இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரான கௌதம் கம்பீர் தற்போது அளித்துள்ள பேட்டி ஒன்றில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரது எதிர்காலம் குறித்த முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார். இதுகுறித்த விவரம் வெளியாகி தற்போது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய அணி அடுத்தடுத்து இரண்டு ஐசிசி கோப்பைகளை கைப்பற்றி இருந்தாலும் டெஸ்ட் போட்டிகளை பொருத்தவரை இந்திய அணியின் செயல்பாடு மோசமாக இருந்து வருவதால் பல பல்வேறு மாற்றங்கள் இனி இந்திய அணியில் நடக்கும் என்று பேசப்பட்டது.
ரோஹித் மற்றும் கோலியின் எதிர்காலம் குறித்து பேசிய : கவுதம் கம்பீர்
அந்த வகையில் எதிர்வரும் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் நட்சத்திர வீரரான விராத் கோலி ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓரங்கட்டப்படுவார்கள் என்று பேசப்பட்டது. மேலும் டெஸ்ட் அணிக்கு நிரந்தர புதிய கேப்டனை நியமிப்பதோடு மட்டுமின்றி எதிர்காலத்தை கணக்கில் கொண்டு பல்வேறு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று பேசப்பட்டது.
ஆனால் ரோகித் சர்மாவா, விராட் கோலியோ தங்களது ஓய்வு குறித்து எந்தவொரு முடிவும் எடுக்காததால் அவர்களுக்கு இங்கிலாந்து தொடரில் இடமளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரது எதிர்காலம் குறித்து பேசியிருந்த கௌதம் கம்பீர் கூறுகையில் :
அவர்கள் இருவருமே தற்போது இந்திய அணிக்காக மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். அதன் காரணமாகவே அவர்கள் தொடர்ச்சியாக அணியில் நீடித்து வருகிறார்கள். ஒரு வீரரின் ஆட்டம் சிறப்பாக இருக்கும் போது அவரை பயிற்சியாளரோ, தேர்வுக்குழுவினரோ அல்லது பிசிசிஐயோ யாருமே எவ்வித காரணத்தையும் சொல்லி நீக்க முடியாது.
அந்த வகையில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் வேளையில் அவர்களை அணியில் இருந்து யாராலும் நீக்க முடியாது. எந்த ஒரு வீரரும் தங்களது ஃபேர்வெல் போட்டியை நினைத்து விளையாடுவது கிடையாது. நாட்டுக்காக தங்களது பங்களிப்பை வழங்கி கோப்பைகளை வெற்றி பெற்றுதர வேண்டும் என்பதை மட்டுமே மனதில் கொண்டு விளையாடி வருகின்றனர்.
இதையும் படிங்க : தோனி இந்த சீசனோடு ரிட்டயர்டு ஆகப்போறது உறுதி.. அதுக்காகத்தான் இந்த மாற்றங்கள் எல்லாம் நடக்குது – விவரம் இதோ
அந்த வகையிலேயே அவர்கள் இருவரும் இந்திய அணிக்காக சிறப்பான பங்களிப்பை வழங்க வேண்டும் என்று தொடர்ச்சியாக செயல்பட்டு வருகின்றனர். எனவே தற்போதைக்கு அவர்களை யாராலும் அணியில் இருந்து நீக்க முடியாது என கவுதம் கம்பீர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.



