ஐசிசி 2025 சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. வரலாற்றிலேயே முதல் முறையாக தங்களுடைய நாட்டில் நடைபெறும் அந்தத் தொடரை வெற்றிகரமாக நடத்துவதற்கு பாகிஸ்தான் தயாராகி வருகிறது. இருப்பினும் அந்தத் தொடரில் பாகிஸ்தானுக்கு சென்று இந்தியா விளையாடுவதற்கு வாய்ப்பு மிகவும் குறைவாக காணப்படுகிறது.
ஏனெனில் 2008க்குப்பின் எல்லைப் பிரச்சினை காரணமாக அந்நாட்டிற்கு செல்வதை நிறுத்தியுள்ள இந்தியா ஆசிய மற்றும் ஐசிசி தொடர்களில் மட்டுமே பாகிஸ்தானுடன் மோதி வருகிறது. இருப்பினும் 2023 ஆசியக் கோப்பை பாகிஸ்தான் மண்ணில் நடைபெற்றது. ஆனால் பாகிஸ்தானுக்கு சென்று அந்தத் தொடரில் விளையாடாத இந்தியா தங்களுடைய போட்டிகளை இலங்கையில் விளையாடி வெற்றி கண்டது.
ஹர்பஜன் பதிலடி:
அதே போல இம்முறையும் தங்களுடைய சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளை துபாய் அல்லது இலங்கையில் நடத்துங்கள் என ஐசிசிக்கு பிசிசிஐ’க்கு கோரிக்கை வைத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இருப்பினும் தற்போது வசதிகளும் பாதுகாப்பும் பன்மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதால் அரசியலையும் விளையாட்டையும் ஒன்றாகக் கலக்காமல் பாகிஸ்தானுக்கு வந்து இந்தியா விளையாட வேண்டுமென ஜாம்பவான் வாசிம் அக்ரம் கேட்டுக் கொண்டார்.
அதே போல எங்கள் நாட்டில் நிறைய ரசிகர்கள் இருப்பதால் பாகிஸ்தானுக்கு வந்து விராட் கோலி விளையாடினால் இந்தியாவே மறந்து விடுவார் என்று ஷாஹித் அப்ரிடி அழைப்பு விடுத்தார். அது போக சோயப் மாலிக், யூனிஸ் கான் உள்ளிட்ட நிறைய முன்னாள் பாகிஸ்தான் கேப்டன்களும் வீரர்களும் தாங்கள் நாட்டுக்கு வந்து விளையாடுமாறு இந்தியாவுக்கு அழைப்பு விடுத்து வருகின்றனர். இந்நிலையில் பாகிஸ்தானில் தினம்தோறும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான சம்பவங்கள் நடப்பதாக ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
எனவே வீரர்களின் பாதுகாப்பை விட இந்தியாவுக்கு வேறு எதுவும் முக்கியமில்லை என்று அவர் பாகிஸ்தான் முன்னாள் வீரர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். இது பற்றி ஹர்பஜன் பேசியது பின்வருமாறு. “பாகிஸ்தானுக்கு எதற்காக இந்திய அணி செல்ல வேண்டும்? பாகிஸ்தானில் பாதுகாப்புக்கு கவலையளிக்கக் கூடிய விஷயங்கள் இருக்கின்றன”
இதையும் படிங்க: நான் சொல்லியும் கேக்காம சேவாக் அதை செய்ஞ்சாரு.. சேவாக் செய்த சேட்டை குறித்து பேசிய – சவுரவ் கங்குலி
“பாகிஸ்தானில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நிகழ்வுகள் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் நடைபெற்று வருகிறது. எனவே இந்திய அணி அங்கே செல்வது பாதுகாப்பாக இருக்கும் என்று நான் கருதவில்லை. அதனால் பிசிசிஐ தற்போது எடுத்திருக்கும் நிலைப்பாடு மிகவும் சரியானது. நமது வீரர்களின் பாதுகாப்பை விட வேறு எதுவும் முக்கியமில்லை. நான் பிசிசிஐ நிலைப்பாட்டுக்கு ஆதரவாக நிற்கிறேன்” என்று கூறினார்.



