லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 22 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. அந்தப் போட்டியில் 193 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு முக்கிய பேட்ஸ்மேன்கள் யாரும் பெரிய ரன்கள் எடுக்கவில்லை. அதனால் டெயில் எண்டர்களுடன் சேர்ந்து ரவீந்திர ஜடேஜா 61* ரன்கள் அடித்து போராடியும் இந்தியாவால் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை.
இந்நிலையில் 2019 லீட்ஸ் போட்டியில் வெறும் 1* ரன் அடித்த ஜேக் லீச்சை வைத்துக்கொண்டு பென் ஸ்டோக்ஸ் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்துக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்ததாக கிரேக் சேப்பல் தெரிவித்துள்ளார். அதே போன்ற சரித்திரத்தைப் படைக்கும் வாய்ப்பு கிடைத்தும் ஜடேஜா கோட்டை விட்டு விட்டதாக அவர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
பென் ஸ்டோக்ஸ் போல:
அதே போல இலக்கை நெருங்கியதும் கொஞ்சம் ரிஸ்க் எடுத்து விளையாடுமாறு ஜடேஜாவிடம் கேப்டன் சுப்மன் கில் சொல்லாததும் வெற்றியைப் பறித்ததாக அவர் கூறியுள்ளார். இது பற்றி சேப்பல் பேசியது பின்வருமாறு. “லார்ட்ஸ் போட்டியில் பல ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேன்கள் செய்வதை ஜடேஜா செய்தார். அவர் வாலைக் கவசமாக்கி பேட்டிங் செய்தார். ஆனால் பழமைவாதமாக விளையாடினார். மேலோட்டமாக பார்த்தால் அது ஒழுக்கமான இன்னிங்ஸ். ஆனால் அது சரியானதா?”
“உண்மையில் அந்த சமயத்தில் ஜடேஜா ஒரே பேட்ஸ்மேனாக தனிமையில் விடப்பட்டார். ஒருவேளை இந்தியா சேசிங் செய்ய வேண்டுமெனில் அவர் கணக்கிட்டு ரிஸ்க் எடுத்திருக்க வேண்டும். பந்தை தவற விட்டு சிங்கிள் எடுப்பது மட்டும் அவருடைய வேலை கிடையாது. வெற்றி பெற வைப்பதே முதன்மை வேலை. அது போன்ற சூழ்நிலையில் கேப்டனிடமிருந்து தெளிவான மெசேஜ் வந்திருக்க வேண்டும்”
சொல்லாத கில்:
“குறிப்பாக உங்களால் மட்டுமே இந்த வேலையை செய்ய முடியும். டெயில் எண்டர்கள் உங்களுக்காக இருப்பார்கள், நீங்க வெற்றிக்காக விளையாடுங்கள் என்று கேப்டன் ஜடேஜாவிடம் சொல்லியிருக்க வேண்டும். அதையே 2019 லீட்ஸ் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் வெளிப்படுத்திய ஆட்டத்தில் நாம் பார்த்தோம். தமக்குத்தானே ஆதரவு கொடுத்துக் கொண்ட ஸ்டோக்ஸ் கடந்த 50 வருடங்களில் மிகச்சிறந்த ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தினார்”
இதையும் படிங்க: நானும் தோனியும் இல்லன்னா 2011 2011 உலகக் கோப்பையில் யுவியை கழற்றி விட்ருப்பாங்க.. கேரி கிர்ஸ்டன் பேட்டி
“அன்று தோற்றாலும் வென்றாலும் இங்கிலாந்து அணி தமக்கு ஆதரவு கொடுக்கும் என்பதை தெரிந்து ஸ்டோக்ஸ் விளையாடினார். அது போன்ற ஆதரவே ஒரு சிறந்த அணியில் தேவைப்படும்” என்று கூறினார். அந்த வகையில் சுப்மன் கில் சொல்லில் மட்டுமல்லாமல் செயலிலும் தெளிவுடன் செயல்பட வேண்டும் என்று சேப்பல் கேட்டுக் கொண்டுள்ளார். இதைத் தொடர்ந்து 4வது போட்டி ஜூலை 23ஆம் தேதி துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.



