
ஐசிசி 2024 20 உலகக் கோப்பையை 17 வருடங்கள் கழித்து ரோகித் சர்மா தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி வென்றது. அந்த வெற்றியுடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஜாம்பவான்கள் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். கடந்த 10 வருடங்களாக சிறப்பாக விளையாடிய அவர்கள் இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளனர்.
இருப்பினும் தற்போது 35 வயதை கடந்து விட்டதால் வருங்காலத்தை கருத்தில் கொண்டு அவர்கள் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளனர். அதே சமயம் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுவோம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் 2025 சாம்பியன்ஸ் ட்ராபி மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் அவர்கள் கண்டிப்பாக விளையாடுவார்கள் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா சமீபத்தில் அறிவித்தார்.
கம்பீர் அறிவிப்பு:
இருப்பினும் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற உள்ள 2027 உலகக் கோப்பையில் அவர்கள் விளையாடுவார்களா என்பது சந்தேகமாகும். ஏனெனில் தற்போது 37 வயதை கடந்துள்ள ரோஹித்தும் 36 வயதை தொட உள்ள விராட் கோலியும் வயது காரணமாக அந்த தொடரில் விளையாடுவதற்கு வாய்ப்பு குறைவாகவே காணப்படுகிறது. இந்நிலையில் 2027 உலகக் கோப்பையில் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் ஃபிட்டாக இருக்கும் பட்சத்தில் விளையாடுவார்கள் என பயிற்சியாளர் கௌதம் கம்பீர் அறிவித்துள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “50 ஓவர் அல்லது 20 ஓவர் உலகக் கோப்பை போன்ற பெரிய தொடர்களில் தங்களால் என்ன செய்ய முடியும் என்பதை அவர்கள் காண்பித்துள்ளார்கள். அவர்கள் இருவரிடமும் இன்னும் நிறைய கிரிக்கெட் உள்ளது. சாம்பியன்ஸ் ட்ராபி விரைவில் வருகிறது. ஆஸ்திரேலியாவில் பெரிய டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. அதில் விளையாடுவதற்கு அவர்கள் உத்வேகத்துடன் இருப்பார்கள்”
“ஒருவேளை ஃபிட்னஸை தொடர்ந்து கடைபிடிக்கும் பட்சத்தில் 2027 உலகக் கோப்பையிலும் அவர்களால் விளையாட முடியும். அது அவர்களுடைய சொந்த முடிவு. எவ்வளவு காலம் அவர்களால் விளையாட முடியும் என்பதை என்னால் சொல்ல முடியாது. இருப்பினும் விராட் மற்றும் ரோகித் ஆகியோர் உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் அவர்களிடம் இன்னும் ஆட்டம் இருக்கிறது”
இதையும் படிங்க: பாண்டியா கழற்றி விடப்பட்டு சூரியகுமார் கேப்டனாக நியமிக்கப்பட்டது ஏன்? அஜித் அகர்கர் விளக்கம்
“ஜஸ்ப்ரித் பும்ராவின் பணிச்சுமையை நிர்வகிப்பது முக்கியம். ரோகித் மற்றும் விராட் ஆகியோர் டி20 போட்டிகளில் விளையாட மாட்டார்கள். இருப்பினும் அவர்கள் இந்தியாவுக்காக மற்ற முக்கியமான போட்டிகளில் விளையாடுவார்கள். நல்ல ஃபார்மில் இருந்தால் அனைத்து போட்டிகளிலும் கூட அவர்கள் விளையாடுவார்கள். பும்ரா மட்டுமின்றி அனைத்து பவுலர்களின் பணிச்சுமையை நிர்வகிப்பது முக்கியம்” என்று கூறினார்.