இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 3 போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து முன்னிலையில் இருக்கும் அந்தத் தொடரின் 4வது போட்டி ஜூலை 23ஆம் தேதி மான்செஸ்டர் துவங்குகிறது. அந்தப் போட்டியில் வென்றால் மட்டுமே தொடரை சமன் செய்து வெற்றி பெறும் வாய்ப்பை தக்க வைத்துக்கொள்ள முடியும் என்ற கட்டாயத்திற்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது.
அந்தப் போட்டியில் உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் பவுலர் ஜஸ்ப்ரித் பும்ரா விளையாடுவாரா என்பது சந்தேகமாக காணப்படுகிறது. ஏனெனில் காயத்தை தவிர்ப்பதற்காக இத்தொடரில் பும்ரா 3 போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என்று பயிற்சியாளர் கௌதம் கம்பீர் ஏற்கனவே அறிவித்து விட்டார். அதனால் 4வது போட்டியில் பும்ரா விலகனால் இந்திய அணிக்கு பெரிய பின்னடைவாக இருக்கும் என்றே சொல்லலாம்.
பும்ரா இல்லனா என்ன:
இந்நிலையில் பும்ரா இல்லாமல் இந்தியா 2வது போட்டியில் பெரிய வெற்றியைப் பெற்றதாக முன்னாள் பயிற்சியாளர் கிரேக் சேப்பல் தெரிவித்துள்ளார். எனவே பும்ரா இல்லையென்றாலும் இந்தியா வெற்றி பெறும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “பும்ராவை பொறுத்த வரை அவர் விளையாடுவாரா? மாட்டாரா? என்ற பேச்சுக்கள் இருக்கிறது”
“சமீப காலங்களில் அவர் இல்லாமலேயே இந்தியா நிறைய டெஸ்ட் போட்டிகளில் வென்றுள்ளது. எனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் தனி நபர்களின் செயல்பாடு வெற்றிக்கான சாவியல்ல. கலவையான செயல்பாடுகளை வெளிப்படுத்தும் அணிகளே வெற்றி பெறும்” என்று கூறினார். அதே சமயம் கேப்டன் கில் தம்முடைய முத்திரையை பதிப்பதற்கு 4வது போட்டி மிகப்பெரிய வாய்ப்பு என்றும் சேப்பல் கூறியுள்ளார்.
வருங்காலம் கில் கையில்:
அது பற்றி சேப்பல் பேசியது பின்வருமாறு. “அனைத்து வீரர்களும் தெளிவாக தன்னம்பிக்கையுடன் திட்டங்களை செயல்படுத்தத் தயாராக இருக்கிறார்களா என்று கேப்டன் உறுதி செய்வதே வெற்றிக்கான சூத்திரமாகும். ஒருவேளை கில் சிறந்த கேப்டனாக வர விரும்பினால் இதுவே அவர் தன்னுடைய அதிகாரம், முத்திரையைப் பதிப்பதற்கான தருணமாகும். பேட்டிங் மட்டுமின்றி கேப்டன்ஷிப் துறையிலும் அவர் தரத்தை நிர்ணயிக்க வேண்டும்”
இதையும் படிங்க: இந்தியாவை சொந்த மண்ணில் மண்ணை கவ்வ வெச்சதே என் கேரியரில் பெரிய சாதனை.. ரசல் பெருமிதம்
“மற்ற வீரர்களிடம் உதவி கேளுங்கள், ஆதரவளியுங்கள், அனைத்து வீரர்களும் எதிர்பார்ப்புக்கு நிகராக செயல்படத் தயாராக உள்ளதை உறுதி செய்யுங்கள். ஏனெனில் கிரிக்கெட்டில் ஹீரோக்கள் கிடையாது. கேப்டனாக உங்களை சுற்றியிருக்கும் வீரர்களின் சிறந்த செயல்பாடுகளை வெளிக்கொண்டு வருவதே வெற்றியைக் கொடுக்கும். எனவே கில் தெளிவான சிந்தனை மற்றும் நோக்கம் ஆகியவற்றை மையமாக வைத்து செயல்பட்டால் இத்தொடர் மட்டுமின்றி இந்திய கிரிக்கெட்டின் வருங்காலத்தையே வடிவமைக்க முடியும்” எனக் கூறினார்.



