இங்கிலாந்து அணிக்கு எதிராக மான்செஸ்டர் நகரில் நடைபெற்ற நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் காயத்துடன் விளையாடிய ரிஷப் பண்ட்டிற்கு தற்போது பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. ஏனெனில் இந்த நான்காவது டெஸ்ட் போட்டியின் போது முதல்நாள் ஆட்டத்தில் கிறிஸ் வோக்ஸ் வீசிய பந்தில் கால் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக பாதியிலேயே வெளியேறிய ரிஷப் பண்ட்டுக்கு செய்யப்பட்ட ஸ்கேன் பரிசோதனையில் அவரது பாதத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டது கண்டறியப்பட்டது.
இந்த விடயத்தில் பண்டை எவ்வளவு பாராட்டினாலும் பத்தாது : கவுதம் கம்பீர்
இதன் காரணமாக அவர் நான்காவது டெஸ்ட் போட்டியின் பாதியிலேயே வெளியேறுவார் என்றும் அந்த போட்டியில் மீண்டும் அவர் தொடர்வது சாத்தியமில்லை என்று கூறப்பட்டது. ஆனால் போட்டியின் இரண்டாம் நாளன்று இந்திய அணி முதல் இன்னிங்சில் இக்கட்டான சூழலை சந்தித்தபோது மீண்டும் களமிறங்கிய ரிஷப் பண்ட் உடைந்த காலுடன் அரைசதம் அடித்து இந்திய அணியின் ரன் குவிப்பிற்கு உதவியிருந்தார்.
அப்படி அவர் கால் உடைந்த பின்னரும் மைதானத்திற்கு வந்து களத்தில் பேட்டிங் செய்தது பலரது மத்தியிலும் வியப்பை ஏற்படுத்தியது. அதோடு அவர் களமிறங்கும் போதும் சரி, ஆட்டம் இழந்து வெளியேறும் போதும் சரி, இருநாட்டு ரசிகர்களும் அவரது அந்த அர்ப்பணிப்பை ஆரவாரமாக கைதட்டி வரவேற்றனர்.
இவ்வேளையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக ரிஷப் பண்ட் அதிகாரபூர்வமாக அணியிலிருந்து காயம் காரணமாக வெளியேறுகிறார் என்று அறிவிக்கப்பட்டது. அதோடு அவருக்கான மாற்று வீரராக தமிழக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் நாராயணன் ஜெகதீசன் இடம் பெறுவதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த நான்காவது போட்டி முடிந்த பின்னர் ரிஷப் பண்ட்டின் அர்ப்பணிப்பு குறித்து பேசிய இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளரான கௌதம் கம்பீர் கூறுகையில் :
ஏற்கனவே கூறப்பட்டது போன்று ரிஷப் பண்ட் இந்த தொடரில் இருந்து வெளியேறுகிறார். ஆனால் ஒரு விடயத்தை நாம் மறக்கக்கூடாது. அவர் இந்த போட்டியில் காண்பித்த அர்ப்பணிப்பும், உத்வேகமும் மறக்க முடியாத ஒன்று. நாட்டுக்காக விளையாட வேண்டும் என்பதில் அவருக்கு இந்த இந்த உறுதி பாராட்டப்பட வேண்டிய ஒன்று. உடைந்த காலுடன் பேட்டிங் செய்வது அவ்வளவு சாதாரண காரியம் கிடையாது. இதற்காக அவரை எவ்வளவு பாராட்டினாலும் அது போதாது.
இதையும் படிங்க : காலில் ஏற்பட்டுள்ள எலும்பு முறிவு குறித்தும்.. அதிலிருந்து மீண்டு வருவது குறித்தும் – ரிஷப் பண்ட் வெளியிட்ட பதிவு
இனிவரும் தலைமுறைகள் நிச்சயம் இந்த விடயத்தை பேசுவார்கள் என்று நினைக்கிறேன். அவரைப் போன்றே நாட்டுக்காக எந்த சூழ்நிலையிலும் விளையாட வேண்டும் என்ற எண்ணத்தையும் கற்றுக்கொள்வார்கள் என்று தான் கருதுவதாக கௌதம் கம்பீர் ரிஷப் பண்ட்டை பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.



