இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கௌதம் கம்பீர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2007, 2011 உலகக் கோப்பையை வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய அவர் கேப்டன் மற்றும் ஆலோசகராக ஐபிஎல் கோப்பைகளை வென்ற அனுபவத்தைக் கொண்டவர். எனவே விடைபெற்ற ராகுல் டிராவிட்டுக்கு பின் அவர் இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஆனால் பயிற்சியாளராக வந்ததும் அவர் சூரியகுமாரை புதிய டி20 கேப்டனாக தேர்ந்தெடுத்துள்ளார். மேலும் ஹர்திக் பாண்டியாவின் துணை கேப்டன்ஷிப் பதவியை பறித்துள்ள அவர் சுப்மன் கில்லை துணை கேப்டனாக தேர்ந்தெடுத்துள்ளார். அத்துடன் அடுத்து நடைபெறும் இலங்கைத் தொடரில் சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரையும் அவர் கழற்றி விட்டுள்ளார்.
எதிரிகள் அல்ல:
அதனால் விராட் கோலியின் நிலைமை என்னனாகுமோ என்ற கவலை ரசிகர்களிடம் காணப்படுகிறது. ஏனெனில் ஒரே மாநிலத்தில் பிறந்து நாட்டுக்காக விளையாடியிருந்தாலும் 2013 ஐபிஎல் தொடரில் விராட் கோலியுடன் சண்டையிட்ட கௌதம் கம்பீர் 10 வருடங்கள் கழித்து 2023 சீசனில் ஆலோசகராக வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அத்துடன் ஓய்வுக்குப் பின் வர்ணனையாளராக அவர் பலமுறை விராட் கோலி அப்பட்டமாக விமர்சித்துள்ளார்.
இந்நிலையில் ரசிகர்கள் நினைக்கும் அளவுக்கு தாமும் விராட் கோலியும் எதிரிகள் அல்ல என்று கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். எனவே இருவரும் ஒன்றாக சேர்ந்து இந்திய அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுக்க பாடுபட உள்ளதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “எங்களைப் பற்றிய செய்திகள் டிஆர்பி’க்கு நன்றாக இருக்கும். அவருடன் என்னுடைய உறவு பொதுவெளியில் இருக்காது”
“எங்கள் உறவு முதிர்ச்சியான 2 தனி நபர்களுக்கு இடையேயானது. களத்தில் நாங்கள் ஒரே பகுதியில் இருக்க வேண்டும். விராட் கோலியுடன் நான் நல்ல உறவை பகிர்ந்து கொள்கிறேன். பயிற்சியாளராக நியமிக்கப்பட்டதும் விராட் கோலியுடன் சில மெசேஜ்களை பகிர்ந்து கொண்டேன். ஆனால் பயிற்சியாளராக வருவதற்கு முன்பாக அல்லது பின்பாக நாங்கள் என்ன விவாதித்தோம் என்பது முக்கியமல்ல. அவர் உலகத்தரம் வாய்ந்த வீரர்”
இதையும் படிங்க: சுப்மன் கில்லிடம் என்ன இருக்கு? பாண்டியாவுக்கு பதில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டது ஏன்? அகர்கர் விளக்கம்
“நாங்கள் ஒன்றாக இணைந்து வேலை செய்வோம் என்று நம்புகிறேன். ஒன்றாக சேர்ந்து நன்றாக செயல்பட்டு வெற்றியை பெற்றுக் கொடுத்து நாட்டை பெருமைப்பட வைப்பதே எங்களுடைய வேலை. நாங்கள் கோடிக்கணக்கான மக்களை பிரதிநிதித்துவப் படுத்துகிறோம். எனவே நாங்கள் ஒன்றாக ஒரே பக்கத்தில் நின்று செயல்படுவது அவசியம்” என்று கூறினார்.



