தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் 25 வருடங்கள் கழித்து இந்தியா சொந்த மண்ணில் படுதோல்வியை சந்தித்தது. கடந்த வருடம் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரிலும் வரலாறு காணாத ஒய்ட்வாஷ் தோல்வியை சந்தித்தது. அதனால் சொந்த மண்ணில் எப்படி விளையாட வேண்டும் என்பதை இந்திய அணி மறந்து விட்டார்களா? என்று ரசிகர்கள் வேதனையை வெளிப்படுத்துகின்றனர்.
இந்நிலையில் இந்திய அணியின் இந்தத் தோல்விக்கு ஒருதலைப்பட்சமாக வெல்ல வேண்டும் என்ற ஆசையில் அமைக்கப்படும் பிட்ச்களே காரணம் என்று ஹர்பஜன் சிங் விமர்சித்துள்ளார். குறிப்பாக கொல்கத்தாவில் இருந்ததைப் போன்ற பிட்ச்சில் யார் வெல்வார்கள் என்பது யாருக்குமே தெரியாது என்று அவர் கூறியுள்ளார். அதில் தரமான வீரர்களாலும் ரன்கள் குவிக்க முடியாது என்றும் ஹர்பஜன் தெரிவித்துள்ளார்.
பிட்ச்சை மாத்துங்க:
அதனாலேயே விராட் கோலி, அஜிங்க்ய ரஹானே, புஜாரா ஆகியோருடைய பேட்டிங் சராசரி குறைந்ததாகவும் ஹர்பஜன் தெரிவித்துள்ளார். எனவே இந்திய அணி மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்ப கௌகாத்தி போல 5 நாட்கள் செல்லக்கூடிய பிட்ச்களை அமைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி ஹர்பஜன் பேசியது பின்வருமாறு. “நமக்கு 5 நாட்கள் எப்படி விளையாட வேண்டும் என்பது தெரியவில்லை”
“இப்போதெல்லாம் நாம் பெரும்பாலும் 2 – 3 நாட்களில் முடியக்கூடிய பிட்ச்களில் விளையாடுகிறோம். 2011/12க்குப்பின் அது போன்ற போட்டிகள் நிறைய நடந்துள்ளன. சில போட்டிகள் மட்டுமே 5வது நாள் வரை சென்றுள்ளது. இது போன்ற பிட்ச்கள் முந்தைய காலங்களில் இல்லை. அதுவே நம்முடைய விராட் கோலி, புஜாரா, ரகானே போன்றவர்களின் சராசரியை 50லிருந்து 35 – 40க்கு குறைத்தது. அந்த பிட்ச்களில் உங்களால் வேகமாக அல்லது மெதுவாக விளையாட முடியாது”
ஹர்பஜன் அறிவுரை:
“அதில் பேட்ஸ்மேன்களுக்கு எந்த உதவியும் கிடைக்காது. நம்முடைய முந்தைய பேட்ஸ்மேன்கள் 5 நாட்களும் கிரிக்கெட்டை விளையாட தெரிந்ததாலேயே சிறந்தவர்களாக விளங்கினர். டெஸ்ட் கிரிக்கெட்டில் அசத்துவதற்கு உங்களிடம் கடின உழைப்பு, கட்டுப்பாடு, உறுதி தேவை. அது தற்போது இல்லை என்று எனக்குத் தோன்றுகிறது. 2 – 3 நாட்களில் முடியும் போட்டிகளால் ரசிகர்கள் மற்றும் ஒளிபரப்பு நிறுவனங்களும் பாதிக்கப்படுகின்றார்கள்”
இதையும் படிங்க: டெஸ்ட் போட்டிகளில் கே.எல் ராகுலின் இடத்திற்கு ஆபத்து இருக்கு.. காரணத்தை கூறிய – ராபின் உத்தப்பா
“நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு லாட்டரி போல பிட்ச்கள் கிடைத்தன. அதே சமயம் கௌகாத்தியில் தென்னாப்பிரிக்கா 489 அடித்த பிட்ச்சில் நீங்கள் 201க்கு ஆல் அவுட்டானீர்கள். அதற்கு பிட்ச்சில் சுழல் இருந்திருக்கலாம் என்று நீங்கள் சொல்லலாம். ஆனால் அன்று வேகப்பந்து வீச்சாளரான மார்கோ யான்சென் தான் 6 விக்கெட்டுகளை எடுத்தார். பின்னர் தென்னாப்பிரிக்கா 260 அடித்த பிட்ச்சில் நீஙகள் 140க்கு அவுட்டானீர்கள். எனவே அங்கே பிட்ச் மேலே தவறில்லை. பெரிய தவறு உங்களது பொறுமையில் இருக்கிறது” என்று கூறினார்.



