இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சுற்றுப்பயணத்தில் 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணியும், டி20 தொடரில் இந்திய அணியும் தொடரை கைப்பற்றியது. மீதமுள்ள 4 டெஸ்ட் போட்டிகளில் முதல் போட்டி வருகின்ற 17ம் தேதி அடிலெய்டில் பகலிரவு போட்டியாக நடைபெற உள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் டெஸ்ட் தொடரை கைப்பற்ற வேண்டுமென்று தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனது முதல் டெஸ்ட் போட்டியுடன் நாடு திரும்புவதாக கூறியுள்ளார். மனைவியின் கர்ப்பகாலத்தில் அவருடன் இருப்பதற்கு இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறியுள்ளார் விராட் கோலி. இதனால் மீதமுள்ள 3 டெஸ்ட் போட்டிகளில் ரஹானே தலைமையில் இந்திய அணி செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலி இரண்டு முறை அரை சதம் விளாசியுள்ளார். மொத்தம் 173 ரன்கள் குவித்து, 14 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்கள் அடித்துள்ளார். இதை தொடர்ந்து டி20 தொடர்களிலும் சிறப்பாக விளையாடிய விராட் கோலி 134 ரன்களை குவித்து, 6 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்சர்கள் விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு சிறப்பாக தனது ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் விராட் கோலி முதல் டெஸ்ட் போட்டியுடன் வெளியேறுகிறார் என்பது வருத்தம் தான்.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விராட் கோலிக்கு பதிலாக யாரை களமிறக்கலாம் என்பது குறித்து இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் ஆலோசனை தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய சுனில் கவாஸ்கர் : ” விராட் கோலி முதல் டெஸ்ட் போட்டியில் மட்டும் விளையாடுகிறார். இதன் காரணமாக ரஹானே கேப்டன் பொறுப்பை ஏற்று இந்திய அணியை வழிநடத்துவார். ஆனால் விராட் கோலியின் 4-வது இடத்தில் களமிறங்கப் போவது யார் ? என்ற கேள்வி மீண்டும் எழுந்துள்ளது.
கோலியின் 4வது இடத்தில் ரஹானே களமிறங்க வாய்ப்பு இருக்கிறது. அப்படி என்றால் ரஹானேவின் இடத்தில் கேஎல் ராகுல் அல்லது சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினால் சிறப்பாக இருக்கும்” என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தனது ஆலோசனையை தெரிவித்துள்ளார்.