இங்கிலாந்து கிரிக்கெட் அணியை சேர்ந்த முன்னாள் ஜாம்பவான் ஜெஃப்ரி பாய்காட் இங்கிலாந்து அணிக்காக கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் 1982-ஆம் ஆண்டு வரை 108 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 22 சதங்கள் மற்றும் 42 அரைசதங்கள் என 8114 ரன்களை குவித்துள்ளார். அதுமட்டுமின்றி 36 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் ஒரு சதம் மற்றும் 9 அரைசதம் என 1082 ரன்கள் குவித்துள்ளார். இங்கிலாந்து அணிக்காக கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் விளையாடிய அவர் தற்போது கிரிக்கெட் வர்ணனையாளராகவும் தனது 84 வயதிலும் தொடர்ந்து கிரிக்கெட் சார்ந்த பணிகளையே செய்து வருகிறார்.
என்னுடைய பேவரைட் கிரிக்கெட்டர் ரவீந்திர ஜடேஜா தான் : ஜெப்ரி பாய்காட்
இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு மிகவும் பிடித்த இந்திய வீரர் என்றால் அது ரவீந்திர ஜடேஜா தான் என்று பல்வேறு கருத்துக்களை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : சமீபத்திய பேவரைட் வீரர் என்றால் எனக்கு ரவீந்திர ஜடேஜாவை தான் மிகவும் பிடிக்கும். ஏனெனில் அவருடைய பங்களிப்பு என்பது அபரிவிதமான ஒன்று.
நான் அவரை நேரில் கூட பார்த்தது கிடையாது. ஆனால் அவர் பந்துவீசும் போதும் சரி, பீல்டிங் செய்யும் போதும் சரி, பேட்டிங் செய்யும் போதும் சரி முழு உத்வேகத்துடன் தனது 100 சதவீத பங்களிப்பையும் இந்திய அணிக்காக வழங்கி வருகிறார். அதனால் தான் தற்போது அவர் மிகச்சிறந்த ஆல்ரவுண்டராக இருக்கிறார். மூன்று வகையான துறையிலும் அசத்தும் அவர் எப்பொழுதுமே தனது முகத்தில் புன்னகையுடனே இருப்பார்.
உள்ளுக்குள் என்ன வலி இருந்தாலும் அதனை வெளிக்காட்டாமல் அணிக்காக விளையாடும் ஒரு வீரராக அவரைப் பார்க்கிறேன். சர்வதேச போட்டிகளை தாண்டி ஐபிஎல் போட்டிகளிலும் சென்னை அணி இதுவரை 5 கோப்பையை வென்றுள்ளது என்றால் அதில் அவருடைய பங்கு அதிகம். அதனால்தான் அவரை நான் ஃபேவரட் வீரர் என்று கூறுவதாகவும் ஜெஃப்ரி பாய்காட் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியது போன்று சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை இந்திய அணிக்காக 363 போட்டிகளில் விளையாடியுள்ள ஜடேஜா 306 இன்னிங்ஸ்களில் விளையாடி 33 ரன்கள் சராசரியுடன் 5 சதம் மற்றும் 40 அரைசதம் என 7207 ரன்களை குவித்துள்ளார். அதுமட்டும் இன்றி ஒட்டுமொத்தமாக 615 விக்கெட்டுகளையும் கைப்பற்றி மிகச் சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராக இருக்கிறார்.
இதையும் படிங்க : ஓமன் அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டிக்கான இந்திய அணி இதுதான் – உத்தேச பிளேயிங் லெவன் இதோ
அண்மையில் இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்திருந்த அவர் 10 இன்னிங்ஸ்களில் விளையாடி 86 ரன்கள் சராசரியுடன் 516 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார். அதில் ஒரு சதம் மற்றும் ஐந்து அரைசதங்கள் அடங்கும். அதோடு பந்துவீச்சில் அவர் கை கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.



