GT vs SRH : கோப்பைய பாண்டியா பேர்ல எழுதுங்க, 2022 போலவே மாஸ் காட்டும் குஜராத் – முடிந்தது ஹைதராபாத் கனவு

- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் மே 15ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு அகமதாபாத் நகரில் நடைபெற்ற 62வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற ஹைதராபாத் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய குஜராத்துக்கு புவனேஸ்வர் குமார் வீசிய முதல் ஓவரிலேயே சஹா டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் அடுத்து வந்த சாய் சுதர்சனுடன் ஜோடி சேர்ந்த மற்றொரு தொடக்க வீரர் சுப்மன் கில் விரைவாக ரன்களை சேர்த்தார்.

அதில் ஒருபுறம் சாய் சுதர்சன் நிதான பேட்டிங்கை வெளிப்படுத்த மறுபுறம் ஹைதராபாத் பவுலர்களை பந்தாடிய கில் முதல் ஆளாக அரை சதமடித்து அசத்தினார். நேரம் செல்ல செல்ல அதே வேகத்தில் 15 ஓவர்கள் வரை நின்று 147 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்த அந்த ஜோடியில் சாய் சுதர்சன் 6 பவுண்டரி 1 சிக்சருடன் 47 (36) ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹர்டிக் பாண்டியா 8 (6) டேவிட் மில்லர் 7 (5) ராகுல் திவாடியா 3 (3) என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த போதிலும் மறுபுறம் தொடர்ந்து அசத்திய கில் 13 பவுண்டரி 1 சிக்சருடன் தனது முதல் ஐபிஎல் சதமடித்து 101 (58) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

- Advertisement -

ஆனால் கடைசி நேரத்தில் வந்த வீரர்களை ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாக்கி குஜராத்தை 20 ஓவர்களில் 188/9 ரன்களுக்கு கட்டுப்படுத்திய ஹைதராபாத் சார்பில் அதிகபட்சமாக புவனேஸ்வர் குமார் 5 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத்தொடர்ந்து 190 ரன்களை துரத்திய ஹைதராபாத்துக்கு முகமது ஷமி வீசிய முதல் ஓவரிலேயே அன்மோல்ப்ரீத் சிங் 5 (4) ரன்னில் அவுட்டாக அடுத்த ஓவரில் அபிஷேக் ஷர்மாவை 5 (5) ரன்களில் யாஷ் தயாள் காலி செய்தார். போதாகுறைக்கு அடுத்து வந்த ராகுல் திரிபாதி 1 (2) கேப்டன் ஐடன் மார்க்ரம் 10 (10) என முக்கிய பேட்ஸ்மேன்களை தனது அடுத்தடுத்த ஓவர்களில் மீண்டும் அவுட்டாக்கிய முகமது ஷமி குஜராத்துக்கு அற்புதமான தொடக்கம் கொடுத்தார்.

அதனால் 29/4 என ஆரம்பத்திலேயே திணறிய அந்த அணிக்கு அடுத்ததாக வந்த சன்விர் சிங் 7 (6) அப்துல் சமத் 4 (3) என இளம் வீரர்களை ஒற்றை இலக்க ரன்களில் தனது அனுபவத்தால் அவுட்டாகிய மோஹித் சர்மா அடுத்து களமிறங்கிய மார்கோ யான்செனையும் 3 (6) ரன்களில் காலி செய்தார். அப்படி ஆரம்பத்திலேயே அனலாக பந்து வீசிய குஜராத்துக்கு பதில் சொல்ல முடியாமல் 59/7 என மொத்தமாக சரிந்த ஹைதராபாத் 100 ரன்களை தாண்டுமா என்று அந்த அணி ரசிகர்கள் கவலையடைந்த போது மறுபுறம் நின்ற ஹென்றிச் க்ளாஸென் அதிரடியாக விளையாடி சரிவை சரி செய்ய போராடினார்.

- Advertisement -

அதற்கு புவனேஸ்வர் குமார் கை கொடுத்ததை பயன்படுத்திய அவர் 17 ஓவர்கள் வரை நிலைத்து நின்று 8வது விக்கெட்டுக்கு முக்கியமான 68 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து மீட்டெடுத்த போதிலும் 4 பவுண்டரி 3 சிக்சருடன் 64 (44) ரன்களில் முகமது ஷமி அவுட்டாக்கினார். அடுத்த சில ஓவர்களில் மறுபுறம் போராடிய புவனேஸ்வர் குமாரும் 3 பவுண்டரியுடன் 27 (26) ரன்களில் ஆட்டமிழந்ததால் 20 ஓவர்களில் 154/9 ரன்களுக்கு ஹைதராபாத்தை கட்டுப்படுத்தி 34 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற குஜராத் சார்பில் அதிகபட்சமாக ஷமி மற்றும் மோஹித் சர்மா ஆகியோர் தலா 4 விக்கெட்டுகள் சாய்த்தனர்.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத்துக்கு சுப்மன் கில் – சுதர்சன் ஆகியோரை தவிர்த்து எஞ்சிய வீரர்கள் சுமாராக செயல்பட்டதால் 20 ரன்களை குறைவாகவே எடுத்தது. ஆனால் அதை பந்து வீச்சில் ஈடு கட்டும் வகையில் பவர் பிளே ஓவர்களிலேயே 4 விக்கெட்களை சாய்த்த அந்த அணிக்கு அணிக்கு பதில் சொல்ல முடியாத ஹைதராபாத்துக்கு க்ளாஸென் தவிர்த்து வேறு எந்த வீரரும் பொறுப்புடன் செயல்படவில்லை. அதனால் 12 போட்டிகளில் 9வது தோல்வியை பதிவு செய்த ஹைதராபாத் இத்தொடரிலிருந்து 2வது அணியாக லீக் சுற்றுடன் அதிகாரப்பூர்வமாக வெளியேறியது.

இதையும் படிங்க:GT vs SRH : ஜோடியாக சாதனை படைத்த தமிழக வீரர், ஹைதராபாத்தை பந்தாடிய கில் – குஜராத்துக்காக இரட்டை சாதனை

மறுபுறம் நடப்பு சாம்பியனுக்கு அடையாளமாக செயல்பட்ட குஜராத் 13 போட்டிகளில் 9வது வெற்றியை பதிவு செய்து 2022 போலவே புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்து பிளே ஆஃப் சுற்றுக்கு குவாலிபயர் 1 போட்டிக்கு அதிகாரப்பூர்வமாக முதல் அணியாக தகுதி பெற்று கோப்பையை தக்க வைக்கும் வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது.

Advertisement