
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி ஆல்ரவுண்டான ஹார்டிக் பாண்டியாவும், செர்பியா நாட்டைச் சேர்ந்த மாடல் அழகி மற்றும் நடிகையுமான நட்டாஷா ஆகியோர் கடந்த 2020-ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். அதன் பின்னர் நான்கு ஆண்டுகள் தொடர்ந்த இவர்களது திருமண வாழ்க்கை சமீபத்தில் முடிவுக்கு வந்து இருவரும் முறைப்படி விவாகரத்து செய்து கொண்டதை வெளிப்படையாக அறிவித்தனர்.
அதனை தொடர்ந்து நடாஷா தனது மகன் அகஸ்தியாவை அழைத்துக் கொண்டு செர்பியா நாட்டிற்கு சென்றுவிட்டார். முன்னதாக தங்களது பிரிவு குறித்த கருத்தில் ஹர்திக் பாண்டியா குறிப்பிடுகையில் : நாங்கள் இருவருமே சேர்ந்துதான் இந்த கடினமான முடிவை எடுத்துள்ளோம். நான்கு ஆண்டுகளாக நீடித்த எங்களது திருமண பந்தம் முடிவுக்கு வந்துள்ளது.
இருந்தாலும் எங்களது மகன் அகஸ்தியாவிற்கு நாங்கள் இருவருமே பெற்றோர்களாக இருந்து அவர் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து விடயங்களையும் செய்து கொடுப்போம் என்று குறிப்பிட்டு இருந்தார்.
தற்போது பாண்டியா இலங்கை நாட்டில் டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வரும் வேளையில் இன்று பாண்டியாவின் மகன் அகஸ்தியா தனது நான்காவது பிறந்தநாளை செர்பியாவில் கொண்டாடுகிறார். இந்நிலையில் தனது மகன் பிறந்த நாளை ஒட்டி தனது சமூக வலைதள பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ள பாண்டியா அதில் குறிப்பிட்டதாவது :
ஒவ்வொரு நாளும் நீதான் என்னை இயங்க வைத்துக் கொண்டிருக்கிறாய். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பார்ட்னர். என்னுடைய மனது முழுவதும் நீதான் இருக்கிறாய். வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவிற்கு உன்னை நேசிக்கிறேன் என்று தனது மகன் குறித்து நெகிழ்ச்சியான கருத்தினை பாண்டியா பகிர்ந்துள்ளார். பாண்டியாவின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : 25 வயசுலேயே இப்படி ஒரு சாதனையா? ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையே மிரளவைத்த ரஷீத் கான் – விவரம் இதோ
கடந்த சில மாதங்களாகவே பாண்டியா மற்றும் நட்டாஷா ஆகியோருக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிய இருப்பதாக தகவல் வெளியாகியிருந்த வேளையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இருவருமே முறைப்படி பிரிந்து தற்போது தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர் என்பதும் அகஸ்தியா தனது தாய் நட்டாஷாவுடன் தற்போது செர்பியாவில் இருந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.