
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அத்தொடரில் 4 போட்டிகளின் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலையில் இருக்கிறது. எனவே ஜூலை 31ஆம் தேதி லண்டன் ஓவலில் துவங்கிய கடைசிப் போட்டியில் வென்று இங்கிலாந்து பதிலடி கொடுத்து இந்தியா தொடரை சமன் செய்ய தயாராக உள்ளது.
முன்னதாக புதிய பயிற்சியாளராக கௌதம் கம்பீர் வந்தது முதல் இந்தியா ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி வருகிறது. ஆனால் கிரிக்கெட்டின் உயிர்நாடியான டெஸ்ட் போட்டிகளில் வங்கதேசத்துக்கு எதிரான தொடரை சொந்த மண்ணில் இந்தியா எளிதாக வென்றது. அதைத் தவிர்த்து நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் முதல் முறையாக இந்தியா ஒயிட் வாஸ் தோல்வியை சந்தித்தது.
அத்தோடு சொந்த மண்ணில் 12 வருடங்களாக ஒரு தொடரில் கூட தோற்காமல் வெற்றி நடை போட்டு வந்த இந்தியாவின் உலக சாதனையும் நிறைவுக்கு வந்தது. அடுத்ததாக ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 3 – 1 என்ற கணக்கில் தோற்ற இந்தியா பார்டர் – கவாஸ்கர் கோப்பையை 10 வருடங்கள் கழித்து கோட்டை விட்டது. அதனால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கும் இந்தியா முதல் முறையாக தகுதி பெறாமல் வெளியேறியது.
இந்நிலையில் ஒருவேளை இந்தியா ஓவல் போட்டியில் தோற்று 3 – 1 (5) என்ற கணக்கில் இங்கிலாந்தில் தோற்றால் இந்திய ரசிகர்கள் கௌதம் கம்பீரை பயிற்சியாளர் பதவியிலிருந்து வீட்டுக்கு அனுப்புவார்கள் என்று மைக்கேல் ஆதர்டன் தெரிவித்துள்ளார். ஏனெனில் ஹாட்ரிக் தோல்வியால் கம்பீரை ரசிகர்கள் கடுமையாக விமர்சிப்பார்கள் என்று அவர் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
“ஏற்கனவே இந்தியா அடுத்தடுத்த 2 டெஸ்ட் தொடர்களில் தோற்றுள்ளது. சொந்த ஊரில் நியூஸிலாந்திடம் 3 – 0 என்ற கணக்கில் தோற்ற அவர்கள் 3 – 1 என பார்டர் – கவாஸ்கர் கோப்பையை இழந்தார்கள். அடுத்ததாக இங்கேயும் இந்தியா தோற்கும் பட்சத்தில் கௌதம் கம்பீர் அழுத்தமான பயிற்சியாளராக இருப்பார். ஏனெனில் இந்தியாவுக்கு தேவையான அனைத்து வளங்கள் இருக்கின்றன”
இதையும் படிங்க: பும்ரா, குல்தீப் இல்லை.. கருண் இஸ் பேக்.. 5வது போட்டிக்கான இந்திய அணியில் 4 மாற்றங்கள் செய்த கில் பேட்டி
“அவர்களுடைய மக்கள் தொகை அதிகம். அதனால் அவர்கள் வெற்றிக்காக காத்திருக்கக்கூடிய ரசிகர்கள் கிடையாது. அவர்கள் களத்திற்கு செல்லும் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றியை எதிர்பார்க்கக் கூடியவர்கள். எனவே 3 டெஸ்ட் தொடர்களில் தொடர்ச்சியாக தோல்விகளை சந்திக்கும் பட்சத்தில் அது கௌதம் கம்பீருக்கு மிகப்பெரிய பிரச்சனையாக அமையும்” என்று கூறினார்.