
கரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு மேலாக ஊர் அடங்கு நிலையில் உள்ளது. மேலும், இந்த வருடம் நடக்கவேண்டிய ஐபிஎல் தொடர் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு 3,000 கோடி இழப்பு ஏற்படும்.
அதனை தாண்டி இந்த ஐபிஎல் தொடரை நம்பியிருக்கும் பல வீரர்கள் இதனால் பல கோடிக்கணக்கில் நஷ்டம் அடைவார்கள். குறிப்பாக வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ஐபிஎல் தொடரில் மட்டும்தான் ஆடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் நஷ்டம் ஏற்படும். ஆஸ்திரேலிய வீரர்கள் இதனால் பாதிக்கப்படுவார்கள்.
அதே நேரத்தில் ஐபிஎல் தொடரை எப்படியாவது நடத்திவிட வேண்டும், என்று பல வீரர்கள் ஆலோசனை கூறி வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவும் ரசிகர்கள் இல்லாமல் போட்டியை நடத்தலாம் என்று ஆலோசனை கூறியுள்லார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் : நாங்கள் ரசிகர்கள் கூட்டம் இல்லாத நிலையில், ரஞ்சி கோப்பை போட்டியில் ஆடி உள்ளோம். அந்த உணர்வு மிகவும் வித்தியாசமானது. ஒருவேளை ஐபிஎல் தொடர் அவ்வாறு நடந்தால் நன்றாகத்தான் இருக்கும். குறைந்த பட்சம் மக்கள் வீட்டில் இருந்தபடியாவது போட்டியை பார்க்கலாம். இவ்வாறு கூறியுள்ளார் ஹர்திக் பாண்டியா.
ஏற்கனவே இதே கருத்தினை தான் கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கூறியிருந்தார்.தற்போது அவரின் கருத்தை ஆதரித்து பாண்டியாவும் பேட்டியளித்துள்ளார்.இதனைத் தாண்டி முன்னதாக நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் பிரெண்டன் மெக்கல்லம் உலக கோப்பை டி20 தொடரை தள்ளிவைத்துவிட்டு ஐபிஎல் தொடரை நடத்தலாம் என்று கூறியிருந்தார். இவ்வாறு பலரும் தங்களது யோசனைகளைக் கூறி வருகின்றனர்.