ரவிச்சந்திரன் அஸ்வின் கடந்த 2010 ஆம் ஆண்டு இந்திய அணியில் நுழைந்ததிலிருந்து ஹர்பஜன் சிங்கின் கிரிக்கெட் வாழ்க்கையை சரிய தொடங்கியது. அஸ்வினின் அபார பந்து வீச்சினால் ஹர்பஜன்சிங் முழுவதுமாக ஓரம்கட்டப்பட்டார். கடைசியாக 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணிக்காக ஆடினார்.

தற்போது 38 வயதான ஹர்பஜன்சிங் மீண்டும் இந்திய அணிக்காக ஆட தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் நான் மீண்டும் விளையாடப் போகிறேன் என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஹர்பஜன் சிங் பேசியதாவது :நான் மீண்டும் இந்திய அணிக்காக ஆடுவதற்காக உழைத்து வருகிறேன்.
ஐபிஎல் போட்டிகளில் நன்றாக பந்துவீசும் ஒருவர் சர்வதேச போட்டிகளில் ஆட தகுதியானவர் தான். ஏனென்றால் ஐபிஎல் பேட்ஸ்மேன்கள் எல்லாம் மிகவும் தரம் வாய்ந்த சர்வதேச வீரர்கள் ஆவார்கள், அவர்களுக்கு எதிராக பந்துவீசி அவர்களது விக்கெட்டை வீழ்த்த முடியும் என்றால் சர்வதேச அளவிலும் அப்படி செயல்பட முடியும்.

பெரும்பாலும் பவர்ப்ளே மற்றும் மத்திய ஓவர்களில் நன்றாக பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தி வருகிறேன். கடந்த நான்கு வருடமாக இந்திய அணியில் இடம் இல்லாமல் இருக்கிறேன். ஆனால் நன்றாக பந்துவீசி வருகிறேன். தேர்வுக்குழுவினர் என்னை கண்டுகொள்வதில்லை .மீண்டும் இந்தியாவின் டி20 அணிக்காக ஆட தயாராக இருக்கிறேன் என்று கூறுகிறார் ஹர்பஜன்சிங்.
இந்திய அணிக்காக 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். எப்படி இருந்தாலும் ஒரு சீனியர் வீரரை இந்திய அணி மீண்டும் களத்தில் இறக்குவது பற்றி யோசிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தனது இந்த நிலை குறித்து பேசிய ஹர்பஜன் : இந்திய அணியில் ஒரு கெட்ட பழக்கம் இருக்கிறது யாதெனில் ஒருவீரர் ஒருமுறை சிறப்பாக செயல்பட முடியாமல் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டால் மீண்டும் அணிக்கு திரும்புவது கடினம்.

ஒருமுறை இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டால் மீண்டும் என்னதான் நாம் சிறப்பாக செயல்பட்டாலும் நம்மை திரும்பி கூட பார்க்கமாட்டார்கள். அதனாலே நான் என்னதான் சிறப்பாக செயல்பட்டாலும் தன்னை தேர்வு செய்ய மறுக்கிறார்கள் என்று அவரது வருத்தத்தினை தெரிவித்துள்ளார்.
இந்திய அணியில் பல ஆண்டுகளாக விளையாடி வந்தாலும் தற்போதைய இளம் ரிஸ்ட் ஸ்பின்னர்களின் வருகையால் தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது. இவர் மட்டுமின்றி டெஸ்ட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அஷ்வினுக்கும் இதே நிலைமைதான். என்னதான் டெஸ்ட் போட்டிகளிலும், ஐ.பி.எல் தொடரிலும் சிறப்பாக விளையாடினாலும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அவரை தேர்வு செய்ய இந்திய அணி மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.



