இந்திய கிரிக்கெட் அணி தற்போது அழுத்தத்தையும் விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது. புதிய பயிற்சியாளர் கௌதம் கம்பீர் வந்தது முதல் இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் அடுத்தடுத்த படுதோல்விகளை சந்தித்து வருகிறது. குறிப்பாக நியூசிலாந்துக்கு எதிராக வரலாற்றிலேயே முதல் முறையாக சொந்த மண்ணில் முழுமையான ஒயிட் வாஸ் தோல்வியை சந்தித்த இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரிலும் தோற்றது.
அதன் காரணமாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முதல் முறையாக தகுதி பெறாமல் இந்தியா வெளியேறியது. அந்தத் தொடரில் இந்திய அணியின் ஆட்டத்தை பார்த்த பயிற்சியாளர் கெளதம் கம்பீர் வீரர்களை கோபமாக திட்டியதாக செய்திகள் வெளியாகின. அதே போல ரோஹித் சர்மா விலகினால் பும்ராவுக்கு பதிலாக கேப்டனாக செயல்பட ஒரு சீனியர் வீரர் விரும்புவதாகவும் செய்திகள் தெரிவித்தன.
வீட்டுக்கு வீடு வாசப்படி:
அந்த வகையில் இந்திய அணிகள் விரிசல் இருப்பதாக கடந்த ஒரு மாதமாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அந்த தகவல்களை தமக்கு வாய்ப்பு கொடுக்காத கோபத்தில் சர்பராஸ் கான் தான் கசிய விடுவதாகவும் தெரிய வருகின்றன. இந்நிலையில் கிரேட் சேப்பல் காலத்தில் இருந்தது போல தற்போதைய இந்திய அணியில் ஒற்றுமையின்மை இருப்பதாக ஹர்பஜன் சிங் கவலை தெரிவித்துள்ளார்.
மேலும் வீட்டுக்கு வீடு வாசப்படி என்பது போல் சண்டைகள் இருந்தாலும் அதை பேசி தீர்த்துக்கொள்ள வேண்டுமே தவிர வெளியே கசிய விடக்கூடாது என்று ஹர்பஜன் அறிவுறுத்தியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “பிரச்சனைகளை உங்களுக்குள்ளேயே தீர்த்துக் கொள்ளுங்கள். ஏன் அங்கே நாடகம் இருக்கிறது? ஒவ்வொரு வீட்டிலும் சண்டைகள் இருக்கும். ஆனால் அது வெளியே வரக்கூடாது”
கிரேக் சேப்பல் காலம்:
“கடந்த 6 – 8 மாதங்களாக நாம் பல விஷயங்களை கேள்விப்படுகிறோம். அந்த தகவல்கள் சர்பராஸ் கானிடம் இருந்து வரவில்லை. பயிற்சியாளரிடம் இருந்து வருகிறது என்று அஜித் அகர்கர் சொன்னால் என்ன நடக்கும்? எனவே ஒருவரை ஒருவர் குறை சொல்வதில் அர்த்தமில்லை. அணிக்குள் புதிதாக வந்துள்ள கௌதம் கம்பீர் வீரர்களைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்”
இதையும் படிங்க: கம்பீரை 5 வருஷம் பாக்காம பேசாதீங்க.. ரோஹித் மாதிரி யாரு 6 கோப்பை ஜெயிச்சும் இதை செஞ்சாங்க? யுவி ஆதரவு
“வீரர்கள் அவரைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். கெமிஸ்ட்ரி இல்லாமல் வெற்றி வேலையாகாது. 2006 – 2008 காலகட்டங்களில் கிரேட் சேப்பல் பயிற்சியாளராக இருந்த போது மொத்த இந்திய அணியும் உடைந்ததை நான் பார்த்துட்டேன். வீரர்கள் ஒருவரை ஒருவர் குறை சொன்னதாலேயே அது நடைபெற்றது. அது போன்ற விஷயங்கள் அனைத்தையும் தற்போது எப்படி ஊடகங்கள் தெரிந்து கொள்கின்றன? பிசிசிஐ மீட்டிங் முதல் தேர்வு வரை பல்வேறு விஷயங்கள் எப்படி கசிகின்றன?” என்று கூறினார்.



