தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தது. அந்தத் தோல்விக்கு கொல்கத்தாவில் அமைக்கப்பட்டிருந்த சுழலுக்கு சாதகமான பிட்ச் முக்கிய காரணமாக அமைந்தது. அது பற்றி கேட்டதற்கு தாங்கள் தான் கொல்கத்தாவில் அப்படிப்பட்ட பிட்ச் வேண்டுமென்று கேட்டு வாங்கியதாக இந்திய அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்தார்.
இத்தனைக்கும் கடந்த நியூசிலாந்து தொடரில் சொந்த மண்ணில் இந்தியா ஒய்ட்வாஸ் தோல்வியைச் சந்திப்பதற்கு சுழலுக்கு சாதகமான பிட்ச்களே முக்கிய காரணமானது. இருப்பினும் அதிலிருந்து பாடத்தைக் கற்காத இந்திய அணி மீண்டும் அதே போன்ற பிட்ச்சை அமைத்து அவமானத் தோல்வியை சந்தித்துள்ளது. இந்நிலையில் இந்திய அணியை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் பின்னோக்கி அழைத்துச் செல்வதாக முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் விமர்சித்துள்ளார்.
பின்னோக்கி செல்லும் கம்பீர்:
ஏனெனில் ஒருதலைபட்சமான பிட்ச்களால் டெஸ்ட் போட்டிகள் வளர்வதற்கு பதிலாக அழிவை நோக்கிச் செல்வதாகவும் ஹர்பஜன் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அவர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டை அழிக்கிறார்கள். சமீப வருடங்களாகவே அவர்கள் செய்யும் வேலை, அமைக்கும் பிட்ச் ஆகியவற்றைப் பார்த்துக்கொண்டு தான் வருகிறேன்”
“யாருமே அதைப்பற்றி பேசுவதில்லை. நம்முடைய அணி விக்கெட்டுகளை எடுத்து வெற்றி பெறுவதால் அனைவரும் பரவாயில்லை என்று செல்கிறார்கள். அது போன்ற பிட்ச்களில் சிலர் விக்கெட்டுகளை எடுத்து சிறந்தவர்களாக மாறியுள்ளனர். அதனால் அனைத்தும் நன்றாக செல்வதாக அனைவரும் கருதுகிறார்கள். ஆனால் இது இன்று துவங்கியது கிடையாது என்று நான் கருதுகிறேன்”
ஹர்பஜன் விமர்சனம்:
“இப்படிப்பட்ட பிட்ச்சுகள் அமைக்கப்படுவது கடந்த சில வருடங்களாகவே இந்தியாவில் நடைபெற்று வருகிறது. ஆனால் அது விளையாடுவதற்கு தவறான வழியாகும். நியூசிலாந்திடம் தோற்ற பின்பும் நாம் இது போன்ற பிட்ச்களை தயாரிக்கிறோம். இங்கிலாந்தில் நமது அணி நன்றாக விளையாடிய பின்பும் இப்படி செய்வதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. உங்களிடம் திடமான பேட்டிங், பவுலிங் இருக்கிறது”
இதையும் படிங்க: பேப்பரில் அவரோட பெயர் இருந்தாலும்.. 2026இல் தோனி தான் சிஎஸ்கேவை தலைமை தாங்கும் ராஜா.. ஃகைப்
“எனவே நீங்கள் நல்ல பிட்ச்சை அமைத்தால் 5வது நாள் வரை விளையாட முடியும். ஆனால் நீங்கள் முன்னோக்கி செல்வதில்லை. வட்டத்திற்குள் அங்கேயே நிற்கிறீர்கள். இது போன்ற சூழ்நிலைகளில் நீங்கள் வென்றால் எந்த பயனுமில்லை. ஒரு வீரராக நீங்கள் வளரப்போவதும் இல்லை. இது நல்ல பிட்ச்கள் அமைப்பதற்கான நேரமாகும். ஏனெனில் நாம் நம்முடைய பேட்ஸ்மேன்களுக்கு ரன்கள் அடிக்கத் தெரியாதது போன்ற சூழ்நிலையை உருவாக்குகிறோம். டெஸ்ட் போட்டிகள் இப்படி நடத்தப்படுவதைப் பார்ப்பது வருத்தமளிக்கிறது. ஏன் இப்படி செய்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை” எனக் கூறினார்.



