இந்தியாவின் நட்சத்திர முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி வரலாற்றில் இந்தியா கண்டெடுத்த மகத்தான கேப்டன்களில் முக்கியமானவராக பார்க்கப்படுகிறார். ஏனெனில் 2007இல் தம்மிடம் வழங்கப்பட்ட அனுபவமில்லாத கேப்டன்ஷிப் பொறுப்பில் அனைத்து வீரர்களையும் சிறப்பாக வழிநடத்தி பைனலில் பரம எதிரியான பாகிஸ்தானை தோற்கடித்து வரலாற்றின் முதல் டி20 உலகக் கோப்பையை வென்று கொடுத்த அவர் சொந்த மண்ணில் நடைபெற்ற 2011 உலகக் கோப்பையிலும் அணியை சிறப்பாக வழிநடத்தி இறுதிப்போட்டியில் 91* ரன்கள் விளாசி 28 வருடங்கள் கழித்து இந்தியா கோப்பையை முத்தமிட முக்கிய பங்காற்றினார். அதேபோல் தாம் உருவாக்கிய விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற இளம் வீரர்களை வைத்து 2013இல் இங்கிலாந்து மண்ணில் நடந்த சாம்பியன்ஸ் டிராபியை வென்று காட்டிய அவர் வரலாற்றில் 3 விதமான உலகக் கோப்பைகளை வென்ற ஒரே கேப்டன் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார்.

அதிரடியான பேட்டிங், கடைசி நேரத்தில் வெற்றிகரமாக போட்டியை முடிக்கும் பினிஷர், மின்னல் வேகத்தில் விக்கெட் கீப்பிங் செய்யும் கீப்பர், தரமான இளம் வீரர்களை கண்டறிந்து வாய்ப்பளித்து வளர்க்கும் கேப்டன் என பல பரிணாமங்களைக் கொண்டுள்ள எம்எஸ் தோனி களத்தில் நிறைய தருணங்களில் தனது வித்தியாசமான முடிவுகளாலும் சாதுரியத்தாலும் எதிரணிகளை மண்ணைக் கவ்வ வைத்துள்ளார். அதிலும் எதிரணி பேட்ஸ்மேன்கள் இந்திய பவுலர்களை அதிரடியாக அடிக்கும் போது அவர்களது பக்கத்தில் சென்று எப்படி பந்துவீச வேண்டும் என்று சரியான ஆலோசனைகளை வழங்கும் தோனி பந்து வீச்சாளர்களின் கேப்டனாக போற்றப்படுகிறார்.
2011 உலககோப்பை:
அந்த வகையில் 2011 உலகக் கோப்பையில் என்னதான் கங்குலி உருவாக்கிய வீரர்களை வைத்து சாம்பியன் பட்டம் வென்றாலும் அந்த தொடரில் எம்எஸ் தோனியின் மிகச்சிறந்த கேப்டன்ஷிப் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியது என்பதில் சந்தேகமில்லை. அதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக மொஹாலியில் நடைபெற்ற பரம எதிரியான பாகிஸ்தானுக்கு எதிரான மாபெரும் அரையிறுதிப் போட்டியில் நிகழ்ந்த ஒரு தருணத்தை முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங் பகிர்ந்துள்ளார்.

இரு நாட்டு ரசிகர்கள் மற்றும் பிரதமருக்கு முன்னிலையில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா சச்சின் 85 ரன்கள் எடுக்க 260 ரன்கள் சேர்த்தது. அதை துரத்திய பாகிஸ்தான் 106/4 என்ற நிலையில் தடுமாறியபோது மிடில் ஆர்டரில் ஜோடி சேர்ந்த கேப்டன் மிஸ்பா – உமர் அக்மல் ஆகியோர் அதிரடியாக ரன்களை சேர்க்கத் தொடங்கினார். குறிப்பாக 1 பவுண்டரி 2 சிக்சரை பறக்கவிட்ட உமர் அக்மல் 29 (24) ரன்களை விளாசி இந்தியாவுக்கு அச்சுறுத்தல் கொடுக்கும் வகையில் பேட்டிங் செய்து கொண்டிருந்தார்.
தோனியின் ஆலோசனை:
அப்போது ஏற்கனவே 5 ஓவர்களை வீசி ரன்களை வாரி வழங்கிக் கொண்டிருந்த தம்மிடம் அவரை அவுட் செய்ய அரௌண்ட் தி விக்கெட் திசையிலிருந்து பந்து வீசுமாறு தோனி ஆலோசனை வழங்கியதாக தெரிவிக்கும் ஹர்பஜன் சிங் அதனால் அடுத்த பந்திலேயே உமர் அக்மலை அவுட் செய்ததாக வியப்புடன் கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “அது நான் சுமாராக பந்து வீசிய ஒருசில போட்டிகளில் ஒன்றாக உணர்ந்தேன். அப்போட்டியில் நான் முதல் 5 ஓவர்களில் 26 – 27 ரன்களை வழங்கியிருந்தேன். அப்போது போட்டியில் தண்ணீர் இடைவெளி வந்தபோது “பஜ்ஜு பா, நீங்கள் அரௌண்ட் தி விக்கெட் திசையிலிருந்து போடுங்கள்” எனக்கூறிய தோனி என்னை பந்து வீச அழைத்தார்”

“அந்த தருணத்தில் உமர் மற்றும் மிஸ்பா ஆகியோர் மிகச் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களது பார்ட்னர்ஷிப் மிகவும் ஆபத்தாக மாறியது. அப்போது பந்துவீச வந்த நான் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று கடவுளை நினைத்துக் கொண்டேன். நல்லவேளையாக கடவுள் எனது பிரார்த்தனைக்கு செவிசாய்த்து போல் அரௌண்ட் தி விக்கெட் திசையிலிருந்து வந்து அந்த ஓவரை வீசிய முதல் பந்திலேயே நான் அக்மலை க்ளீன் போல்ட்க்கினேன். அவர் என்னுடைய பந்தை முழுவதுமாக தவற விட்டுவிட்டார்” என்று கூறினார்.
இறுதியில் அப்போட்டியில் பாகிஸ்தானை 231 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா 29 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பின்னர் வான்கடே மைதானத்தில் நடந்த மாபெரும் இறுதி போட்டியில் இலங்கைக்கு எதிராக யாருமே மறக்க முடியாத வகையில் அபாரமாக விளையாடிய இந்தியா சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் கோப்பையை முத்தமிட்டு வரலாறு படைத்தது.



