ஹர்டிக் பாண்டியா தற்போது முழுவதுமாக மாறியுள்ளார். அவர் தனது ஐபிஎல் அணியின் துருப்புச் சீட்டாக செயல்பட்டார். இதற்கு முந்தைய அணியில் காயத்தாலும் பேட்டிங்கிலும் தடுமாறியதால் அவரை முதன்மை வீரராக தேர்வு செய்ய யோசித்தனர். ஆனால் குஜராத் அணியில் அவரை நம்பி ஆதரவளித்து கேப்டன்சிப் பொறுப்பையும் கொடுத்தனர். அந்த முடிவு அவருக்கு மிகப் பெரிய திருப்பு முனையாக அமைந்துள்ளது. அதனால் முழுமையாக மாறியுள்ள அவரிடம் தற்போது முதிர்ச்சியும் பொறுப்பும் லட்சியமும் பன்மடங்கு உயர்ந்துள்ளது. அதனால் இந்திய கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு பொறுப்புடன் பாடுபடுவது சிறப்பான ஒன்றாகும். மொத்தத்தில் நாம் அனைவரும் எதிர்பார்த்த அந்த ஹர்திக் பாண்டியா வந்துவிட்டார்” என்று கூறினார்.

பொதுவாக சிறப்பாக செயல்பட்டாலும் திருப்தியடையாமல் வீரர்கள் மீது குறை கூறுபவராக அறியப்படும் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பாராட்டும் அளவுக்கு ஹர்திக் பாண்டியா உண்மையாகவே நல்ல முதிர்ச்சி கண்டுள்ளார் என்றே கூறலாம். ஏனெனில் முந்தைய காலகட்டங்களில் மிடில் ஆர்டரில் விளையாடிய அவர் தற்போது டாப் ஆர்டரில் களமிறங்கி நங்கூரமாகவும் அதிரடியாகவும் பேட்டிங் செய்யும் அனுபவத்தை கற்றுள்ளார். அதைப்போல் இன்னும் காயத்தால் அவதிப்பட்டாலும் இதர பவுலர்கள் தடுமாறும் போது தேவையான நேரத்தில் கச்சிதமாக பந்துவீசி விக்கெட்டுகளை எடுக்கும் துருப்புச்சீட்டு பவுலராகவும் அசத்த துவங்கியுள்ளார்.



