ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. அந்தத் தொடரின் முதல் போட்டியில் 295 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா ஆரம்பத்திலேயே முன்னிலை வகிக்கிறது. முன்னதாக பெர்த் நகரில் நடைபெற்ற முதல் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவருமே விளையாடாதது இந்திய ரசிகர்களுக்கு ஆச்சரியமாக அமைந்தது.
ஏனெனில் ஜோடியாக 850க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை எடுத்துள்ள அவர்கள் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் உலகின் டாப் 2 ஆல் ரவுண்டர்களாக ஜொலித்து வருகிறார்கள். இருப்பினும் பெர்த் மைதானம் கொஞ்சம் வேகம் மற்றும் எக்ஸ்ட்ரா பவுன்ஸ் ஆகியவற்றுக்கு சாதகமாக இருந்தது. அதனால் அங்கே ஒரு ஸ்பின்னரை மட்டும் விளையாட விரும்பிய இந்திய அணி வாஷிங்டன் சுந்தரை தேர்ந்தெடுத்து வெற்றியும் கண்டது.
வயதாகும் அஸ்வின்:
இந்நிலையில் அஸ்வின் 38 வயதை கடந்து விட்டார் என்று முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். அதனால் வருங்காலத்திற்கு தேவையான ஆஃப் ஸ்பின்னரை உருவாக்குவதற்காகவே வாசிங்டன் சுந்தரை புதிய பயிற்சியாளர் கௌதம் கம்பீர் கொண்டு வந்துள்ளதாக ஹர்பஜன் கூறியுள்ளார். அதனாலேயே சமீபத்திய நியூசிலாந்து தொடரில் வாஷிங்டன் சுந்தர் விளையாடியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இது அணி நிர்வாகம் மற்றும் தேர்வாளர்களின் நீண்ட கால திட்டம் என்று நினைக்கிறேன். ரவிச்சந்திரன் அஸ்வின் இந்தியாவுக்காக நிறைய விக்கெட்டுகளை எடுத்து மிகவும் சிறப்பாக விளையாடியுள்ளார். ஆனால் தற்போது 38 வயதாகும் அவர் விரைவில் ஓய்வு பெறும் சூழலில் இருக்கிறார்”
வருங்கால திட்டம்:
“அதனாலேயே ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வு பெறும் போது வருங்காலத்தில் அசத்துவதற்காக வாஷிங்டன் சுந்தரை தற்போது இந்திய அணி வைத்துள்ளது. சுந்தரை வைத்து நாம் தயாராக வேண்டும் என்று இந்திய அணி கருதுகிறது. அதனாலேயே அவர்கள் இந்த வழியில் வேலை செய்கிறார்கள் என்று நினைக்கிறேன்” எனக் கூறினார்.
இதையும் படிங்க: இந்தியாவில் அஸ்வின் – ஜடேஜாவுக்கு மாற்று ஜோடியே இல்ல.. 2025 இங்கிலாந்தில் சுந்தர் ஜோடியை உருவாக்கலாம்.. புஜாரா
அவர் கூறுவது போல 38 கடந்து விட்ட அஸ்வின் இன்னும் ஓரிரு வருடங்களில் ஓய்வு பெற வாய்ப்புள்ளது. அப்படி அஸ்வின் ஓய்வு அவருடைய இடத்தை நிரப்புவதற்கு சரியான வீரர் இல்லையென்றால் இந்திய அணிக்கு பின்னடைவு ஏற்படும். அதன் காரணமாகவே இப்போதிலிருந்தே வாஷிங்டன் சுந்தர் போன்ற இளம் வீரரை இந்திய அணி வளர்க்க துவங்கியுள்ளது. அந்த வீரர் மற்றொரு தமிழக வீரராக இருப்பது தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான விஷயமாகும்.



