பாண்டியா இப்போ 4டி ப்ளேயராக உருவாகியுள்ளார் – அவரை வளர்த்த முன்னாள் இந்திய வீரர் பாராட்டு

Pandya
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரின் சாம்பியன் பட்டத்தை குஜராத் டைட்டன்ஸ் தனது முதல் வருடத்திலேயே வென்று சாதனை படைத்துள்ளது. இந்த வருடம் புதிதாக உருவாக்கப்பட்ட அந்த அணிக்கு உள்ளூர் போட்டிகளில் கூட கேப்டன்ஷிப் செய்த அனுபவமில்லாத ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்ட போது இந்த அணி எங்கே வெல்லப் போகிறது என்று அனைவரும் குறைத்து மதிப்பிட்டனர். ஏனெனில் சமீப காலங்களில் காயத்தால் பந்து வீசாமல் பேட்டிங்கிலும் சுமாராக செயல்பட்ட அவர் இந்திய அணியில் தனக்கான இடத்தை இழந்து நின்றார். இருப்பினும் முதல் முறையாக கொடுக்கப்பட்ட கேப்டன்ஷிப் பொறுப்பால் பேட்டிங்கில் மிடில் ஆர்டருக்கு பதில் 3-வது இடத்தில் களமிறங்கி தனது அணி சரியும் போதெல்லாம் அதிரடியாக பேட்டிங் செய்து தாங்கிப் பிடித்தார்.

- Advertisement -

அதேபோல் பந்துவீச்சில் முகமது சமி, லாக்கி பெர்குசன் போன்ற முக்கிய பவுலர்கள் தடுமாறும் போது அதை சரிசெய்யும் வகையில் தேவையான நேரங்களில் பந்துவீசி ஒரு ஆல்-ரவுண்டராக அசத்தினார். மொத்தம் பங்கேற்ற 15 போட்டிகளில் 4 அரைசதங்கள் உட்பட 487 ரன்களை அடித்த அவர் பந்து வீச்சில் 8 விக்கெட்டுகளை எடுத்து குஜராத்தின் வெற்றியில் முக்கிய பங்காற்றினார். குறிப்பாக ராஜஸ்தானுக்கு எதிரான இறுதிப் போட்டியில் 3 முக்கிய விக்கெட்டுகளை எடுத்த அவர் 34 ரன்கள் எடுத்து கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார்.

கேப்டனாக அசத்தல்:
அதைவிட ரஷித் கான், சஹா போன்ற தரமான வீரர்களுக்கும் மூத்த மற்றும் இளம் வீரர்களுக்கும் தேவையான வாய்ப்பளித்து சிறந்த முறையில் வழிநடத்தி அனுபவமில்லாத கேப்டன்ஷிப் பதவியிலும் பாராட்டும் வகையில் செயல்பட்டார். குறிப்பாக தேவையான நேரங்களில் சரியான பந்துவீச்சாளர்களை மாற்றி மாற்றி அவர் பயன்படுத்தியது அவரின் கேப்டன்ஷிப் முதிர்ச்சியை காட்டியது. அதேபோல் மாபெரும் இறுதி போட்டியில் 16, 18 போன்ற கடைசிகட்ட முக்கிய ஓவர்களை தமிழகத்தின் சாய் கிஷோர் போன்ற அனுபவமில்லாத இளம் வீரர்களை நம்பி அவர் வழங்கியது முன்னாள் வீரர்களின் பாராட்டுக்களை பெற்றது.

Pandya

மொத்தத்தில் முழுமையாக பந்து வீசாமல் சுமாராக செயல்பட்டதால் கடந்த டி20 உலகக் கோப்பையுடன் இந்திய அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்ட ஹர்திக் பாண்டியா தற்போது தன்னை சிறந்த ஆல்-ரவுண்டராக நியமித்து இந்திய அணியில் மீண்டும் வலுவான இடத்தை பிடித்துள்ளார். அதுவும் தற்போது கேப்டனாக எம்எஸ் தோனி, கௌதம் கம்பீர், ரோகித் சர்மா ஆகியோருக்கு பின் ஐபிஎல் கோப்பையை வென்றுள்ள அவர் வரும் காலங்களில் இந்திய டி20 அணிக்கு கேப்டனாக அளவுக்கு உயர்ந்துள்ளார்.

