இந்திய கிரிக்கெட் அணி 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்று சர்வதேச 20 ஓவர் போட்டிகளின் புதிய சாம்பியனாக சாதனை படைத்தது. இந்த வெற்றிக்கு கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜஸ்ப்ரித் பும்ரா உள்ளிட்ட அனைத்து வீரர்களுமே முக்கிய பங்காற்றினர். அதில் ஹர்திக் பாண்டியா பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் ஆகிய அனைத்து துறைகளிலும் சிறப்பாக விளையாடி வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்டார்.
கடந்த 2024 ஐபிஎல் தொடரில் சுமாராக விளையாடி மும்பையின் தோல்விக்கு காரணமாக அமைந்த அவர் கடுமையான விமர்சனங்களை சந்தித்தார். மேலும் 2023 உலகக் கோப்பையில் காயத்தை சந்தித்து பாதியிலேயே வெளியேறியதால் பாண்டியா பணத்துக்காக மட்டுமே விளையாடுவார் என்று இந்திய ரசிகர்களே விமர்சித்தனர். அந்த சூழ்நிலையில் இந்த தொடரில் அவர் 11 விக்கெட்டுகளையும் 143 ரங்களையும் எடுத்தார்.
உச்சத்தில் பாண்டியா:
குறிப்பாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் கடைசி ஓவரில் 16 ரன்களை கட்டுப்படுத்திய அவர் 3 விக்கெட்டுகளை எடுத்து வெற்றியில் முக்கிய பங்காற்றினார். அதனால் தன்னுடைய விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த அவர் நாட்டுக்காக உலகக் கோப்பையை கண்ணீர் விட்டது அனைவரது பாராட்டுகளைப் பெற்றது.
இந்நிலையில் சர்வதேச டி20 போட்டிகளுக்கான புதிய தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதில் ஆல் ரவுண்டர்களுக்கான பட்டியலில் உலகக் கோப்பையில் அசத்திய ஹர்திக் பாண்டியா 2 இடங்கள் முன்னேறி இலங்கை கேப்டன் ஹஸரங்காவை பின்னுக்குத் தள்ளி உலகின் புதிய நம்பர் ஒன் டி20 ஆல் ரவுண்டராக சாதனை படைத்துள்ளார். இதன் வாயிலாக ஐசிசி டி20 தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் ஆல்ரவுண்டர் இடத்தைப் பிடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையும் பாண்டியா படைத்துள்ளார்.
இதற்கு முன் ஜடேஜா, அக்சர் பட்டேல் போன்றவர்கள் டாப் 10 இடங்களை பிடித்தார்களே தவிர முதலிடத்தை பிடித்ததில்லை. தற்சமயத்தில் பாண்டியாவுக்கு அடுத்தபடியாக அக்சர் படேல் 12வது இடத்தில் உள்ளார். அந்த வகையில் தன்னை கிண்டலடித்தவர்களுக்கு தற்போது நம்பர் ஒன் ஆல் ரவுண்டராக முன்னேறியுள்ள பாண்டியா மற்றுமொரு பதிலடி கொடுத்துள்ளார்.
இதையும் படிங்க: சின்ன வயசுல இருந்து நான் கண்ட கனவு இது.. இப்போ நிறைவேறிதில் மகிழ்ச்சி – ரியான் பராக் மகிழ்ச்சி
அதே போல பவுலர்கள் பட்டியலில் அக்சர் படேல் 7, குல்தீப் யாதவ் 9, ஜஸ்ப்ரித் பும்ரா 12வது முன்னேறி இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளனர். பேட்டிங் தரவரிசை பட்டியலில் சூரியகுமார் யாதவ் 2, ஜெய்ஸ்வால் 7, ருதுராஜ் 20, ஓய்வு பெற்ற ஜாம்பவான்கள் ரோஹித் சர்மா 36, விராட் கோலி 40வது இடத்தை பிடித்துள்ளனர். அணிகள் தரவரிசையில் டி20 உலகக் கோப்பையை வென்ற இந்தியா தொடர்ந்து நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்து சாம்பியனாக ஜொலித்து வருகிறது.



