218.18 ஸ்ட்ரைக் ரேட்டில் வெ.இ பவுலர்களை வெளுத்த மேக்ஸ்வெல்.. ரோஹித்துக்கு நிகராக சூர்யகுமாரை முந்தி உலக சாதனை

- Advertisement -

ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றன. 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராவதற்காக நடைபெறும் இந்த தொடரின் முதல் போட்டியில் வென்ற ஆஸ்திரேலியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அந்த நிலையில் இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் இரண்டாவது போட்டி பிப்ரவரி பதினொன்றாம் தேதி அடிலெய்ட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.

அந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு ஜோஸ் இங்லீஷ் 4 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுக்க அடுத்ததாக வந்த கேப்டன் மிட்சேல் மார்ஷ் அதிரடியாக விளையாட முயற்சித்து 29 (12) ரன்களில் ஆட்டமிழந்தார். அதே போல மறுபுறம் தடுமாறிய டேவிட் வார்னர் 22 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.

- Advertisement -

மேக்ஸ்வெல் உலக சாதனை:
இருப்பினும் நான்காவது இடத்தில் களமிறங்கிய நட்சத்திர வீரர் கிளன் மேக்ஸ்வெல் ஆரம்பம் முதலே தன்னுடைய ஸ்டைலில் அதிரடியாக விளையாடி விரைவாக ரன்களை சேர்த்தார். அதே வேகத்தில் அதிரடியாக விளையாடிய அவர் 25 பந்துகளுக்குள் அரை சதமடித்து வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களைப் பந்தாடி ரசிகர்களுக்கு விருந்து படைத்தார்.

அவருக்கு கம்பெனி கொடுக்கும் வகையில் விளையாடி நான்காவது விக்கெட்டுக்கு 82 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த மார்கஸ் ஸ்டோய்னிஸ் 16 (15) ரன்களில் அவுட்டானார். ஆனால் எதிர்ப்புறம் தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களை வெளுத்து வாங்கிய மேக்ஸ்வெல் வெறும் 50 பந்துகளில் சதமடித்து கடைசி வரை அவுட்டாகாமல் 12 பவுண்டரி 8 சிக்ஸருடன் 120* (55) ரன்களை 218.18 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்து சூப்பர் ஃபினிஷிங் கொடுத்தார்.

- Advertisement -

அவருடன் டிம் டேவிட் கடைசி நேரத்தில் தம்முடைய பங்கிற்கு அதிரடியாக 31* (14) ரன்கள் எடுத்ததால் 20 ஓவர்களில் ஆஸ்திரேலியா 241/4 ரன்கள் எடுத்து மிரட்டியது. வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அதிகபட்சமாக ஜேசன் ஹோல்டர் 2 விக்கெட்டுகளை சாய்த்தார். அதை விட இந்த போட்டியில் அடித்த சதத்தையும் சேர்த்து தன்னுடைய கேரியரில் மொத்தம் 5 சதங்கள் அடித்துள்ள மேக்ஸ்வெல் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற இந்திய வீரர் ரோகித் சர்மாவின் (தலா 5) உலக சாதனையை சமன் செய்தார்.

அத்துடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் நம்பர் 4வது இடத்தில் களமிறங்கி அதிகபட்ச ஸ்கோர் அடித்த வீரர் என்ற இந்தியாவின் சூரியகுமார் யாதவ் சாதனையை உடைத்த அவர் புதிய உலக சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. கிளன் மேக்ஸ்வெல் : 120*, வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக, 2024*
2. சூரியகுமார் யாதவ் : 117, இங்கிலாந்துக்கு எதிராக, 2022
3. கிளன் மேக்ஸ்வெல் : 113*, இந்தியாவுக்கு எதிராக, 2019

Advertisement