- Advertisement -

4டி ப்ளேயர்:
இந்நிலையில் இதுநாள் வரை பேட்டிங் பவுலிங் ஃபீல்டிங்கில் மட்டும் அசத்தி வந்த ஹர்திக் பாண்டியா தற்போது கேப்டனாகவும் கோப்பையை வென்றுள்ளதால் 4 பரிணாமங்கள் கொண்ட வீரராக உருவெடுத்த உள்ளதாக முன்னாள் இந்திய வீரர் கிரண் மோர் பாராட்டியுள்ளார். தனது சகோதரர் க்ருனால் பாண்டியாவுடன் இளம் வயதில் குஜராத்தில் உள்ள “கிரண் மோர்” அகடமியில் சேர்ந்துதான் கிரிக்கெட் வீரர்களாக வளர்ந்து இன்று சிறந்த ஆல்-ரவுண்டர்களாக அசத்துவதுவை பற்றி பெருமையுடன் அவர் பேசியது பின்வருமாறு.

“இந்த ஐபிஎல் தொடரில் குஜராத் விளையாடிய விதம் என்னை பொருத்தவரை சிறந்த தருணமாகும். அது மிகவும் அபாரமாக இருந்தது. குறிப்பாக ஹர்திக் பாண்டியா கேப்டனாக வந்து கோப்பையை வென்றதுடன் அதற்கு சமமாக ஆல்-ரவுண்டராக செயல்பட்டார். மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து ஒரு சாதாரண வீரராக குஜராத்துக்கு சென்று நேரடியாக கோப்பையை வெல்வது அவ்வளவு சுலபமான காரியமல்ல. க்ருனால் பாண்டியா என்னுடைய அகடமியில் சேர்ந்தபோது ஹர்திக் பாண்டியா பெரும்பாலும் அங்கு தான் இருப்பார். அங்குதான் ஓடுவது, கேட்ச் பிடிப்பது போன்ற அதிகப்படியான பயிற்சிகளை மேற்கொண்டார். அவரின் கண்ணில் இருந்த கிரிக்கெட் தாகத்தை பார்த்த நான் தினந்தோறும் அவரை பயிற்சிக்கு அழைத்து வருமாறு க்ருனால் பாண்டியாவிடம் தெரிவித்தேன்”

- Advertisement -

“ஒரு இளம் குழந்தையாக அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று ஹர்திக் பாண்டியா விரும்பினார். அந்த வகையில் தற்போது அவர் 4 பரிணாமங்களை கொண்ட வீரராக உருவெடுத்த உள்ளதாக நான் நம்புகிறேன். இதற்கு முன் அவர் பேட்ஸ்மேன், பவுலர் மற்றும் ஃபீல்டராக இருந்ததால் 3 பரிணாம வீரராக இருந்தார். ஆனால் தற்போது கேப்டனாகவும் செயல்படுகிறார். எனவே அவரைப் போன்ற ஒரு தரமான வீரர் தேசிய அளவில் விளையாடுவது பெருமையானதாகும்” என்று கூறினார்.

இதையும் படிங்க : தோல்வியால் கிடைத்த தங்கங்கள் – ஐபிஎல் 2023 சீசனில் மும்பை தக்க வைக்க வேண்டிய 5 இளம் வீரர்கள்

கடைசியாக துபாயில் கடந்த 2021 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்காக விளையாடிய ஹர்திக் பாண்டியா அடுத்ததாக ஜூன் 9-ஆம் சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மீண்டும் இந்திய அணிக்காக விளையாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement