குஜராத் அணியிலிருந்து வெளியேறும் இளம் ஸ்டார் வீரர் – தங்களது அணிக்கு அழைக்கும் ரசிகர்கள், உண்மை என்ன?

Shubman Gill Wriddhiam Saha
Advertisement

உலகப் புகழ்பெற்ற ஐபிஎல் தொடரின் 15வது சீசனின் சாம்பியன் பட்டத்தை புதிதாக தோற்றுவிக்கப்பட்டு அறிமுகமாக களமிறங்கிய ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் முதல் வருடத்திலேயே வென்று சாதனை படைத்தது. அந்த வெற்றிக்கு கேப்டன் ஹர்திக் பாண்டியா ஆல் ரவுண்டராக முக்கிய பங்காற்றியதை போல் பேட்டிங் துறையில் முக்கிய போட்டிகளில் அசத்தலாக செயல்பட்ட இளம் இந்திய வீரர் சுப்மன் கில் 16 போட்டிகளில் 483 ரன்களை 34.50 என்ற சிறப்பான சராசரியிலும் 132.22 என்ற ஸ்டிரைக் ரேட்டிலும் குவித்து கருப்பு குதிரையாக செயல்பட்டார்.

குறிப்பாக அழுத்தமான பைனலில் ராஜஸ்தான் நிர்ணயித்த 131 ரன்கள் இலக்கை துரத்தும் போது தொடக்க வீரராக களமிறங்கி நங்கூரமாக பேட்டிங் செய்த அவர் 3 பவுண்டரி 1 சிக்சருடன் கடைசி வரை அவுட்டாகாமல் 45* (43) ரன்கள் குவித்து வெற்றி பெற வைத்தார். முன்னதாக கடந்த 2018 ஐசிசி அண்டர்-19 உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் தொடர் நாயகன் விருதை வென்ற இவர் 2019 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக சிறப்பாக செயல்பட்டு “வளர்ந்து வரும் இளம் வீரர்” என்ற விருதையும் வாங்கி இந்தியாவுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார்.

- Advertisement -

குஜராத்தின் ஸ்டார்:
அதில் சுமாரான செயல்பாடுகள் மற்றும் காயம் காரணமாக வெளியேறிய அவரை இந்த வருட ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி நிர்வாகம் கழற்றி விட்டது. இருப்பினும் அவருடைய திறமையை நம்பி 8 கோடி என்ற பெரிய தொகைக்கு ஆரம்பத்திலேயே வாங்கிய குஜராத்துக்கு இந்த வருடம் அவர் அற்புதமாக செயல்பட்டதால் வரும் காலங்களில் அந்த அணியில் நிரந்தரமாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்கேற்றார் போல் சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரில் அற்புதமாக செயல்பட்டு தொடர் நாயகன் விருது வென்ற அவர் ஜிம்பாப்வே தொடரிலும் முதல் முறையாக சதமடித்து இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றி தொடர் நாயகன் விருதை வென்றார். அதனால் 22 வயதிலேயே ஒருநாள் கிரிக்கெட்டில் வெளிநாட்டு மண்ணில் 2 அடுத்தடுத்த தொடர் நாயகன் விருதுகளை வென்ற இந்திய வீரர் என்ற சாதனை படைத்துள்ள அவரை தற்போது நல்ல பார்மில் இருப்பதால் தப்பித் தவறி கூட குஜராத் நிர்வாகம் தவற விடாது என்று ரசிகர்கள் நம்புகின்றனர்.

- Advertisement -

வெளியேறும் கில்:
இந்நிலையில் “இந்த பயணம் நினைவில் வைத்துக்கொள்ளக் கூடியது. உங்களுடைய அடுத்த பயணத்திற்கு எங்களுடைய மனதார வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் சுப்மன் கில்” என்று செப்டம்பர் 17ஆம் தேதி மாலை தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்வாகம் ட்வீட் போட்டது. முன்னதாக 2023 ஐபிஎல் தொடருக்காக “டிரேடிங் விண்டோ” எனப்படும் ஏலத்திற்கு முன்பாக ஒப்பந்த அடிப்படையில் அணிகளுக்கிடையே வீரர்களை பரிமாறிக்கொள்ளும் வேலைகள் இப்போதே துவங்கியுள்ளன. அந்த நிலைமையில் குஜராத் போட்ட இந்த ட்வீட்டை பார்த்த ரசிகர்கள் அடுத்த வருட ஐபிஎல் தொடரில் சுப்மன் கில்லை டிரேடிங் விண்டோ வாயிலாக விடுவிப்பதை தான் அந்த அணி நிர்வாகம் இப்படி மறைமுகமாக அறிவித்துள்ளதாக புயலைக் கிளப்பினர்.

அதற்கேற்றார் போல் இந்த ட்வீட்டை பார்த்த சுப்மன் கில் “மகிழ்ச்சியுடன் நன்றி மற்றும் அன்பு” என்ற பதிலை வார்த்தையாக குறிப்பிடாமல் குஜராத் நிர்வாகத்திற்கு பதிலளித்து ட்வீட் போட்டுள்ளார். அதனால் குஜராத் அணியிலிருந்து அவர் வெளியேறியப் போவது உறுதியாகி விட்டதாக கணிக்கும் சென்னை ரசிகர்கள் எங்களது அணிக்கு வாருங்கள் என்று அழைப்பு விடுக்க ஏற்கனவே விளையாடிய கொல்கத்தாவுக்கு வாருங்கள் என்று அந்த அணி ரசிகர்கள் அழைக்கிறார்கள்.

உண்மை என்ன:
அது போக எஞ்சிய அனைத்து ஐபிஎல் ரசிகர்களும் தங்களுடைய அணிக்கு விளையாட அழைப்பு விடுத்ததை பார்த்த குஜராத் நிர்வாகம் “கில் எப்போதும் எங்களுடன் தான் இருப்பார், நீங்கள் நினைத்தது எதுவும் உண்மை கிடையாது. ஆனால் உங்களுடைய கணிப்புகளை விரும்புவதால் அதை தொடருங்கள்” அதன் பின் ஒரு ட்வீட் போட்டுள்ளது.

அதை பார்க்கும் போது இது விளையாட்டுக்காக செய்யப்பட்ட நிகழ்வு என்று விளக்குவதற்கு குஜராத் முயற்சித்தாலும் உண்மை முன்கூட்டியே தெரிந்து விடக்கூடாது என்பதற்காக இப்படி மழுப்புவதாக ரசிகர்கள் கருதுகின்றனர். எது எப்படி இருந்தாலும் இந்த விஷயத்தில் உண்மையான உண்மை என்பது விரைவில் வெளிவரும் என்று நம்பலாம்.

Advertisement