நியூசிலாந்துக்கு எதிராக நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி படு மோசமாக தோல்வி அடைந்தது. 347 ரன்கள் விளாசியும் அதனை தடுத்து காக்க முடியாமல் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இன்னும் இரண்டு போட்டிகள் மீதமிருக்கும் நிலையில் இரண்டாவது போட்டி நாளை சனிக்கிழமை நடைபெற உள்ளது.

முதல் போட்டியின் தோல்விக்கு காரணம் இந்திய அணியின் மோசமான பௌலிங் மட்டுமே. குறிப்பாக குல்தீப் யாதவ் மற்றும் ஷர்துல் தாகூர் ஆகியோர் 80 ரன்களுக்கு மேல் வாரி வழங்கி கொடுத்தனர். இந்நிலையில், நாளை கட்டாய வெற்றியில் களமிறங்கும் இந்திய அணியில் கண்டிப்பாக சாஹல் ஆகியோர் களம் இறங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங்.
இதுகுறித்து அவர் கூறியதாவது : இரண்டாவது போட்டியில் இந்திய அணியில் மாற்றம் தேவை. இந்திய அணி கண்டிப்பாக வெற்றி பெறும் என்ற சூழ்நிலையில் உள்ளது. இருப்பினும் வேகப்பந்து வீச்சை வைத்து நியூசிலாந்து அணியை கட்டுக்குள் வைக்க முடியாது. இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் இருந்தால் சரியாக இருக்கும்.

எனவே நாளைய போட்டியில் சாஹல், குல்தீப் இருவருமே களமிறங்க வேண்டும். ஏனெனில் அப்போதுதான் மிடில் ஓவர்களில் (15-40 ஓவர்கள்) விக்கெட்டுகளை வீழ்த்த முடியும். நியூசிலாந்து அணி வீரர்களின் விக்கெட்டுகளை வீழ்த்தி அவ்வோப்போது அழுத்தத்தை கொடுத்தால் தான் இந்திய அணி வெற்றி பெற முடியும் என்று ஹர்பஜன் கூறியது குறிப்பிடத்தக்கது.



