ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் சாம்பியன் பட்டம் வெல்லும் லட்சத்துடன் களமிறங்கியுள்ள ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா தன்னுடைய முதல் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானை 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளது. அனைவரது எதிர்பார்ப்புக்கு மத்தியில் அக்டோபர் 23ஆம் தேதியன்று மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 20 ஓவர்களில் 159/8 ரன்கள் சேர்த்தது. பாபர் அசாம், முகமது ரிஸ்மான் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றிய அந்த அணிக்கு அதிகபட்சமாக ஷான் மசூட் 52* ரன்கள் எடுத்தார்.
அதன்பின் 160 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா, ராகுல் சூரியகுமார் என 3 முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினர். அதனால் 31/4 என்ற மோசமான தொடக்கத்தைப் பெற்று தோல்வியின் பிடியில் சிக்கிய இந்தியாவை 5வது விக்கெட்டுக்கு நங்கூரமாகவும் அதிரடியாகவும் விராட் கோலியுடன் இணைந்து 113 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து தூக்கி நிறுத்திய ஹர்திக் பாண்டியா 40 (37) ரன்கள் குவித்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். அந்த சமயத்தில் தினேஷ் கார்த்திக் பொறுப்பின்றி ஸ்டம்பிங் ஆகி சென்றதால் ஏற்பட்ட பரபரப்பில் மீண்டும் அதே ஒய்ட் வலையில் சிக்காத அஸ்வின் கடைசி பந்தை தூக்கி அடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார்.
எவ்ளோ பல்ப்கள்:
அதனால் 20 ஓவரில் 160/6 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்ற இந்தியா கடந்த வருடம் துபாயில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் முதல் முறையாக சந்தித்த வரலாற்று தோல்விக்கு தக்க பதிலடி கொடுத்து பாகிஸ்தானை பழி தீர்த்துள்ளது. இந்த வெற்றிக்கு 6 பவுண்டரி மற்றும் 4 சிக்சரை பறக்க விட்டு 82* (53) ரன்கள் குவித்து கருப்பு குதிரையாக செயல்பட்ட விராட் கோலி ஆட்டநாயகன் விருதை வென்றார். அதிலும் குறிப்பாக ஷாஹீன் அப்ரிடி வீசிய 18வது ஓவரில் 3 பவுண்டரிகளை அடித்த அவர் ஹாரீஸ் ரவூப் வீசிய 19வது ஓவரில் 2 மெகா சிக்சர்களை பறக்கவிட்டு 20வது ஓவரிலும் நோ-பாலை கச்சிதமாக பயன்படுத்தி சிக்ஸர் அடித்து வெற்றி பெற வைத்தார்.
அந்த வகையில் பேட்டில் பட்டாசான சிக்சர்களை பறக்க விட்டு பரம எதிரி பாகிஸ்தானை தோற்கடித்து வரலாற்று வெற்றியை பதிவு செய்த அவர் அக்டோபர் 24ஆம் தேதியன்று இந்தியாவில் தீபாவளியை ரசிகர்கள் கொண்டாடுவதற்கு முன்பாகவே மெல்போர்ன் நகரில் தீபாவளி பரிசளித்து கொண்டாட வைத்தார். அதனால் தீபாவளி தினத்தை இந்தியா மட்டுமல்லாது ஒட்டுமொத்த உலகில் இருக்கும் இந்திய ரசிகர்கள் 200% மகிழ்ச்சியுடன் கொண்டாடியதை போல உலகத்தையே தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் சுந்தர் பிச்சையும் கொண்டாடினார்.
ஆம் என்னதான் அமெரிக்கா சென்றாலும் தமிழகத்தில் பிறந்து வளர்ந்ததால் இந்தியாவின் மீது எப்போதுமே தனி மரியாதையும் மதிப்பும் வைத்துள்ள அவர் இப்போட்டியை பார்த்த மகிழ்ச்சியுடன் தீபாவளியை கொண்டாடியதாகவும் அனைவரும் அதே போல் கொண்டாடமாறு வாழ்த்துக்களை தெரிவித்தார். இது பற்றி தனது ட்விட்டரில் அவர் கூறியது பின்வருமாறு. “ஹேப்பி தீபாவளி, நீங்கள் அனைவரும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் மகிழ்ச்சியாகக் கொண்டாடுவீர்கள் என்று நம்புகிறேன். இந்த தீபத் திருநாளை இன்றைய கடைசி 3 ஓவர்களை பார்த்துக் கொண்டே நான் கொண்டாடினேன். என்ன ஒரு அற்புதமான போட்டி” என்று கூறினார்.
அதனால் வயிறு எறிந்தது போல் வந்த ஒரு பாகிஸ்தான் ரசிகர் ராகுல், ரோஹித், சூரியகுமார் ஆகியோர் அவுட்டான முதல் 3 ஓவரையும் நீங்கள் பார்க்க வேண்டும் என பதில் கொடுத்தார். அதற்கு “அதையும் பார்த்தேன், அர்ஸதீப் மற்றும் புவி ஆகியோரிடமிருந்து என்ன ஒரு அற்புதமான பவுலிங்” என்று அந்த ரசிகருக்கு பல்ப் வாங்கும் வகையில் நெத்தியடி பதிலை கொடுத்தார்.
ஏனெனில் பாகிஸ்தானை போலவே முதலில் பந்து வீசிய இந்தியாவும் முதல் 3 ஓவரில் பாபர் அசாமை கோல்டன் டக் அவுட் செய்து ரிஸ்வானை 4 ரன்களில் காலி செய்தது. முன்னதாக இந்தியாவுக்கு சாதகமாக நடுவர் செயல்பட்டதாக இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் ஹுசேன் சொன்னதாக உருட்டிய பாகிஸ்தான் ரசிகர்களின் பித்தலாட்டத்தை அவரே வதந்தி என்று சொல்லி அம்பலப்படுத்திய நிலையில் இப்போது மற்றொரு பாகிஸ்தான் ரசிகர் சுந்தர் பிச்சையிடம் பல்ப் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.



