வரலாற்றில் 8வது முறையாக ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலகக்கோப்பை விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் 2வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கியுள்ள ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா தன்னுடைய முதல் 2 போட்டிகளில் பரம எதிரி பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்தை தோற்கடித்த நிலையில் தென்னாபிரிக்காவுக்கு எதிரான 3வது போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் போராடி தோற்று ஹாட்ரிக் வெற்றி வாய்ப்பை நழுவ விட்டது. அக்டோபர் 30ஆம் தேதியன்று பெர்த் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் மற்றும் முதலில் பேட்டிங் செய்த இந்தியா தென் ஆப்பிரிக்காவின் தரமான பந்து வீச்சில் 20 ஓவர்களில் போராடி 133/9 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

அதிகபட்சமாக சூரியகுமார் யாதவ் 68 (40) ரன்கள் எடுக்க தென்னாப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக லுங்கி நிகிடி 4 விக்கெட்டுகளை எடுத்தார். அதைத் தொடர்ந்து 134 ரன்களை துரத்திய தென்னாப்பிரிக்காவும் குவின்டன் டீ காக் போன்ற முக்கிய வீரர்களின் ஆரம்பகட்ட சொதப்பலான ஆட்டத்தால் 24/3 என்ற மோசமான தொடக்கத்தை பெற்று தடுமாறியது. இருப்பினும் மிடில் ஆர்டரில் ஐடன் மார்க்கம் 52 ரன்களும் டேவிட் மில்லர் 59* ரன்களும் குவித்து வெற்றி பெற வைத்தனர். இந்த தோல்வியால் அரை இறுதிக்கு செல்ல எஞ்சிய 2 போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது.
மிரட்டிய சூர்யா:
முன்னதாக இப்போட்டியில் ரோகித் சர்மா 15, கேஎல் ராகுல் 9, விராட் கோலி 12, தீபக் ஹூடா 0, ஹர்டிக் பாண்டியா 2 என அத்தனை தரமான பேட்ஸ்மேன்களும் வேகம் மற்றும் பவுன்ஸ் ஆகியவற்றுக்கு கை கொடுத்த பெர்த் மைதானத்தில் தென்னாப்பிரிக்காவின் அதிரடியான வேகத்தில் சரணடைந்ததால் இந்தியா 100 ரன்களை தாண்டுமா என்ற கவலை ரசிகர்களிடம் ஏற்பட்டது. அப்போது மும்பை வான்கடே போன்ற பேட்டிங்க்கு சாதகமான வேறு ஏதோ பிட்ச்சில் விளையாடுவது போல் தனக்கே உரித்தான சூப்பர் ஸ்டார் ஸ்டைலில் களமிறங்கிய முதல் பந்திலிருந்தே வெளுத்து வாங்கிய சூரியகுமார் 6 பவுண்டரி 3 சிக்சருடன் 68 (40) ரன்களை 170.00 என்ற அற்புதமான ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்து இந்தியாவை 100 ரன்கள் தாண்ட வைத்து மானத்தை காப்பாற்றினார்.

சர்வதேச கிரிக்கெட்டில் தாமதமாக 30 வயதில் அறிமுகமானாலும் கடந்த 2 வருடங்களில் பெரும்பாலான போட்டிகளில் இதர இந்திய பேட்ஸ்மேன்களை விட சொல்லி அடிக்கும் அவர் இந்தியாவின் மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மேன் என்று ரசிகர்கள் கொண்டாடும் அளவுக்கு நாலாபுறமும் சுழன்றடித்து லேட்டஸ்ட் மேட்ச் வின்னராக அவதரித்துள்ளார். அதிலும் தற்சமயத்தில் உலகிலேயே மிகச்சிறந்த டி20 பேட்ஸ்மேனாக போற்றும் அளவுக்கு அசத்தும் அவர் நேர்மறையான எண்ணங்களுடன் விளையாடுவதே அவரது அதிரடியின் ரகசியம் என்று முன்னாள் நியூசிலாந்து கேப்டன் ஸ்டீபன் பிளமிங் பாராட்டியுள்ளார்.
அதைவிட ஓப்பன் ஸ்டேன்ஸ் டெக்னிக்கை பின்பற்றுவதால் அவரது பலவீனத்தை கண்டறிவது எதிரணிகளுக்கு கடினமாக இருப்பதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டில் பேசியது பின்வருமாறு. “அவருடைய வீக்னஸ் பகுதிகளை கண்டறிவது கடினமாக உள்ளது. அவர் எப்போதும் நேர்மறையான எண்ணங்களுடன் விளையாடுகிறார். மேலும் ஆக்ரோஷமான ஓப்பன் ஸ்டேன்ஸ் பின்பற்றுவதன் காரணமாக நம்மால் நினைக்க முடியாத இடங்களில் கூட அவரால் எளிதாக அடிக்க முடிகிறது. அவரை பொறுமையுடன் பேட்டிங் செய்ய வைக்கும் லென்த்துகளை பவுலர்கள் எளிதில் கண்டறிய முடியாத அளவுக்கு அவர் சில டெக்னிக்கை உருவாக்கி வைத்துள்ளார். ஏனெனில் ஃபுல்லாக நீங்கள் வீசினால் அவர் கவர் அல்லது அரௌண்ட் திசையில் அடித்து விடுவார்”

“அதே சமயம் சற்று ஷார்ட் பிட்ச் பந்துகளை வீசினால் அவர் தேர்ட் மேன் அல்லது பாயிண்ட் திசையில் உங்களை அடிப்பார். அதற்காக நேராக வீசினால் அவர் ஷார்ட் பந்தில் பொதுவாகவே சிறப்பாக அடிக்கிறார். எனவே அனைத்து பந்துகளையும் எதிர்கொள்ளும் வகையில் அவர் டெக்னிக் உருவாக்கி வைத்துள்ளதால் அவருடைய வீக்னஸ் கண்டுபிடிப்பது கடினமாக இருக்கிறது” என்று கூறினார். அவர் கூறுவது போல நிறைய போட்டிகளில் எப்படி போட்டாலும் அடிக்கிறார் என்று ரசிகர்களே பாராட்டும் அளவுக்கு சூரியகுமார் யாதவ் சிறப்பாக செயல்படுவது அவருடைய கடின உழைப்புக்கு கிடைத்த பரிசாகும்.



