புதிய ஜெர்ஸியை வெளியிட்ட குஜராத் டைட்டன்ஸ்! மும்பை பாதி டெல்லி பாதி கலந்த கலவை – என கலாய்க்கும் ரசிகர்கள்

Gujarat
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடர் வரும் மார்ச் 26-ஆம் தேதி முதல் துவங்கி மே 29-ஆம் தேதி வரை 2 மாதங்கள் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகி வருகிறது. மும்பை, புனே ஆகிய நகரங்களில் இந்தியாவிலேயே நடைபெறும் இந்த தொடரில் 10 அணிகள் பங்கு பெறுவதால் வழக்கமான 60 போட்டிகளுக்கு பதிலாக 74 போட்டிகள் கொண்ட ஐபிஎல் தொடர் 65 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் வரும் மார்ச் 26 முதல் மே 22 வரை முதலில் நடைபெறும் 70 போட்டிகள் கொண்ட லீக் சுற்றுக்கான முழு அட்டவணை மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன.

தயாராகும் அணிகள்:
இந்த தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்டு கோப்பையை வெல்வதற்காக அனைத்து அணிகளும் முழுவீச்சில் தயாராகி வருகின்றன. குறிப்பாக நடப்பு சாம்பியனாக விளங்கும் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் கோப்பையை தக்க வைத்துக் கொள்வதற்காக எதிரணிகளை காட்டிலும் முன்கூட்டியே குஜராத் மாநிலம் சூரத் நகரில் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

- Advertisement -

மேலும் இந்த தொடரில் கேப்டன்கள் இல்லாத கொல்கத்தா, பஞ்சாப் போன்ற அணிகள் தங்களது புதிய கேப்டன்களை அறிவித்துள்ளன. அத்துடன் இந்த வருடம் புத்துணர்ச்சியுடன் களமிறங்கி கோப்பையை வெல்வதற்காக ஒரு சில அணிகள் தங்கள் அணி வீரர்கள் அணிந்து விளையாடும் உடையில் மாற்றங்களை செய்து புதிய ஜெர்சியை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்ட பப் டு பிளேஸிஸ் அந்த அணியின் புதிய ஜெர்ஸியை நேற்று முன்தினம் அறிமுகப்படுத்தினார்.

குஜராத் டைட்டன்ஸ்:
அந்த வகையில் சுமார் 5000 கோடி ரூபாய் செலவில் புதிய ஐபிஎல் அணியாக உருவாக்கப்பட்ட அகமதாபாத் அணி நிர்வாகம் தங்களது அணிக்கு குஜராத் டைட்டன்ஸ் என சமீபத்தில் புதிய பெயரை சூட்டி இருந்தது. அத்துடன் இந்தியாவின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவை தங்களின் கேப்டனாகவும் அந்த அணி அறிவித்திருந்தது. மேலும் தங்கள் அணிக்கான புதிய லோகோவை அறிவித்திருந்த அந்த அணி நிர்வாகம் நேற்று தங்கள் அணி வீரர்கள் அணிந்து விளையாட போகும் புதிய ஜெர்சியை வெளியிடப்பட்டது.

- Advertisement -

இதற்காக அஹமதாபாத் நகரில் இருக்கும் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக விளங்கும் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த பிரத்தியேக நிகழ்ச்சியில் அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, பயிற்சியாளர் ஆசிஸ் நெஹ்ரா மற்றும் குஜராத் அணியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதை அடுத்து கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற அந்த நிகழ்ச்சியின் முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் புதிய ஜெர்ஸி வெளியிடப்பட்டது.

நடு பகுதிகளில் ஊதா நிறத்தையும் பக்கவாட்டில் வெளிர் ஊதா நிறத்தையும் அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டுள்ள இந்த ஜெர்ஸியின் முன்பகுதி பக்கவாட்டில் மின்னல் தோன்றுவதை போன்ற அமைப்புடன் கூடிய டிசைன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஜெர்ஸியிலேயே அந்த மின்னல் போன்ற வடிவம் தான் அனைவரையும் கவர்ந்துள்ளது என்றே கூறலாம்.

- Advertisement -

கலாய்க்கும் ரசிகர்கள்:
இதை பார்த்த குஜராத் அணியின் ரசிகர்கள் தங்கள் அணியின் முதல் ஜெர்சி பிரமாதமாக இருப்பதாக பாராட்டினார். குறிப்பாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் போன்ற ஒரு சில அணிகளின் ஜெர்ஸியை காட்டிலும் இது மிகச் சிறப்பாக உள்ளதாக சமூக வலைதளங்களில் பேசி வருகிறார்கள். ஆனால் இதை பார்க்கும் பெரும்பாலான ரசிகர்கள் ஐபிஎல் தொடரில் மீண்டும் ஒரு ஊதா நிறத்திலான ஜெர்ஸியா என தங்களது சலிப்பை தெரிவிக்கிறார்கள். ஏனெனில் ஏற்கனவே ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ் போன்ற அணிகளின் ஜெர்ஸி ஊதா நிறைத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. மேலும் ராஜஸ்தான் போன்ற அணிகளில் இந்த ஊதா நிறம் அனைத்து சீசன்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அப்படி இருக்க ஊதா நிறத்தை தவிர வேறு எந்த வண்ணமும் குஜராத்துக்கு கிடைக்கவில்லையா என சில ரசிகர்கள் கூறுகிறார்கள். மேலும் இந்த ஜெர்ஸி உற்றுப் பார்க்கும் பல ரசிகர்கள் இது மும்பை இந்தியன்ஸ் பாதி டெல்லி கேபிட்டல்ஸ் மீதி கலந்த கலவையாக உள்ளது என்று வெளிப்படையாகவே குஜராத் டைட்டன்ஸ் அணியின் புதிய ஜெர்சியை சமூக வலைதளங்களில் கலாய்த்து வருகிறார்கள்.

அவர்கள் கூறுவது போல மும்பை, டெல்லி ஆகிய ஆடைகளில் பயன்படுத்தப்படும் ஊதா நிறத்துடன் ராஜஸ்தான் அணியில் பயன்படுத்தப்படும் கடல் வண்ண ஊதா நிறமும் கலந்த கலைவையாக இந்த குஜராத் டைட்டன்ஸ் ஜெர்ஸி காட்சியளிக்கிறது. இருப்பினும் அதில் இருக்கும் மின்னல் போன்ற தோற்றம் மட்டுமே வித்தியாசமாகவும் பாராட்டத்தக்க வகையில் காணப்படுகிறது.

Advertisement