IND vs PAK : கண்ணுல பயமில்ல, பாகிஸ்தானை பந்தாடி யுவியின் சாதனையை தகர்த்த பாண்டியா – தலைவணங்கிய டிகே

Hardik Pandya
- Advertisement -

வரலாற்றுச் சிறப்புமிக்க ஆசிய கோப்பை ஐக்கிய அரபு நாடுகளில் 15வது முறையாக கோலாகலமாக துவங்கியுள்ளது. இந்த தொடரில் உலகமே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த பரம எதிரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் நேருக்கு நேர் சந்தித்த போட்டி ஆகஸ்ட் 28ஆம் தேதியான நேற்று துபாயில் நடைபெற்றது. இரவு 7.30 மணிக்கு துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தானுக்கு நம்பிக்கை நட்சத்திரம் மற்றும் கேப்டன் பாபர் அசாம் 10 (9) எடுத்திருந்தபோது கேட்ச் கொடுத்து அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். அவருக்கு அடுத்தபடியாக வந்த பகார் ஜமான் 10 (6) ரன்களிலும் இப்திகார் அஹமத் 28 (22) ரன்களிலும் அவுட்டாகி ஏமாற்றினர்.

இருப்பினும் மறுபுறம் நிதானத்தை வெளிப்படுத்திய மற்றொரு தொடக்க வீரர் முஹம்மது ரிஸ்வான் 4 பவுண்டரி 1 சிக்சருடன் 43 (42) ரன்கள் எடுத்திருந்த போது பாண்டியாவிடம் அவுட்டானார். மிடில் ஆர்டரில் குஷ்தில் ஷா 2 (7) சடாப் கான் 10 (9) ஆசிப் அலி 9 (7) என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்ற கடைசியில் ஹாரீஸ் ரவூப் 13* (7) ரன்களும் தஹானி 16 (6) ரன்களும் எடுத்து ஓரளவு மானத்தை காப்பாற்றினாலும் 19.5 ஓவரில் பாகிஸ்தான் 147 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. அற்புதமாக பந்து வீசிய இந்தியா சார்பில் அதிகபட்சமாக புவனேஸ்வர் குமார் 4 விக்கெட்டுகளும் ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளும் அர்ஷிதீப் சிங் 2 விக்கெட்டும் எடுத்தனர்.

- Advertisement -

தடுமாறிய இந்தியா:
அதை தொடர்ந்து 148 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு முதல் ஓவரிலேயே கேஎல் ராகுல் கோல்டன் டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். இருப்பினும் அடுத்து ஜோடி சேர்ந்த ரோகித் சர்மா – விராட் கோலி ஆகியோர் பொறுப்புடன் 2வது விக்கெட்டுக்கு முக்கியமான 49 ரன்கள் பார்ட்னர்ஷிப் குவித்து சரிவை சரி செய்தனர். ஆனால் அப்போது 12 (18) ரன்களில் ரோஹித் சர்மா அவுட்டாக அடுத்த சில ஓவர்களிலேயே நம்பிக்கை கொடுத்த விராட் கோலியும் 3 பவுண்டரி 1 சிக்சருடன் 35 (34) ரன்களில் அவுட்டானார்.

அதனால் 53/3 என தடுமாறிய இந்தியாவை காப்பாற்றுவார் என கருதப்பட்ட சூர்யகுமார் யாதவும் 18 (18) ரன்களில் அவுட்டானதால் வெற்றி கேள்விக்குறியானது. அந்த பரபரப்பான நிலைமையில் ஜோடி சேர்ந்த ரவீந்திர ஜடேஜாவும் ஹர்திக் பாண்டியாவும் நங்கூரமாக நின்று நிதானமாக பேட்டிங் செய்து 5வது விக்கெட்டுக்கு வெற்றியை தீர்மானிக்கும் 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து காப்பாற்றினர். அதனால் வெற்றி உறுதியான நிலையில் 2 பவுண்டரி 2 சிக்சருடன் கடைசி ஓவரில் ஜடேஜா 35 (29) அவுட்டானதால் போட்டியில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.

- Advertisement -

பாண்டியா மாஸ்:
இருப்பினும் மறுபுறம் அதிரடியாக பேட்டிங் செய்து கொண்டிருந்த ஹர்திக் பாண்டியா 4 பவுண்டரியுடன் மெகா சிக்சரை பறக்க விட்டு 33* (17) ரன்களை விளாசி சூப்பர் பினிஷிங் கொடுத்தார். அதனால் 19.4 ஓவரில் 148/5 ரன்கள் எடுத்த இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியைப் பெற்று குரூப் ஏ புள்ளி பட்டியலில் 2 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து ஆசிய கோப்பையை வெற்றியுடன் துவக்கியுள்ளது. அதைவிட கடந்த வருடம் இதே மைதானத்தில் உலக கோப்பையில் முதல் முறையாக வரலாற்று தோல்வியை பரிசளித்த பாகிஸ்தானுக்கு தக்க பதிலடியும் கொடுத்தது.

இந்த வெற்றிக்கு 3 விக்கெட்டுகள் மற்றும் 33* ரன்கள் எடுத்து கருப்பு குதிரையாக செயல்பட்ட ஹர்திக் பாண்டியா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக முறை ஒரு போட்டியில் 30+ ரன்கள் 3 விக்கெட்களையும் எடுத்த இந்திய வீரர் என்ற யுவ்ராஜ் சிங்கின் சாதனையை உடைத்து புதிய சாதனையும் படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. ஹர்திக் பாண்டியா : 3*
2. யுவராஜ் சிங் : 2

- Advertisement -

மேலும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் கடைசி கட்ட ஓவர்களில் (16 – 20) அதிக சிக்சர்களை அடித்த இந்திய பேட்ஸ்மேன் என்ற தோனியின் சாதனையையும் சமன் செய்தார். அந்தப் பட்டியல்:
1. ஹர்திக் பாண்டியா : 34*
2. எம்எஸ் தோனி : 34
3. யுவராஜ் சிங் : 31

கண்ணுல பயமில்லை:
இப்படி இந்தியாவின் சாதனை நாயகனாக வெற்றியைப் பெற்றுக் கொடுத்த ஹர்திக் பாண்டியா ஒருபுறம் நிற்க கடைசி ஓவரின் முதல் பந்தில் ஜடேஜா அவுட்டானதும் போட்டியில் பரபரப்பு ஏற்பட்ட போது களமிறங்கிய தினேஷ் கார்த்திக் சிங்கிள் எடுத்தார். அதற்கடுத்த பந்தில் சிங்கிள் கிடைத்தும் அதை எடுக்காத ஹர்திக் பாண்டியா தம்மால் வெற்றியைப் பெற்றுக் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் சிங்கிள் எடுக்க வந்த தினேஷ் கார்த்திக்கை திரும்பிச் செல்லுமாறு நெருப்பு பறந்த கண்களிலேயே சொன்னார்.

அடுத்த பந்திலேயே மெகா சிக்சர் அடித்து ஃபினிஷிங் கொடுத்த அவருக்கு தினேஷ் கார்த்திக் தலை வணங்கி வழங்கி பாராட்டினார். அவரின் அந்த பார்வையை பார்த்த ரசிகர்கள் “கண்ணுல பயம் இல்லை, அதற்கு இதுதான் சாம்பிள்” என்ற வகையில் பாண்டியா பாகிஸ்தானை தெறிக்கவிட்டதாக சமூக வலைதளங்களில் பாராட்டி வருகிறார்கள்.

Advertisement