ஐ.பி.எல் தொடருக்கு பின் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள், மூன்று டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகின்றது. இதில் ஒருநாள் தொடரில் 2 போட்டியில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணியும், டி20 தொடரில் 2 போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணியும் தொடரை கைப்பற்றியது. மீதமுள்ள 4 டெஸ்ட் போட்டிகளில் முதல் போட்டி வருகின்ற 17ம் தேதி அடிலெய்டில் பகலிரவு போட்டியாக நடைபெற உள்ளது. இந்த முதல் போட்டி பகலிரவு போட்டியாக நடைபெற இருப்பது கூடுதல் சிறப்பம்சம்.
இந்நிலையில் எப்படியாவது முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியை கைப்பற்ற வேண்டும் என்று இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், இந்திய அணியில் விக்கெட் கீப்பர் இடத்திற்காக விருத்திமன் சாஹா, ரிஷப் பண்ட் ஆகிய இருவருக்குமிடையே மாபெரும் போட்டி நடைபெற்று வருகிறது. இவர்களில் ஒருவரை இந்திய அணி தேர்வு செய்வது என்பது மிகவும் சவாலான ஒன்று தான்.
இந்நிலையில், இந்திய அணியில் நடைபெற்று வரும் இந்த விக்கெட் கீப்பரூக்கான பிரச்சினைக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தீர்வு கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர் “ விருத்திமன் சாஹா மற்றும் ரிஷப் பண்ட் இவர்களில் ஒருவரை இந்திய அணி தேர்வு செய்வது மிகவும் முக்கியமான ஒன்று. இருவரில் ரிஷப் பண்ட்டை தேர்ந்தெடுத்தால் சரியாக இருக்கும்.
அத்தோடு, இவர் 2018-19 ஆம் ஆண்டு இந்திய அணி ஆஸ்திரேலியா சென்று டெஸ்ட் தொடரை கைப்பற்றிய போது, அதிக ரன்களை அடித்தவர்கள் பட்டியலில் புஜாராவுக்கு அடுத்தபடியாக ரிஷப் பண்ட் இருந்தார். அந்தாண்டு சிட்னியில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் 159 ரன்களை குவித்து இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்ற முக்கிய காரணமாக இருந்துள்ளார்.
அதுமட்டுமின்றி தற்போது நடந்து முடிந்த இந்தியா-ஆஸ்திரேலியா ஏ இடையிலான பகலிரவு டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் 73 பந்துகளில் 103 ரன்கள் விளாசியுள்ளார். இதன்மூலம் ரிஷப் பண்ட் தற்போது சிறந்த நிலையில் இருக்கிறார் என்பது தெரிய வருகிறது” என்று சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.