2022 ஆசிய கோப்பையில் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய இந்தியா இதர அணிகளை காட்டிலும் பலமான அணியாக திகழ்வதால் எளிதாக கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை தக்க வைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்றார்போல் லீக் சுற்றில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று அசத்தலான தொடக்கத்தை பெற்ற இந்தியா அழுத்தமான சூப்பர் 4 சுற்றில் வழக்கம்போல வேலையை காண்பித்து அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்துள்ளது. இதனால் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான கடைசி போட்டியில் வென்றாலும் கூட பைனலுக்கு செல்ல முடியாமல் வீட்டுக்குத் திரும்புவது 99% உறுதியாகியுள்ளது.
இந்த தோல்விக்கு நிறைய வீரர்கள் சுமாராக செயல்பட்டது காரணமாக பார்க்கப்படும் நிலையில் துணை கேப்டனாக விளையாடும் கேஎல் ராகுல் தொடக்க வீரராக களமிறங்கிய அதிரடியாக விளையாடாமல் பெரும்பாலும் சொற்ப ரன்களில் அவுட்டாகி டெஸ்ட் இன்னிங்ஸ் விளையாடியது முக்கிய காரணமாக அமைந்தது. 2014இல் அறிமுகமாகி ஆரம்ப காலங்களில் ரொம்பவே தடுமாறிய இவர் 2019 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வலியுடன் சதமடித்து வெற்றி பெற வைத்து காயத்தால் வெளியேறிய ஷிகர் தவானுக்கு பதில் அவருடைய இடத்தில் வாய்ப்பை பெற்று அந்த இடத்தை நிரந்தரமாக தனதாக்கும் அளவுக்கு அவரை விட அற்புதமாக செயல்பட்டார்.
அவமதிக்கப்படும் தவான்:
அதேபோல் ஐபிஎல் தொடரிலும் அதிரடியாக செயல்பட்டு 400, 500 ரன்களை அசால்டாக குவித்த அவருடைய மார்க்கெட் 17 கோடிகளை எட்டியது. அதனால் அந்த மார்க்கெட்டை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக சமீப காலங்களில் அணியின் வெற்றியை பற்றி கவலைப்படாமல் பெரிய ரன்களை எடுக்க வேண்டும் என்ற சுயநல எண்ணத்துடன் விளையாடும் இவர் குறைவான ஸ்டிரைக் ரேட்டில் ரன்களை குவிப்பது தோல்வியை பரிசளிக்கிறது.
குறிப்பாக 2022 ஐபிஎல் தொடருக்கு பின் காயமடைந்து 2 மாதங்கள் அணியிலிருந்து விலகிய இவரை ஜிம்பாப்வே தொடரில் கேப்டனாக அறிவிக்கப்பட்ட தவானை அவமதித்தாலும் பரவாயில்லை என்று கடைசி நேரத்தில் கேப்டனாக தேர்வுக்குழு அறிவித்தது. அப்படி கம்பேக் கொடுத்து இந்த ஆசிய கோப்பையில் கத்துக்குட்டியான ஹாங்காங்க்கு எதிராக 39 பந்துகளில் 36 ரன்கள் எடுத்ததே அவருடைய சுயநல எண்ணத்துக்கு எடுத்துக்காட்டாகும்.
அதனால் கடுப்பான ரசிகர்கள் இவருக்கு பதிலாக 2013 சாம்பியன்ஸ் டிராபி உட்பட நிறைய சரித்திர வெற்றிகளை பெற்றுக்கொடுத்து மிஸ்டர் ஐசிசி என்ற பெயரெடுத்த ஷிகர் தவானுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். அந்த வரிசையில் இணைந்துள்ள முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங் தவானை மீண்டும் இந்தியா டி20 அணியில் கொண்டு வருமாறு வெளிப்படையான கோரிக்கை வைத்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.
“ஷிகர் தவான் மற்றும் இஷான் கிஷனை மீண்டும் கொண்டு வாருங்கள். அதில் தொடர்ச்சியாக ரன்களை குவிக்கும் திறமை பெற்றுள்ள ஷிகர் தவான் தற்போதைய இந்திய அணிக்கு தேவைப்படுகிறார். ஐபிஎல் தொடரில் அவர் ஒவ்வொரு வருடமும் நல்ல ரன்களை அடித்து வருகிறார். எனவே ஐபிஎல் தொடரில் நல்ல ரன்கள் அடித்த வீரர்களை மீண்டும் கொண்டு வாருங்கள் என்பதே என்னுடைய கருத்தாகும். ரோஹித், விராட், ராகுல் ஆகியோர் நல்ல வீரர்கள் என்றாலும் டி20 கிரிக்கெட்டில் யார் சிறந்தவர் என்பதை நாம் பார்க்க வேண்டும்” என்று கூறினார்.
அவர் கூறுவது போல் 2016 முதல் 501, 479, 497, 521, 618, 587, 460 என தொடர்ச்சியாக ஒவ்வொரு வருடமும் ஐபிஎல் தொடரில் 400க்கும் மேற்பட்ட ரன்களை எடுத்து வரும் தவானை 35 வயதைக் தாண்டி விட்டார் என்ற ஒரே காரணத்துக்காக டி20 அணியிலிருந்து அதிலும் ராகுல் போன்றவருக்காக தேர்வுக்குழு கழற்றி விட்டுள்ளது. எனவே வயதை பார்க்காமல் திறமையை பார்த்து அவருக்கு வாய்ப்பு கொடுப்பது மிகச் சிறந்த முடிவாக இருக்கும். அதேபோல் சம்பந்தமின்றி இந்தத் தொடரில் தமிழகத்தின் தினேஷ் கார்த்திக் பாதியில் நீக்கப்பட்டதற்கு ஹர்பஜன் சிங் எதிர்ப்பு தெரிவித்துப் பேசியது பின்வருமாறு.
“தினேஷ் கார்த்திக் நீக்கப்படும் அளவுக்கு என்ன தவறு செய்தார்? அவர் 37 வயதிலும் சிறப்பான செயல்பாடுகளால் அணிக்கு வந்துள்ளார். அத்துடன் வெஸ்ட் இண்டீஸ் போன்ற தொடர்களில் அவர் சிறப்பாக செயல்பட்டார். மேலும் தற்போது அவர் உச்சகட்ட பார்மில் இருக்கும்போது திடீரென்று ஒரு போட்டியில் மட்டும் விளையாடிய நிலையில் ஆசிய கோப்பையில் நீக்கப்பட்டுள்ளார். அந்த வகையில் அவர் எதற்காக நீக்கப் பட்டார் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை” என்று கூறினார்.



