நியூசிலாந்துக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் முதல் முறையாக இந்தியா ஒரு டெஸ்ட் தொடரில் தோற்றது. அது போக கடந்த 12 வருடங்களுக்குப் பின் தங்களுடைய சொந்த மண்ணில் இந்தியா ஒரு டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் அவமான தோல்வியை பதிவு செய்துள்ளது. இதற்கு சுழலுக்கு சாதகமான புனே பிட்ச்சில் இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடியது முக்கிய காரணமானது.
முன்னதாக 2017 புனே டெஸ்ட், 2023 இந்தூர் டெஸ்ட், 2023 உலகக் கோப்பை ஃபைனலில் தங்களுடைய பலமான ஸ்பின்னர்களை வைத்து இந்தியா வெற்றி பெற முயற்சி செய்ததாக முன்னாள் ஹர்பஜன் சிங் ஏற்கனவே விமர்சித்திருந்தார். கடைசியில் அது இந்தியாவுக்கே தோல்வியை கொடுத்ததாகவும் அவர் கூறியிருந்தார். இந்நிலையில் சுழலுக்கு சாதகமான பிட்ச்சை அமைத்ததே நியூசிலாந்திடமும் தோற்க காரணம் என்று ஹர்பஜன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
சொல்லியும் கேட்கல:
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “கடந்த தசாப்தம் முழுவதும் நாம் பெரும்பாலும் டாஸ் வென்று முதலில் 300 ரன்கள் அடித்து வெற்றி பெறலாம் என்ற நோக்கத்துடன் சுழலுக்கு சாதகமான பிட்ச்சில் விளையாடினோம். ஆனால் பேட்டிங்கில் சொதப்பினால் நாமும் அதை திருப்பி பெறுவோம் என்பது நமக்குத் தெரியவில்லை. அதற்கு நல்ல வீரரான அஜிங்க்ய ரஹானே நல்ல எடுத்துக்காட்டு”
“இது போன்ற பிட்ச் காரணமாகவே அவருடைய கேரியர் பாதித்தது. அதற்கு இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் அவர்களுக்கு சாதகமான பிட்ச்சை உருவாக்குகிறார்களே? என்று நாம் பதில் சொல்கிறோம். ஆண் நீங்கள் பேட்டிங் செய்ய முடியாத அளவுக்கு வெளிநாடுகளில் பிட்ச் இருப்பதில்லை. ஆனால் இங்கே எதில் பந்து திரும்பும் எதில் நேராக வரும் என்பதை உங்களுக்குத் தெரியவில்லை”
பிட்ச் தான் காரணம்:
“விராட் கோலி கூட கடந்த சில வருடங்களாக வெளிநாடுகளில் அசத்துகிறார். ஆனால் சொந்த மண்ணில் அசத்த முடிவதில்லை. தற்போது நீங்கள் சொந்த மண்ணில் இது போன்ற பிட்ச்சில் 3 தோல்விகளை சந்தித்துள்ளீர்கள். இருப்பினும் நல்ல வீரர்கள் என்று தேர்வாளர்கள் உங்களை வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்கின்றனர். அப்போது போதுமான ரன்களை குவிக்காமல் சென்றால் வெளிநாடுகளில் அசத்த முடியுமா என்ற சந்தேகம் உங்களுக்குள் எழும்”
“அதனால் வெளிநாடுகளில் நீங்கள் சில போட்டிகளில் சொதப்பும் போது உடனடியாக அணியிலிருந்து நீக்கப்படுவீர்கள். இது நல்லதா? சொந்த மண்ணில் தொடர்ந்து வெற்றி பெற்று விட்டு தோற்கும் போது கண்டிப்பாக விமர்சனங்கள் வரும். புனேவில் முதல் மணி நேரத்தில் இருந்தே பந்து சுழலக்கூடிய செயற்கையான சூழ்நிலைகள் உருவாக்கப்பட்டிருந்தது. அதில் நியூசிலாந்து சிறப்பாக விளையாடி வென்றதற்கு பாராட்டுக்கள்”
இதையும் படிங்க: எமெர்ஜிங் ஆசிய கோப்பை: 134 ரன்ஸ்.. ஃபைனலில் இலங்கையை வீழ்த்திய ஆப்கானிஸ்தான்.. வரலாற்று வெற்றி
“இப்படி பிட்ச்களை அமைத்தால் ஃபிளாட்டான பிட்ச்சில் பந்தை திருப்பக்கூடிய சுந்தர், அக்சர் படேல் வெற்றியை பெற்றுக் கொடுப்பார்கள். அங்கே அஸ்வின், ஜடேஜா போன்ற தரமானவர்கள் உங்களுக்கு தேவைப்படாது. சில வருடங்களுக்கு முன் சென்னையில் ஜோ ரூட் 5 விக்கெட்டுகள் எடுத்தார். அதே போல வருண் சக்கரவர்த்தியை கொண்டு வந்தால் இது போன்ற பிட்ச்சில் எதிரணியை வீழ்த்துவார்” என்று கூறினார்.



