ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் உள்ள காபா கிரிக்கெட் மைதானத்தில் டிசம்பர் 14ஆம் தேதி 2024 – 25 பார்டர் – கவாஸ்கர் தொடரின் மூன்றாவது போட்டி துவங்கியது. 5 போட்டிகள் கொண்ட அந்தத் தொடரின் முதல் போட்டியில் பும்ரா தலைமையில் இந்தியா அபார வெற்றி பெற்றது. அதற்கு பதிலடியாக இரண்டாவது போட்டியில் வென்ற ஆஸ்திரேலியா தொடரை சமன் செய்துள்ளது.
அதனால் இந்தப் போட்டியில் எப்படியாவது மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பும் முனைப்புடன் இந்தியா களமிறங்கியது. அந்த சூழ்நிலையில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். இருப்பினும் காபாவில் மழை பெய்வதற்கான சூழ்நிலை நிலவுவதால் முதலில் பேட்டிங் செய்வதே சரியான முடிவாக இருக்கும் என்று மைக்கேல் வாகன், மேத்தியூ ஹைடன் போன்ற முன்னாள் வீரர்கள் தெரிவித்தார்கள்.
ரோஹித் முடிவு:
மறுபுறம் மேகமூட்டத்துடன் கூடிய வானிலையில் பந்து ஸ்விங் ஆகும் என்பதால் அதைப் பயன்படுத்தி ஆஸ்திரேலியாவுக்கு சவாலை கொடுக்க பவுலிங் செய்வதாக ரோஹித் சர்மா தெரிவித்தார். அந்த சூழ்நிலையில் துவங்கிய அப்போட்டியில் எதிர்பார்த்தது போலவே மழை வந்ததால் முதல் நாள் ஆட்டம் முன்னதாகவே முடித்துக் கொள்ளப்பட்டது. முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 13.2 ஓவரில் 28-0 ரன்கள் எடுத்துள்ளது.
ஆனால் அந்த 13.2 ஓவரில் ரோகித் சர்மா நினைத்தது போல் பந்து ஸ்விங் ஆகவில்லை. இந்தியாவுக்கு விக்கெட்டும் கிடைக்கவில்லை. அதனால் முன்னாள் வீரர்கள் தெரிவித்தது போல இந்திய அணி முதல் நாளிலேயே பின்னடைவை சந்தித்தது என்று சொல்லலாம். இந்நிலையில் தற்சமயத்தில் சுமாரான ஃபார்மில் இருக்கும் ரோஹித் சர்மா தனது விக்கெட்டை காப்பாற்றுவதற்காகவே முதலில் பந்து வீச தீர்மானித்ததாக ஜாம்பவான் கிளன் மெக்ராத் கூறியுள்ளார்.
மெக்ராத் கிண்டல்:
குறிப்பாக மேகமூட்டத்துடன் கூடிய சூழ்நிலையில் ஆஸ்திரேலியாவின் தரமான ஸ்விங் பந்துகளை எதிர்கொள்ள முடியாமல் அவுட்டாகி விடுவோம் என்ற அச்சத்திலேயே ரோஹித் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று மெக்ராத் கூறியுள்ளார். இது பற்றி ஏபிசி ரேடியோ ஸ்போர்ட் வர்ணனையில் அவர் பேசியது பின்வருமாறு. “ரோகித் சர்மா டாஸ் வென்று முதலில் பந்து வீசியதில் எனக்கு ஆச்சர்யமில்லை”
இதையும் படிங்க: விராட் கோலி எப்போவுமே சச்சின் டெண்டுல்கரை மிஞ்ச முடியாது.. ஏன் தெரியுமா? – சோயிப் அக்தர் கருத்து
“ஏனெனில் இந்த சவாலான சூழ்நிலைக்கு சென்று அவர் பேட்டிங் செய்ய விரும்ப மாட்டார். விஷயம் என்னவெனில் நீங்கள் முதலில் பந்து வீசினால் அது பேரிக்காய் வடிவத்தில் சென்றால் ஊடகத்தில் மோசமாக விமர்சிக்க மாட்டார்கள். அதே சமயம் நீங்கள் முதலில் பேட்டிங் செய்து மோசமாக போனால் தைரியமான முடிவு என்று சொல்வார்கள்” என கிண்டலடிக்கும் வகையில் கூறினார்.



