கடந்த 2024-ஆம் ஆண்டு இந்திய அணி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரை வென்ற கையோடு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ராகுல் டிராவிட் தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதன்பிறகு புதிய பயிற்சியாளருக்கான தேடலில் ஈடுபட்ட பிசிசிஐ பல்வேறு வெளிநாட்டு முன்னாள் வீரர்களை அந்த பதவிக்காக பரிசீலனை செய்திருந்தது. அதேவேளையில் இந்திய முன்னாள் வீரர்கள் சிலரையும் புதிய பயிற்சியாளராக கொண்டுவரும் திட்டத்தில் சிலரை நேர்காணலும் செய்தது.
இந்திய அணிக்கு நான் பயிற்சியாளராக வர இவரே காரணம் : கவுதம் கம்பீர்
அந்த வகையில் நடைபெற்ற ஆலோசனைக்கு பிறகு இந்திய அணியின் முன்னாள் வீரரான கௌதம் கம்பீர் ஐபிஎல் போட்டிகளில் கொல்கத்தா அணிக்காக ஆலோசகராக இருந்து அந்த அணிக்கு சாம்பியன் பட்டத்தை வென்றிருந்த வேளையில் அவரது அனுபவமும், பயிற்சியும் இந்திய அணிக்கு உதவும் என்று நினைத்து அவரை புதிய தலைமை பயிற்சியாளராக கொண்டு வந்தது. கௌதம் கம்பீரின் தலைமையில் இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் தடுமாற்றத்தை சந்தித்து இருந்தாலும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி, 2026 டி20 உலக கோப்பை என அடுத்தடுத்த கோப்பைகளை வென்று அசத்தியுள்ளது.
இந்நிலையில் தான் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக வருவதற்கு தயங்கியதாகவும், பிசிசிஐ-யின் முன்னாள் மூத்த அதிகாரி ஜெய் ஷா தான் எனக்கு இந்த பொறுப்பை வழங்கினார் என்றும் கௌதம் கம்பீர் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : மும்பையில் ஐபிஎல் போட்டி நடைபெற்று கொண்டிருந்தபோது ஒருமுறை ஜெய் ஷா என்னை ஹோட்டல் அறையில் சந்தித்தார்.
அப்போது உங்களுக்கு ஒரு வாய்ப்பினை நான் வழங்குவேன். அதற்கு நீங்கள் முடியாது என்று சொல்லக்கூடாது என்று கூறினார். நானும் என்னவென்று கேட்டேன். அப்போது அவர் நீங்கள் தான் இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளராக வேண்டும் என்று சொன்னார். அந்த நேரத்தில் நான் அதற்கு தயாராக இருக்கவில்லை. ஏனெனில் இதற்கு முன்பு நான் எப்போதும் பயிற்சியாளராக இருந்தது கிடையாது.
ஐ.பி.எல் அணியின் மென்டாராகவே மட்டுமே இருந்திருக்கிறேன். எனவே இந்திய அணியை பயிற்சி செய்யும் அளவிற்கு அப்போது நான் தயாராகவில்லை என்றாலும் ஜெய் ஷா தொடர்ந்து எனக்கு ஆதரவு தந்து என்மீது நம்பிக்கை வைத்து நீங்கள் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று கூறினார். இந்த தருணத்தில் நான் ஜெய் ஷாவுக்கு தான் நன்றி சொல்லியாக வேண்டும்.
இதையும் படிங்க : அகமதாபாத்திலிருந்து ரயில் மூலம் மும்பைக்கு சென்ற ஷிவம் துபே.. ஏன் தெரியுமா? – அவரே தெரிவித்த சுவாரசிய தகவல்
அவர் என்மீது வைத்த நம்பிக்கை மிகப்பெரியது. இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்து கோப்பைகளை வெல்வது என்பது சாதாரணம் கிடையாது. முன்னாள் வீரர்களில் எத்தனை பேருக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருக்கும்? என்று எனக்கு தெரியவில்லை. தற்போது இந்திய அணியை வெற்றிகரமாக வழிநடத்தி வருவதில் மகிழ்ச்சி என கவுதம் கம்பீர் கூறியது குறிப்பிடத்தக்கது.



