
ஐசிசி 2025 சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் தொடரில் இந்திய அணி ஃபைனலில் விளையாடுவதற்கு தகுதி பெற்றுள்ளது. குறிப்பாக மார்ச் 4ஆம் தேதி நடைபெற்ற செமி ஃபைனல் போட்டியில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்த இந்தியா ஃபைனலுக்கு தகுதி பெற்று அசத்தியது. முன்னதாக இந்தத் தொடர் வரலாற்றிலேயே முதல் முறையாக பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது.
ஆனால் பாதுகாப்பு பிரச்சினைகளால் அந்நாட்டிற்கு சென்று விளையாடாத இந்தியா தங்களது போட்டிகளை துபாயில் விளையாடும் என்று ஐசிசி அறிவித்தது. அப்போது யாருமே இந்திய அணியையும் ஐசிசி வெளியிட்ட அறிவிப்பை பற்றியும் விமர்சிக்கவில்லை. ஆனால் குரூப் சுற்றில் அடுத்தடுத்த 2 வெற்றிகள் பெற்று செமி ஃபைனலுக்கு தகுதி பெற்றதும் இந்தியாவுக்கு ஏற்றுக்கொள்ள முடியாத சாதகம் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன.
குறிப்பாக ஒரே ஹோட்டலில், ஒரே மைதானத்தில் தங்கி விளையாடுவது இந்தியாவுக்கு பல வகைகளிலும் சாதகமாக இருப்பதாக முன்னாள் இங்கிலாந்து கேப்டன்கள் நாசர் ஹுசைன், மைக்கேல் ஆதர்டன் விமர்சித்தனர். மேலும் துபாயில் விளையாடுவது இந்தியாவுக்கு சாதகம் என்று ஆஸ்திரேலிய கேப்டன் பட் கமின்ஸ், தென்னாப்பிரிக்க வீரர் வேன் டெர் டுஷன் ஆகியோரும் தெரிவித்தனர். இந்நிலையில் இப்படி விமர்சிப்பவர்கள் இன்னும் தொட்டிலில் தூங்குவதாக இந்திய அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் பதிலடி கொடுத்துள்ளார்.
மேலும் பாகிஸ்தானாக இருந்தாலும் தாங்கள் 2 முதன்மை ஸ்பின்னர்கள், 3 பகுதிநேர ஸ்பின்னர்கள் கொண்ட அணியையே தேர்ந்தெடுத்திருப்போம் என்றும் கம்பீர் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “முதலில் துபாய் மற்ற அணிகளைப் போல எங்களுக்கும் பொதுவான இடமாகும். நாங்கள் இங்கே அதிகம் விளையாடியதில்லை. கடைசியாக இங்கே எந்தத் தொடரில் விளையாடினோம் என்பதும் நினைவில்லை”
“நாங்கள் இந்த மைதானத்துக்கு தகுந்தார் போல் எதையும் திட்டமிடவில்லை. நீங்கள் 15 பேர் கொண்ட அணியைத் தேர்ந்தெடுத்தால் 2 முதன்மை ஸ்பின்னர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதே திட்டமாகும். பாகிஸ்தானாக இருந்தாலும் இதுவே எங்களது திட்டமாக இருக்கும். ஏனெனில் இது ஆசிய கண்டமாகும். ஆனால் துபாயில் எங்களுக்கு ஏற்றுக் கொள்ளப்படாத சாதகம் இருப்பதாக விவாதங்கள் காணப்படுகின்றன”
இதையும் படிங்க: விராட் கோலி தான் ஆல் டைம் கிரேட் பேட்ஸ்மேன்.. புத்தகத்தில் அந்த எல்லாத்தையும் வெச்சுருக்காரு.. கிளார்க் பாராட்டு
“உண்மையில் நாங்கள் போட்டிக்கு முந்தைய நாள் கூட இங்கே பயிற்சி எடுக்கவில்லை. ஐசிசி துபாய் அகடமி மைதானத்தில் பயிற்சியை எடுத்தோம். அந்த 2 மைதானங்களுக்கும் வானத்திற்கும் பூமிக்கும் போன்ற இடைவெளி இருக்கிறது. அதை புரிந்து கொள்ளாத சிலர் இன்னும் தொட்டிலில் இருக்கிறார்கள் அவர்கள் வளர வேண்டும். நாங்கள் எந்த சாதகத்தையும் பெறவில்லை. அதற்கு தகுந்தார் போல் திட்டங்களையும் வகுக்கவில்லை” என்று கூறினார்.