வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற 2 போட்டியில் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இந்தியா 2 – 0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெற்ற அத்தொடரின் முதல் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. ஆனால் இரண்டாவது போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் கொஞ்சம் போராடி வென்றது.
ஏனெனில் அப்போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 518/5 ரன்கள் அடித்து டிக்ளர் செய்தது. அடுத்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸை 248 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா 272 முன்னிலை பெற்று ஃபாலோ ஆன் கொடுத்தது. அதை அடுத்து மீண்டும் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் 3, 4வது நாட்களில் பேட்டிங் செய்வதற்கு சாதகமாக மாறிய டெல்லி ஆடுகளத்தில் இந்தியாவை முதல் முறையாக திருப்பி அடித்து 390 ரன்கள் குவித்தது.
இந்தியாவுக்கு ஆப்பாகிடும்:
இறுதியில் 121 ரன்கள் இலக்கைத் துரத்திய இந்தியா 3 விக்கெட்டுகள் இழந்து வெற்றி பெற்றது. மொத்தத்தில் அப்போட்டியில் ஃபாலோ ஆன் கொடுத்தும் இன்னிங்ஸ் வெற்றி பெற முடியாத அளவுக்கு பிட்ச் இந்தியாவுக்கு எதிராகவே அமைந்தது என்று சொல்லலாம். இந்நிலையில் இது போன்ற பிட்ச்கள் வருங்காலத்தில் இந்திய அணிக்கு ஆப்பாக மாறலாம் என்று பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
எனவே இந்தியாவில் உள்ள மைதான பராமரிப்பாளர்கள் ஓரளவு பந்து வீச்சுக்கு சாதகமான பிட்ச்களை அமைக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். அடுத்ததாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் இந்தியா டெஸ்ட் தொடரில் விளையாட உள்ள நிலையில் கம்பீர் தெரிவித்த கருத்து பின்வருமாறு. “நாங்கள் டெல்லி பிட்ச் இன்னும் கொஞ்சம் நன்றாக இருக்கும் என்று நினைத்தோம்”
கம்பீர் கோரிக்கை:
“போட்டியில் நாங்கள் வெற்றி பெற்றாலும் பிட்ச்சில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதுவும் பெரிதாக உதவி கிடைக்கவில்லை. உங்களிடம் 2 உலகத் தரமான வேகப்பந்து வீச்சாளர்கள் இருக்கும் போது அவர்களும் விளையாட்டில் ஈடுபடுவதையே நீங்கள் விரும்புவீர்கள். மாறாக புதிய பந்துக்காக 40 ஓவர்கள் வரை காத்திருக்க விரும்ப மாட்டீர்கள். இந்த பிட்ச்சில் கேரி இல்லை. அதில் வேகம், பவுன்ஸ் அல்லது சுழல் போன்ற ஏதாவது இருக்க வேண்டும்”
இதையும் படிங்க: 150/4 டூ 167க்கு ஆல் அவுட்.. பாகிஸ்தானை சுருட்டிய தெ.ஆ.. 64 வருட சாதனை சேசிங் செய்யுமா?
“இல்லையென்றால் நீங்கள் உருவாக்கும் பேட்டிங் பிட்ச்கள் 4 நாட்களைத் தாண்டிச் செல்லும். எனவே பிட்ச்சில் கேரி இருக்க வேண்டும். அது இந்தப் போட்டியில் இல்லாதது கொஞ்சம் எச்சரிக்கை மணியாக தெரிகிறது. முன்னோக்கிச் செல்கையில் நமக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் நல்ல பிட்ச்கள் கிடைக்கும் என்று நம்புகிறேன். ஏனெனில் டெஸ்ட் கிரிக்கெட்டை உயிர்ப்புடன் வைப்பது நம்முடைய பொறுப்பு” என்று கூறினார்.



