இந்திய கிரிக்கெட் அணி கடைசியாக இலங்கை மண்ணில் டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடியது. அதில் டி20 தொடரில் வெற்றி பெற்ற இந்தியா ஒருநாள் தொடரில் இலங்கைக்கு எதிராக 27 வருடங்கள் கழித்து பரிதாபமாக தோற்றது. அந்த தோல்விக்கு சுழலுக்கு சாதகமான கொழும்பு மைதானத்தில் இலங்கை ஸ்பின்னர்களை இந்திய பேட்ஸ்மேன்கள் நன்றாக எதிர்கொள்ளாதது முக்கிய காரணமானது.
அதனால் இந்திய பேட்ஸ்மேன்கள் ஸ்பின்னர்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை மறந்து விட்டார்களா என்ற விமர்சனங்களும் எழுந்தன. இந்நிலையில் சொந்த மண்ணில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் இரண்டரை நாட்களில் எதிரணியை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக இந்தியா சுழலுக்கு சாதகமான பிட்ச்களை அமைப்பதாக முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் விமர்சித்துள்ளார்.
ஹர்பஜன் விமர்சனம்:
அதனால் தாங்கள் விரிக்கும் வலையில் சில நேரங்களில் தாங்களே இந்தியா விழுந்து விடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனவே தரமான பிட்ச்சில் விளையாடத் துவங்கினால் இந்தியாவை யாராலும் வீழ்த்த முடியாது என்று தெரிவிக்கும் ஹர்பஜன் இது பற்றி பேசியது பின்வருமாறு. “நாம் அதிகமாக சுழலக் கூடிய பிட்ச்களில் விளையாடத் துவங்கியுள்ளோம். அதில் நாம் வெற்றி பெற விரும்புகிறோம். நாம் வென்றோம்”
“ஆனால் நாம் இரண்டரை நாட்களில் வெற்றி பெற விரும்புகிறோம். உண்மையில் 3, 4வது சுழலத் துவங்கும் சாதாரண பிட்ச்களை உருவாக்கி அதில் விளையாடினாலும் நம்மால் வெல்ல முடியும். ஸ்பின்னர்களுக்கு எதிராக நமது பேட்ஸ்மேன்கள் தடுமாறுவதை பற்றி நாம் பேசுவதில்லை. அந்த வகையில் நாம் நம்முடைய பேட்ஸ்மேன்களின் தன்னம்பிக்கையை குறைத்துள்ளோம். ஏனெனில் அது போன்ற பிட்ச்களில் யாராக இருந்தாலும் சுமாராக அவுட்டாகிறார்கள்”
தரமான பிட்ச்:
“இதை சரி செய்ய இப்போதும் நமக்கு வாய்ப்பு இருக்கிறது. ஒருவேளை நாம் நல்ல பிட்ச்களை உருவாக்கி விளையாடினால் இந்தியாவை யாராலும் தோற்க முடியும் என்று நான் நினைக்கவில்லை. ஏனெனில் நம்மிடம் தரமான வேகப்பந்து வீச்சாளர்களும் ஸ்பின்னர்களும் உள்ளனர். அவர்களால் மூன்றாவது நாளில் இல்லையென்றால் கூட 5வது நாளில் வெற்றியை பெற்றுக் கொடுக்க முடியும்”
இதையும் படிங்க: மகாராஜா டிராபியில் விளையாடிய பிறகு ராகுல் டிராவிட் மகனுக்கு கிடைத்த அதிர்ஷ்டம் – பி.சி.சி.ஐ எடுத்த முடிவு
“மேலும் நல்ல பிட்ச்சில் விளையாடும் போது பேட்ஸ்மேன்கள் நிறைய ரன்கள் குவிப்பார்கள். அதனால் அவர்களுடைய தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். உண்மையில் ஸ்பின்னர்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை நமது பேட்ஸ்மேன்கள் மறக்கவில்லை. ஆனால் சமீபத்திய வருடங்களில் சுழலுக்கு அதிக சாதகமான பிட்ச்களால் இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடுவது கிட்டத்தட்ட அசாத்தியமாகி விட்டது” என்று கூறினார்.



