அஷ்வினை அடுத்தமுறை நான் பாக்கும்போது இதை சொல்லியே தீருவேன் – ஹர்பஜன் வெளிப்படை

Harbhajan
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று முடிந்த மூன்றாவது போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் அஸ்வின் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். மேலும் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனைப் படைத்தார். 77 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின் வேகமாக 400 விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்தார்.

Ashwin

- Advertisement -

மேலும் சர்வதேச அளவில் 16 ஆவது வீரராக இந்த சாதனையை செய்யும் அவர் இந்தியா தரப்பில் 4-வது வீரராக இணைந்தார். 400 டெஸ்ட் விக்கெட்டுகளை கடந்த அவர் இன்னும் அனில் கும்ப்ளேவின் 619 விக்கெட்டுகள் என்ற அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய சாதனையை முறியடிப்பார் என்று பலரும் தங்களது கருத்துக்களையும் வாழ்த்துகளையும் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் அஸ்வினின் இந்த சாதனையை பாராட்டியது மட்டுமின்றி அடுத்த முறை அஸ்வினை சந்திக்கும் போது தான் ஒரு வார்த்தை சொல்லி அஸ்வினை அழைக்க வேண்டுமென்றும் ஹர்பஜன் சிங் தற்போது பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : டெஸ்ட் போட்டியில் விளையாட நமது உடல் வலிமை மற்றும் மன உறுதி ஆகிய இரண்டுமே முக்கியம் போட்டியின் போது இவை இரண்டும் நம்மை கடுமையாக சோதிக்கும்.

Ashwin

அப்படி ஒரு சோதனையை கடந்த 400 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளது என்பது சாதாரணமான விஷயம் கிடையாது. அஸ்வின் ஒரு லெஜன்ட், அவர் 400 விக்கெட்டுகளை வீழ்த்தாமல் இருந்திருந்தாலும் அவர் ஒரு லெஜண்ட்தான். ஏனெனில் பலமுறை அவர் இந்திய அணியின் வெற்றிக்காக உறுதுணையாக நின்று இருக்கிறார்.

Ashwin

விராட் கோலி இவரை லெஜண்ட் என்று போட்டி முடிந்ததும் குறிப்பிட்டிருந்தார். நானும் அஸ்வினை அடுத்த முறை பார்க்கும் பொழுது நீங்கள் ஒரு லெஜன்ட் என்று கூறுவேன் என ஹர்பஜன் சிங் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி வரும் மார்ச் மாதம் 4 ஆம் தேதி அதே மைதானத்தில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement