புஜாரா வந்துட்டாரு, இனிமேல் சதமடித்தால் தான் உங்களுக்கு சான்ஸ் கிடைக்கும் – இளம் வீரருக்கு அஷாருதீன் அட்வைஸ்

Azhar
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடர் நிறைவு பெற்றுள்ள நிலையில் அடுத்ததாக தென்னாபிரிக்காவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா தனது சொந்த மண்ணில் களமிறங்குகிறது. வரும் ஜூன் 9 – 19 வரை நடைபெறும் அந்த தொடருக்குப் பின் இம்மாத இறுதியில் அயர்லாந்துக்கு எதிராக 2 டி20 போட்டியில் பங்கேற்கும் இந்தியா அதன்பின் இங்கிலாந்துக்கு எதிராக கடந்த வருடம் கிடப்பில் போட்டு வந்த 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசி போட்டியில் ஜூலை 1-ஆம் தேதி களமிறங்குகிறது. இதில் தென் ஆப்பிரிக்க டி20 தொடரில் ஓய்வு எடுக்கும் ரோகித் சர்மா போன்ற முக்கிய வீரர்கள் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கு திரும்புகின்றனர்.

Pujara County

- Advertisement -

அதற்காக தனியாக அறிவிக்கப்பட்ட டெஸ்ட் அணியில் மூத்த அனுபவ வீரர் புஜாரா மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த பல வருடங்களாக நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வந்த அவர் 2019க்கு பின் சதமடிக்க முடியாமல் பார்மின்றி திணறினார். அதனால் கடந்த பிப்ரவரியில் நடந்த இலங்கைக்கு எதிரான தொடரின் போது அவரை இந்திய அணி நிர்வாகம் அதிரடியாக நீக்கியது. ஆனால் கடந்த மாதம் இங்கிலாந்தின் கவுன்டி சாம்பியன்ஷிப் தொடரில் 2 இரட்டை சதங்கள் உட்பட 720 ரன்களை அடித்த புஜாரா முரட்டுத்தனமான பார்முக்கு திரும்பி மீண்டும் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார்.

விஹாரி பரிதாபம்:
அதன் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அவர் நேரடியாக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் அவரது வருகையால் மற்றொரு இந்திய வீரர் ஹனுமா விஹாரியின் இடம் கேள்விக்குறியாகியுள்ளது. கடந்த 2018இல் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான ஹனுமா விஹாரி புஜாரா – ரகானே ஆகிய 2 முக்கிய சீனியர் பேட்ஸ்மேன்கள் இருந்த காரணத்தால் 5 அரைசதங்கள் 1 சதம் உட்பட 15 போட்டிகளில் 808 ரன்களை 42.73 என்ற நல்ல சராசரியில் எடுத்த போதிலும் நிலையான இடம் கிடைக்காமல் தவித்து வந்தார்.

vihari

மேலும் புஜாரா – ரகானே ஆகிய இருவருமே சுமாராக செயல்பட்டதால் இலங்கை தொடரின்போது நீக்கப்பட்ட அவர்களுக்கு பதில் ஹனுமா விஹாரி – ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோருக்கு இந்திய அணி நிர்வாகம் நீண்டகால வாய்ப்பளிக்க முடிவு எடுத்தது. ஆனால் தற்போது புஜாரா வந்து விட்டதால் அந்த இருவரில் யாரேனும் ஒருவரை நீக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஒருவேளை அந்த இருவரில் ஸ்ரேயாஸ் அய்யர் நீக்கப்பட்டு ஹனுமா விஹாரி வாய்ப்பளிக்கப்பட்டால் அதில் அவர் சதமடித்தால் மட்டுமே அடுத்து வரும் போட்டிகளில் வாய்ப்பு கிடைக்கும் என்ற பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

சதமடிங்க:
ஏனெனில் கடைசி 3 இன்னிங்ஸ்களில் முறையே 31, 35, 58 என்ற ரன்களை மட்டுமே அவர் எடுத்துள்ளார். இந்நிலையில் ஹனுமா விஹாரி 50, 60 ரன்கள் அடித்தால் தாக்கு பிடிக்க முடியாது என்று தெரிவித்துள்ள முன்னாள் இந்திய கேப்டன் முகமது அசாருதீன் நிலையான இடத்தை பிடிக்க இங்கிலாந்து டெஸ்டில் அவர் சதமடிக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அவர் பெரிய ஸ்கோர் அடிப்பது மிகவும் முக்கியமானதாகும். நிலையான வாய்ப்பை பிடிக்க அவர் சதமடிக்க வேண்டும். அவர் நல்ல திறமையான வீரர். ஆனால் இந்தியாவுக்காக நீங்கள் நீண்ட காலம் விளையாட வேண்டுமெனில் தொடர்ச்சியாக பெரிய ரன்களை எடுக்க வேண்டும்” என்று கூறினார்.

Azharuddin

கடந்த 2018 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் இதே இங்கிலாந்துக்கு எதிராக இங்கிலாந்து மண்ணில் அறிமுகமான ஹனுமா விஹாரி அந்தப் போட்டியில் அரைசதம் அடித்து சிறப்பான தொடக்கம் பெற்றார். ஆனால் புஜாரா மற்றும் ரஹானே ஆகியோர் இருந்த காரணத்தால் 30, 50, 60 என்பது போன்ற சிறிய ரன்களை எடுத்து அவர் பெரிய அளவில் ரன்களை எடுக்க தவறிய காரணத்தால் 4 வருடங்கள் கழித்து இன்று வரை 15 டெஸ்ட் போட்டிகள் மட்டுமே விளையாடியுள்ளார். மேலும் 2018இல் மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கி 8, 66 ரன்களை எடுத்த அவர் கடந்த 2021 சிட்னி டெஸ்டில் தமிழகத்தின் அஷ்வினுடன் இணைந்து காயத்தையும் பொருட்படுத்தாமல் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து டிரா செய்ய உதவினார்.

அப்படியே 4 வருடங்கள் உருண்டோடிய நிலையில் தற்போது புஜாரா – ரகானே ஆகியோர் சரியத் தொடங்கியுள்ள இந்த நேரத்தில் அசாருதீன் கூறியது போல சதம் போன்ற பெரிய ரன்களை அவர் எடுத்தால் மட்டுமே இந்திய அணியில் நிலைத்திருக்க முடியும். மேலும் தற்போது 28 வயதை கடந்துவிட்டதால் இனிமேலும் தாமதித்து சொதப்பினால் இந்திய அணியில் இருந்து காணாமல் போய்விடுவோம் என்பதை மனதில் வைத்து ஹனுமா விஹாரி சிறப்பாக செயல்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

Advertisement