ஆஸ்திரேலியா – இந்திய கிரிக்கெட் அணிகள் மோதும் வரும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை 3 போட்டிகளின் முடிவில் 1 – 1* என்ற கணக்கில் சமனில் இருக்கிறது. இங்கிருந்து இந்திய அணி வெற்றி பெறுவதற்கு பேட்டிங் துறையின் முதுகெலுப்பான விராட் கோலி அசத்துவது அவசியமாகும். ஆனால் அவரோ அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் பந்துகளை தேவையின்றி அடித்து தன்னுடைய விக்கெட்டை தாரை வார்த்து வருகிறார்.
இத்தனைக்கும் சமீப காலங்களில் தடுமாறி வந்த அவர் இந்தத் தொடரின் முதல் போட்டியிலேயே சதத்தை அடித்து இந்தியாவின் வெற்றியில் பங்காற்றினார். அதனால் தொடர்ந்து அசத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி மீண்டும் அதே ஏமாற்றத்தைக் கொடுத்து வருகிறார். அதனால் அஸ்வினுக்கு அடுத்தபடியாக அவரும் ஓய்வு பெறலாம் என்று ஒரு தரப்பு ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்துகிறார்கள்.
கிரேக் சேப்பல் அட்வைஸ்:
இந்நிலையில் விராட் கோலி ஈபிடிஎஸ் எனப்படும் எலைட் செயல்திறன் சரிவில் சிக்கியுள்ளதாக முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மற்றும் இந்திய அணி பயிற்சியாளர் கிரேக் சேப்பல் தெரிவித்துள்ளார். அதாவது ஜாம்பவான்களுக்கு நிகரான அந்தஸ்தை கொண்ட விராட் கோலி 20 – 30 ரன்களை தாண்டுவதற்கே மனதளவில் தடுமாறுவதாக அவர் கூறியுள்ளார்.
அதைத் தாண்டி விட்டால் அவரால் பெரிய ரன்கள் அடிக்க முடியும் என்றும் கிரேக் சேப்பல் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் ரிக்கி பாண்டிங், சச்சின் டெண்டுல்கரும் இந்த பாதிப்பை சந்தித்துள்ளதாக அவர் கூறியுள்ளார். இது பற்றி சேப்பல் பேசியது பின்வருமாறு. “இது ஈபிடிஎஸ் முதல் புலப்படும் அறிகுறி. கிரீஸில் இருக்கும் ஒரு வீரரின் அணுகு முறையில் நுட்பம் இருக்கும். ஆனால் அது தெளிவற்ற மாற்றமாகும்”
துவக்கம் முக்கியம்:
“விராட் கோலி ஒரு காலத்தில் தனது ஆதிக்கம் செலுத்தும் துவக்கத்திற்காக புகழ்பெற்றார். ஆனால் சமீப வருடங்களில் அவருடைய ஆட்டத்தை துவங்குவதில் தடுமாற்றத்தை காண்பித்துள்ளார். அவருக்கு முன்பாக டெண்டுல்கர் மற்றும் பாண்டிங் இருந்தார்கள். அவர்களைப் போல விராட் கோலியும் தனது ஓட்டத்தை கண்டுபிடிப்பதற்கு முன் 20 – 30 ரன்கள் தேவை என்று தோன்றுகிறது”
இதையும் படிங்க: இந்திய அணி யோசிக்க ஒன்னுமே இல்ல.. தனித்துவமான பும்ரா அதுக்கு தகுதியானவர்.. ஆலன் பார்டர் பேட்டி
“அதை எட்டுவது உளவியல் ரீதியான திருப்பு முனையாக இருக்கும். நம்பிக்கையை மீண்டும் பெற உதவும். இதிலிருந்து குணமடைவதற்கு நீங்கள் உங்களுடைய இளமை காலத்தை மீண்டும் சிந்தித்து செயல்படுவதே வழியாகும். இதை சொல்வது எளிது என்றாலும் செய்வது கடினம். தன்னம்பிக்கை என்பது உணர்வு. நீங்கள் அதை மீண்டும் உருவாக்க முடிந்தால் உங்களை நீங்களே புதுப்பித்துக் கொள்ள முடியாது என்பதற்கு எந்த காரணமும் இல்லை” எனக் கூறினார்.



