
வரும் பிப்ரவரி 7ஆம் தேதி துவங்கும் ஐசிசி 2026 டி20 உலகக் கோப்பையில் விளையாட சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தத் தொடருக்கான இந்திய அணியில் கடைசி நேரத்தில் சுப்மன் கில் கழற்றி விடப்பட்டது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. ஏனெனில் 2023ஆம் ஆண்டு சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் சுமாராக விளையாடியதால் ஏற்கனவே இந்திய அணியிலிருந்து கழற்றி விடப்பட்டிருந்தார்.
இருப்பினும் தற்போது தேர்வுக்குழு அவரை இந்திய அணியின் ஆல் ஃபார்மட் கேப்டனாக வளர்க்க நினைக்கின்றது. அதன் காரணமாக டி20 அணியின் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்ட கில்லுக்கு ஓப்பனிங்கில் விளையாடும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அந்த வாய்ப்பில் சுமாராக விளையாடிய அவர் கடைசி 18 சர்வதேச டி20 இன்னிங்ஸில் அரை சதம் கூட அடிக்கவில்லை.
ஆனாலும் துணைக் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்ட காரணத்தால் அவருக்கு உலகக் கோப்பையில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் அணியின் நலனை விட யாரும் பெரியவர்கள் கிடையாது என்று முடிவெடுத்த தேர்வுக்குழு கடைசி நேரத்தில் அவரை கழற்றி விட்டது பலரையும் மகிழ்ச்சியடைய வைத்தது. இந்நிலையில் துணைக் கேப்டனாக இருந்தாலும் மோசமான ஃபார்மில் இருக்கும் சுப்மன் கில்லை அணியின் நலனுக்காக கழற்றி விட்டதை முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் வரவேற்றுள்ளார்.
அந்த தைரியமான முடிவை எடுத்து தரமான இந்திய அணியை தேர்ந்தெடுத்த அஜித் அகர்கருக்கு 10 மதிப்பெண் கொடுக்கலாம் என்றும் அவர் பாராட்டியுள்ளார். இப்போதைய அணியில் அனைவருமே மேட்ச் வின்னர்களாக இருப்பதால் இந்தியா தொடர்ந்து 2வது முறையாக டி20 உலகக் கோப்பையை வெல்லும் என்று ஹர்பஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி ஹர்பஜன் பேசியது பின்வருமாறு.
“இந்திய அணி நன்றாக இருக்கின்றது. அணியை தேர்ந்தெடுத்ததற்காக அஜித்துக்கு 10க்கு 10 மதிப்பெண்கள் கொடுக்கப்பட வேண்டும் என்று ஏற்கனவே நான் தெரிவித்துள்ளேன். சுப்மன் கில்லுக்காக நான் கொஞ்சம் வருத்தமடைகிறேன். ஆனால் அவருக்கு விரைவில் நிறைய வாய்ப்புகள் கிடைக்கும். தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வீரர்கள் அனைவரும் தங்களது சொந்த வழியில் மேட்ச் வின்னர்களாக உள்ளார்கள்”
இதையும் படிங்க: டி20 வேர்ல்டுகப்ல ஆடலனா என்ன? அடுத்தகட்ட பயணத்தை துவங்கவுள்ள சுப்மன் கில் – விவரம் இதோ
“அதனால் நாம் அடுத்தடுத்த உலகக் கோப்பைகளை வெல்வோம் என்று நம்பலாம். ஏனெனில் அதற்கான அணி நம்மிடம் இருக்கிறது. சூரியகுமார் யாதவ் தற்சமயத்தில் ரன்கள் அடிக்காமல் இருக்கலாம். ஆனால் உலகக்கோப்பையில் அவரைப் போன்ற பெரிய பிளேயர்கள் நெருப்பாக விளையாடுவார்கள். எனவே அவர் பெரிய போட்டியில் மின்னுவார். அபிஷேக் ஷர்மா சொந்த வழியில் போட்டிகளை வென்று கொடுப்பார். ஃபார்மில் இருக்கும் ஹர்திக் பாண்டியா முக்கியமான வீரர். அது மட்டுமின்றி நம்மிடம் வேகத்தில் பும்ரா, அர்ஷ்தீப் உள்ளார்கள்” என்று கூறினார்.