டெஸ்ட்ல ஒரு சதம் மட்டும் இவர் அடிச்சிட்டார்னா. அப்புறம் தொடர்ச்சியா அடிச்சி தள்ளுவாரு – கவாஸ்கர் புகழாரம்

Gavaskar
- Advertisement -

இங்கிலாந்தில் உள்ள ஏஜஸ் பவுல் மைதானத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த இறுதிப் போட்டியில் வர்ணனையாளராக செயல்பட்டு வரும் இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர், வர்ணனையின்போது இந்திய அணியின் இளம் வீரர் ஒருவரை பற்றி பாராட்டி பேசியுள்ளார். ஐசிசி நடத்தும் தொடர் என்பதால் இந்த இறுதிப் போட்டிக்கு ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு இருந்து வந்தது.

indvsnz

அதே சமயம் இந்திய அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேனான சுப்மன் கில், இந்த இறுதிப் போட்டியில் எப்படி விளையாடப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் அனைவரிடமும் இருந்தது. இங்கிலாந்தில் முதல் முறையாக சர்வதேச டெஸ்ட் போட்டியில் விளையாடும் அவர், நியூசிலாந்து அணியின் வலுவான பௌலிங் யூனிட்டை எதிர்கொண்டு சிறப்பாக விளையாடியது மட்டுமல்லாமல் முதல் விக்கெட்டுக்கு ரோஹித் சர்மாவுடன் சேர்ந்து 62 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து, இந்திய அணிக்கு ஒரு வலுவான தொடக்கத்தையும் அமைத்து தந்தார்.

- Advertisement -

தாறுமாறாக ஸ்விங் ஆகும் டியூக் பந்துகளை அற்புதமாக எதிர் கொண்ட அவரின் பேட்டிங்கைப் பார்த்த சுனில் கவாஸ்கர், அவரைப் பற்றி வர்ணனையில் பேசியதாவது; எதிர்காலத்தில் மிகப் பெரிய வீரராக மாறும் மனோபாவம் சுப்மன் கில்லிடம் இருக்கிறது என்று கூறினார். இதைக் கேட்ட சக வர்ணனையாளர் சுப்மன் கில் இதுவரை டெஸ்ட் போட்டிகளில் சதமடிக்கவில்லை என்று கூறினார். இது குறித்து பேசிய அவர், முதல் சர்வதேச சதம் என்பது எப்போதுமே ஒரு வீரருக்கு கடினமானதாகத்தான் இருக்கும். அரைசதம் அடித்தப் பின்னர் அதனை சதமாக மாற்றுவது என்பது எளிது கிடையாது.

gill

இது போன்ற இளம் வயது பேட்ஸ்மேன்கள் 70-80 ரன்கள் அடித்திருக்கும்போது சீக்கிரமாக சதமடிக்க ஆசைப்பட்டு அவுட்டாகி விடுவார்கள். சுப்மன் கில் தனது முதல் சதத்தை பதிவு செய்து விட்டார் என்றால் அதற்குப் பிறகு நிறைய சதங்களை அவர் தொடர்ச்சியாக அடிப்பார் என்று அந்த வர்ணனையில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

gill

இங்கிலாந்தில் பந்துகள் அதிகமாக ஸ்விங் ஆகும் என்பதால், நியூசிலாந்து அணியின் வேகப் பந்து வீச்சை சமாளிக்க இந்திய வீரர்கள் தடுமாறுவார்கள் என்று அனைவரும் கருத்து கூறிய நிலையில், அதை தனது வித்தியாசமான பேட்டிங் அணுகுமுறையால் மாற்றிக் காட்டியுள்ளார் சுப்மன் கில். மேலும் போதிய அனுபவம் இல்லையென்றாலும் ஐசிசி நடத்தும் தொடரின் இறுதிப் போட்டியில் எந்த வித அழுத்தமும் இல்லாமல் விளையாடிய சுப்மன் கில், அடுத்த வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் நிச்சயமாக சதமடித்து அசத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement