
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் நட்சத்திர வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான நிதீஷ் ரெட்டி கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் போது அறிமுகமாகி அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தியிருந்தார். அதிலும் குறிப்பாக மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியின் போது சதம் அடித்து தனது அசாத்தியமான திறனை வெளிப்படுத்திய அவர் பந்துவீச்சிலும் ஓரளவு சிறப்பான பங்களிப்பினை வழங்கி தான் ஒரு மிகச்சிறந்த ஆல்ரவுண்டர் என்பதை அந்த தொடரிலேயே நிரூபித்து இருந்தார்.
அதனால் அவரது அந்த செயல்பாடு அப்போதே பெரியளவில் பாராட்டப்பட்டு இருந்தது. அதன் பின்னர் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் சற்று சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் தேவை என்பதால் இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியிலும் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.
அந்த வகையில் தனக்கு கிடைத்த வாய்ப்பில் இங்கிலாந்து மண்ணிலும் அவர் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தி தனது இடத்தினை நிரந்தரப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் நடைபெற்று வரும் இங்கிலாந்து தொடரில் அவரது செயல்பாடு இன்னும் திருப்திகரமாக அமையவில்லை. பந்துவீச்சில் அவர் சிறப்பாக செயல்பட்டு இருந்தாலும் பேட்டிங்கில் அவரது மோசமான ஆட்டம் கடந்த இரண்டு போட்டிகளாகவே தொடர்ந்து வருவது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இந்நிலையில் நிதீஷ்குமார் ரெட்டி இப்படி பேட்டிங்கில் சரிவை சந்திக்க இந்திய அணியின் பயிற்சியாளர் கம்பீர்தான் காரணம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஏனெனில் ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரின் போது பேட்டிங் ஆர்டரில் முன் வரிசையில் களமிறங்கிய அவர் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். ஆனால் தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் தொடரில் அவர் ஆரம்பத்தில் ஆறாவது வீரராக பேட்டிங் செய்ய வந்தார்.
பின்னர் ஏழாவது இடத்திற்கு தள்ளப்பட்ட அவர் கடைசியாக நடைபெற்று முடிந்த லண்டன் லார்ட்ஸ் போட்டியில் ஒன்பதாவது இடத்தில் பேட்டிங் செய்ய வந்தார். இப்படி தொடர்ச்சியாக பேட்டிங் ஆர்டரில் அவரை மாற்றி மாற்றி களமிறக்குவதால் அவரால் பெரிய இன்னிங்ஸை விளையாட முடியவில்லை என்று கூறப்படுகிறது. அவர் ஒரு பேட்டிங் ஆல்ரவுண்டர் என்பதனால் முன்கூட்டியே அவரை களம் இறக்கினால் அதிக பந்துகளை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று சிலர் குறிப்பிடுகின்றனர்.
இதையும் படிங்க : இன்னும் 101 ரன்கள் அடிச்சா போதும்.. இந்திய வீரராக வரலாற்று சாதனையை நிகழ்த்த காத்திருக்கும் – ரிஷப் பண்ட்
ஆனால் ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் களமிறங்கிய பின்னர் அவர் தாமதமாக இறங்குவதாலே பின் வரிசையில் அவரால் பெரியளவில் பேட்டிங் செய்ய முடியவில்லை என்று கூறப்படுகிறது. இப்படி ஒரு மிகச் சிறப்பான பேட்டிங் ஆல்ரவுண்டரை பின் வரிசையில் களமிறக்குவதன் மூலம் அவரது கரியரை கம்பீர் தான் வீணடிக்கிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.