ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒருநாள் தொடரில் ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்று தொடரை இழந்தது. இதையடுத்து நடைபெற்ற டி20 தொடரில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு முதல் இரண்டு போட்டிகளில் வென்று தொடரை வென்றது. டி20 தொடரை இந்திய அணி வெல்வதற்கு தமிழகத்தைச் சேர்ந்த தங்கராஜ் நடராஜனின் பந்துவீச்சு தான் முக்கிய காரணமாக அமைந்திருந்தது. இந்த டி20 தொடரின் 3 போட்டிகளிலும் இடம்பெற்றிருந்த நடராஜன் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதையடுத்து ஹர்திக் பாண்டியாவின் பேட்டிங்கும் சிறப்பாக இருந்தது.
இருப்பினும் இந்திய அணியில் மீண்டும் மிடில் ஆர்டர் பிரச்சினை ஏற்பட்டது. 4வது இடத்திற்கு ஐபிஎல் தொடரில் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்த சஞ்சு சாம்சன் களமிறக்கப்பட்டார். ஆனால் சஞ்சு சாம்சன் தனக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பினை சரியாக பயன்படுத்திக்கொள்ள தவறிவிட்டார். இவர் தனது முதல் டி20 போட்டியில் 15 பந்துகளில் 23 ரன்கள் மட்டுமே எடுத்து விக்கெட்டை இழந்தார்.
இதைத் தொடர்ந்து இரண்டாவது போட்டியில் 10 பந்துகளில் 15 ரன்கள் மட்டுமே எடுக்க, மூன்றாவது போட்டியில் 9 பந்துகளில் 10 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இப்படி இந்த தொடர் முழுவதுமே தொடர்ச்சியான பொறுப்பற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவரின் இந்த மோசமான ஆட்டத்தின் காரணமாக அவர் தற்போது விமர்சனம் எழுந்துள்ளது. மேலும் பல்வேறு கிரிக்கெட் விமர்சகர்களும் அவரது ஆட்டத்தை கண்டு கடிந்துள்ளனர்.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன்சிங் சஞ்சு சாம்சன் தனக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பை வீணடிப்பதாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்திய அணியில் தனக்கு மீண்டும் விளையாடும் வாய்ப்பு கிடைத்தால் தவறை திருத்திக் கொண்டு மீண்டும் தன்னை நிரூபிக்கும் வகையில் செயல்பட வேண்டும். அதேபோல் விராட் கோலி, ஷிகர் தவான் போன்ற வீரர்களிடமிருந்து கற்றுக் செயல்படுமாறு கூறியுள்ளார்.
இல்லையென்றால் இந்திய அணியில் விளையாடுவதற்கு பல வீரர்கள் காத்துக் கிடக்கின்றனர். குறிப்பாக இசான் கிசான், சூர்யகுமார் யாதவ் மற்றும் ரிஷப் பண்ட் போன்ற வீரர்கள் வாய்ப்பு கிடைக்காமல் வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர் என்று ஹர்பஜன் சிங் சஞ்சு சாம்சனுக்கு எச்சரிக்கை செய்துள்ளார். இதே கருத்தை இந்திய அணியின் முன்னாள் வீரரான முஹமது கைப்பும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.