GT vs LSG : மிரட்டிய சஹா – கில் ஜோடி சாதனை – லக்னோவை சரவெடியாக விளாசிய குஜராத் – வரலாற்றின் இரட்டை சாதனை ஸ்கோர்

- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் மே 7ஆம் தேதி மதியம் 3.30 மணிக்கு அகமதாபாத் நகரில் நடைபெற்ற 51வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அதில் டாஸ் வென்ற லக்னோ முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய குஜராத்துக்கு முதல் ஓவர்களிலிருந்தே சரவெடியாக விளையாடிய ரிதிமான் விரைவாக ரன்களை சேர்த்தார். மறுபுறம் சுப்மன் கில் சற்று மெதுவாக விளையாடிய நிலையில் தம்மாலும் டி20 கிரிக்கெட்டில் சரவெடியாக விளையாட முடியும் என்ற வகையில் வெளுத்து வாங்கிய சஹா முதல் ஆளாக அரை சதமடித்தார்.

அவர்களது அதிரடியால் 6 ஓவர்கள் முடிவில் 78 ரன்கள் குவித்த குஜராத் ஐபிஎல் வரலாற்றில் பவர் பிளே ஓவர்களில் தங்களுடைய அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்து சாதனை படைத்தது. அதே வேகத்தில் நேரம் செல்ல செல்ல மேலும் நங்கூரமாக நின்று லக்னோ பவுலர்களை வெளுத்து வாங்கிய இந்த ஜோடி 13 ஓவர்கள் வரை 142 ரன்கள் மெகா ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆரம்பத்திலேயே குஜராத்துக்கு வலுவான அடித்தளம் கொடுத்தது.

- Advertisement -

இதன் வாயிலாக ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக எந்த ஒரு விக்கெட்டுக்கும் அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோடி என்ற சிறப்பான சாதனையும் அவர்கள் படைத்தனர். அந்த பட்டியல்:
1. சுப்மன் கில் – ரிதிமான் சஹா : 142, லக்னோவுக்கு எதிராக, 2023*
2. டேவிட் மில்லர் – ஹர்திக் பாண்டியா : 106*, ராஜஸ்தானுக்கு எதிராக, 2022
3. சுப்மன் கில் – ரிதிமான் சஹா : 106, பஞ்சாப்புக்கு எதிராக, 2022

அத்துடன் ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்கு எதிராக அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோடி என்ற சாதனையும் அவர்கள் படைத்தனர். இதற்கு முன் இதே சீசனில் சென்னையின் ருதுராஜ் கைக்வாட் – டேவோன் கான்வே 110 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும். அப்படி சாதனை படைத்த அந்த ஜோடியில் அதிரடியான வேகத்தில் விளையாடிய சாகா 10 பவுண்டரி 4 சிக்சருடன் 81 (43) ரன்கள் குவித்து ஆவேஷ் கானிடம் அவுட்டாகி சதமடிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் சென்றார்.

- Advertisement -

அதை தொடர்ந்து வந்த கேப்டன் ஹர்திக் பாண்டியா தனது பங்கிற்கு 1 பவுண்டரி 2 சிக்சரை பறக்க விட்டு அதிரடியாக 25 (15) ரன்கள் எடுத்து மோசின் கான் வேகத்தில் ஆட்டமிழந்தார். இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து நங்கூரமாகவும் நேரம் செல்ல செல்ல அதிரடியாகவும் செயல்பட்ட சுப்மன் கில் சதத்தை நெருங்கிய போதிலும் 2 பவுண்டரி 7 சிக்ஸருடன் 94* (51) ரன்கள் மட்டுமே எடுத்தார்.

அவருடன் கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய டேவிட் மில்லர் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 21* (12) ரன்கள் அடித்த சூப்பர் ஃபினிஷிங் கொடுத்ததால் 20 ஓவர்களில் குஜராத் 227/2 ரன்கள் சேர்த்தது. சொல்லப்போனால் இதன் வாயிலாக ஐபிஎல் தொடரில் தங்களுடைய அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்து லக்னோ புதிய சாதனை படைத்தது. அந்த அணி தனது டாப் 3 ஸ்கோர்களையும் அஹமதாபாத் மைதானத்தில் இந்த சீசனில் அடித்துள்ளது. அந்த பட்டியல்:
1. 227/2 : லக்னோவுக்கு எதிராக, அகமதாபாத், 2023*
2. 207/6 : மும்பைக்கு எதிராக, அகமதாபாத், 2023
3. 204/4 : கொல்கத்தாவுக்கு எதிராக, அகமதாபாத், 2023

இதையும் படிங்க:டான் ப்ராட்மேனுக்கு எங்க பாபர் அசாம் கொஞ்சமும் குறைஞ்சவர் இல்ல – முன்னாள் பாக் வீரர் பாராட்டு, கலாய்க்கும் ரசிகர்கள்

அப்படி குஜராத் சாதனை ஸ்கோர் எடுக்கும் அளவுக்கு பந்து வீச்சில் சுமாராக செயல்பட்ட லக்னோ சார்பில் அதிகபட்சமாக மோசின் கான் மற்றும் ஆவேஷ் கான் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். இருப்பினும் ஏற்கனவே இந்த சீசனில் 257 ரன்கள் வரை அடித்து வெற்றி கண்டுள்ள லக்னோ இந்த இலக்கையும் துரத்தி பிடித்து வெற்றி காண்பதற்கு போராடி வருகிறது.

Advertisement