
இந்திய கிரிக்கெட் வீரர் கேஎல் ராகுல் வெள்ளைப்பந்து அணிகளில் தம்முடைய இடத்தை இழந்து தடுமாறி வருகிறார். அதே போல டெஸ்ட் கிரிக்கெட்டிலும் தடுமாறும் அவருக்கு போட்டியாக சர்பராஸ் கான், துருவ் ஜுரேல் போன்ற இளம் வீரர்கள் வந்து விட்டனர். இருப்பினும் அவருடைய அனுபவத்துக்கு மதிப்பளித்து நடைபெறும் வங்கதேச தொடரில் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பிடித்துக் கொள்ள வேண்டியது ராகுல் பொறுப்பு என்று கேப்டன் ரோஹித் சர்மா கூறியிருந்தார்.
ஆனால் சென்னையில் நடைபெற்ற போட்டியில் அரை சதம் கூட அடிக்காத ராகுல் மீண்டும் ஏமாற்றத்தை கொடுத்தார். அதனால் அடுத்து நடைபெறும் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய தொடர்களில் அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா (சேனா) போன்ற வெளிநாடுகளில் ராகுல் சதங்கள் அடித்த அனுபவத்தைக் கொண்டுள்ளதாக இந்திய வீரர் ஹனுமா விகாரி தெரிவித்துள்ளார்.
எனவே அவரை ஆஸ்திரேலிய மண்ணில் மிடில் ஆர்டரில் விளையாட வைப்பதற்காகவே கேப்டன் ரோஹித் சர்மா தற்போது 6வது இடத்தில் வாய்ப்பு கொடுத்துள்ளதாக விகாரி கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “சென்னை போட்டி ராகுலின் கடைசி போட்டியாக இருக்குமென நான் சொல்ல மாட்டேன். ஏனெனில் பெரிய திரையில் பார்க்கும் போது ராகுல் 6வது இடத்தில் விளையாடுவதாக நான் கருதுகிறேன்”
“இந்திய அணி அதற்காக திட்டம் வைத்துள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் போது நமக்கு அனுபவமிக்கவர் 6வது இடத்தில் தேவை. ஏனெனில் ஆஸ்திரேலியாவில் புதிய பந்தை எதிர்கொண்டாலும் அல்லது விக்கெட்டுகள் சரிந்த போது களமிறங்கினாலும் திருப்பி அடிக்க உங்களுக்கு நல்ல பேட்ஸ்மேன் தேவை. கடந்த காலங்களில் அதை ராகுல் சேனா நாடுகளில் செய்துள்ளார்”
“இந்தியாவை விட சேனா நாடுகளில் அவருடைய புள்ளிவிவரங்கள் சிறப்பாக இருக்கும் என்பது எனக்கு தெரியும். இந்தியா தடுமாறும் போது அல்லது 2வது புதிய பந்தை எதிர்கொள்ளும்போது ஆட்டத்தை முன்னோக்கி எடுத்துச் செல்ல 6வது இடத்தில் அனுபவமிக்கவர் தேவை என்று அணி நிர்வாகம் கருதுகிறார்கள். கண்டிப்பாக ராகுலும் ஆஸ்திரேலிய தொடருக்கு முன்பாக இங்கே ரன்கள் அடிக்க வேண்டும்”
இதையும் படிங்க: ஷமி ஒருபக்கம் இருக்கட்டும்.. ஆஸ்திரேலிய தொடருக்கு இவரை 3வது பவுலரா கொண்டு போங்க.. ஜஹீர் கான் ஆதரவு
“சென்னை போட்டியில் 2வது இன்னிங்ஸில் அவர் நன்றாக துவங்கினர். துரதிஷ்டவசமாக டிக்ளர் செய்ததால் பெரிய ஸ்கோர் அடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை. ஆனால் கான்பூரில் பிட்ச் நன்றாக இருக்கும் நிலையில் அவருக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. அதைப் பயன்படுத்தி ராகுல் 6வது இடத்தில் தனது வாய்ப்பை உறுதி செய்வார். அது ஆஸ்திரேலிய தொடரில் இந்தியாவுக்கு மிகவும் முக்கியம்” என்று கூறினார்.