இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் 5 விக்கெட் வித்யாசத்தில் தோற்ற இந்தியா ஆரம்பத்திலேயே பின்தங்கியுள்ளது. அதன் காரணமாக இந்திய அணியில் மாற்றங்கள் நிகழ்த்த வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன. குறிப்பாக சுழல் பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் அணிக்குள் வரவேண்டும் என்பது பலரது விருப்பமாக இருக்கிறது.
இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் வெளிநாட்டு மண்ணில் ரவீந்திர ஜடேஜா முதன்மை ஸ்பின்னரே கிடையாது என்று முன்னாள் இந்திய பயிற்சியாளர் மற்றும் ஆஸ்திரேலிய வீரர் கிரேக் சேப்பல் தெரிவித்துள்ளார். மேலும் சமீப காலங்களாகவே இந்தியா டாப் ஆர்டர் பேட்டிங் சரிவை தவிர்ப்பதற்காக ஓரளவு பேட்டிங்கை தெரிந்த பவுலர்களை தேர்ந்தெடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஜடேஜா ஸ்பின்னரே கிடையாது:
அப்படி செய்வது இந்திய அணியின் சமநிலையைப் பாதிப்படைய வைப்பதாக கிரேக் சேப்பல் தெரிவித்துள்ளார். அப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்கள் கடந்த போட்டியில் இந்தியாவை தாங்கிப் பிடிக்காமல் சீட்டுக்கட்டு போல தங்களது விக்கெட்டுகளை இழந்ததாகவும் சேப்பல் கூறியுள்ளார். எனவே டாப் ஆர்டர் பேட்டிங் சரிந்தால் இந்தியாவை லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தாங்கிப் பிடிக்க போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
அதனால் பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்கள் மற்ற வேலையை செய்வார்கள் என்ற எதிர்பார்ப்புடன் இந்தியா தங்களது அணியை தேர்ந்தெடுக்கக்கூடாது என்று தெரிவிக்கும் சேப்பல் இது பற்றி பேசியது பின்வருமாறு. “இங்கிலாந்து சூழ்நிலைகளில் ஜடேஜா முதன்மை ஸ்பின்னர் கிடையாது. அவருடைய பேட்டிங் திறமை போதுமானதாக கருதப்பட்டால் அவருக்கு ஒரு ஸ்பின்னருடைய ஆதரவு தேவை”
பேலன்ஸை மாத்தணும்:
“இல்லையேல் நீங்கள் மாற்றி சிந்திக்க வேண்டும். ஒருவேளை இந்தியா இங்கிருந்து இத்தொடரை வெல்ல வேண்டுமெனில் அதற்கு அவர்களுடைய அணியில் சமநிலை (பேலன்ஸ்) தேவைப்படுகிறது. கொஞ்சம் பவுலிங் செய்யக்கூடிய எக்ஸ்ட்ரா பேட்ஸ்மேன் டாப் ஆர்டர் சரிவை சமாளிப்பார் என்பதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். டாப் 6 பேட்ஸ்மேன்கள் ரன்கள் அடிப்பார்கள் என்று நம்ப வேண்டும்”
இதையும் படிங்க: ஹெட்ன்னு ஒருத்தர் இருக்காரு தெரியுமா? பென் டக்கெட்டை புகழ்ந்த மைக்கேல் வாகனுக்கு.. ஜெய்ஸ்வாலுடன் பதிலடி
“அந்த நம்பிக்கையுடன் கேப்டனுக்கு 20 விக்கெட்டுகளை எடுத்துக் கொடுக்கும் பவுலர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். இதற்கு பொறுப்பேற்க வேண்டிய இந்திய அணியின் தேர்வாளர்கள் அழுத்தத்தில் இருப்பார்கள். பேட்ஸ்மேன்கள், பவுலர்கள் ரன்கள் மற்றும் விக்கெட்டுகள் எடுப்பதற்கு ரிஸ்க் எடுத்து விளையாட வேண்டிய சூழ்நிலையில் இருந்தால் அவர்களை கழற்றி விட்டு தைரியமான முடிவை எடுக்க வேண்டும்” என்று கூறினார்.



