புனேவில் அக்டோபர் 24ஆம் தேதி இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி துவங்குகிறது. 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து வென்றது. அதனால் 36 வருடங்கள் கழித்து சொந்த மண்ணில் நியூசிலாந்திடம் தோற்ற இந்தியா இத்தொடரை வெல்ல கடைசி 2 போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
அந்த சூழ்நிலையில் கடைசி 2 போட்டிகளுக்கான இந்திய அணியில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் மட்டும் பிரத்தியேகமாக சேர்க்கப்பட்டுள்ளார். இத்தனைக்கும் அஸ்வின், ஜடேஜா, அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ் ஆகிய 4 ஸ்பின்னர்கள் இந்திய அணியில் உள்ளனர். அதையும் தாண்டி வாஷிங்டன் சுந்தர் இந்திய அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது ஆச்சரியமாக அமைந்தது.
ஆச்சர்ய தேர்வு:
குறிப்பாக சமீபத்திய ஜிம்பாப்வே மற்றும் இலங்கை டி20 தொடர்களில் அவர் தொடர்நாயகன் விருது வென்று இந்தியாவின் வெற்றியில் பங்காற்றினார். மேலும் சமீபத்திய ரஞ்சி போட்டியில் டெல்லிக்கு எதிராக அவர் சதமடித்து 6 விக்கெட்டுகள் எடுத்து ஆட்டநாயகன் விருது வென்று அசத்தினார். இந்நிலையில் 2வது போட்டியில் வாஷிங்டன் சுந்தருக்கு தேவைப்பட்டால் வாய்ப்பு கொடுப்போம் என்று இந்திய அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நியூசிலாந்து அணியில் 4, – 5 இடது கை பேட்ஸ்மேன்கள் பிளேயிங் லெவனில் இருப்பதாக நாங்கள் கருதுகிறோம். எனவே இடது கை பேட்ஸ்மேன்களிடமிருந்து பந்தை வெளியே எடுத்து சவாலைக் கொடுக்கக்கூடிய இன்னும் ஒரு பவுலர் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நாங்கள் கருதினோம். அது எப்போதும் பயனைக் கொடுக்கும். ஆனால் எங்களுடைய பிளேயிங் லெவன் பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை”
தேவைப்பட்டால் சுந்தர்:
“2 துவக்க வீரர்கள் மற்றும் ஒரு இடது கை மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் மட்டுமே உறுதி செய்துள்ளோம். நிறைய கட்டுப்பாட்டை கொடுக்கக்கூடிய வாஷிங்டன் சுந்தர் எங்களுக்கு நல்ல ஆப்ஷனாக இருப்பார். தரமான வீரரான அவர் அணிக்கு என்ன கொண்டு வர முடியும் என்பது எங்களுக்கு தெரியும். ஒருவேளை நாளை அவர் விளையாடினால் முற்றிலும் வித்தியாசமான பரிணாமத்தை கொடுப்பார்”
இதையும் படிங்க: 46க்கு ஆல் அவுட்டாக இங்கிலாந்து தான் காரணம்.. ஆனா பவர்ஹவுஸ் இந்தியாவுக்கு இது தெரியும்.. பிரட் லீ கருத்து
“பந்து வீச்சில் நல்ல கட்டுப்பாட்டையும் லோயர் மிடில் ஆர்டரில் பேட்டிங்கையும் கொடுப்பார். எனவே இவை அனைத்தும் நாங்கள் பந்தை வெளியே கொண்டு வர விரும்புகிறோமா? என்பதைப் பொறுத்தது. ஆனால் எங்களிடம் மற்றொரு விரல் ஸ்பின்னர் அக்சர் பட்டேல் மற்றும் மணிக்கட்டு ஸ்பின்னர் குல்தீப் இருக்கிறார்கள். எனவே பிட்ச்சை பார்த்து விட்டு நாங்கள் அதற்குத் தகுந்த முடிவை எடுப்போம்” என்று கூறினார்.



