இந்திய கிரிக்கெட் அணி சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளுக்கு சவாலை கொடுக்கும் டாப் அணியாக செயல்பட்டு வருகிறது. இருப்பினும் இந்திய அணியில் கேமரூன் கிரீன், பென் ஸ்டோக்ஸ் போன்ற வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் இல்லை என்பது பெரிய குறையாகவே பார்க்கப்படுகிறது. குறிப்பாக வரலாற்றில் முதலும் கடைசியுமாக ஜாம்பவான் கபில் தேவ் மகத்தான ஆல் ரவுண்டராக செயல்பட்டு 1983 உலகக் கோப்பை உட்பட இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்தார்.
அவருக்குப் பின் இதுவரை இந்திய அணிக்கு ஒரு தரமான வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் கிடைக்கவில்லை என்பதே உண்மையாகும். அந்த இடத்தை நிரப்பும் அளவுக்கு ஹர்திக் பாண்டியா, இர்பான் பதான் ஆகியோர் நம்பிக்கையை கொடுத்தனர். இருப்பினும் கபில் தேவ் வெளிபடுத்திய செயல்பாடுகளில் பாதியளவு கூட அவர்களால் தொடர்ந்து வெளிப்படுத்த முடியவில்லை.
கெளதம் கம்பீர் பதில்:
இந்நிலையில் இந்திய அணியில் கபில் தேவ் போன்ற வீரர்கள் இல்லை என்று சொல்பவர்கள் அஸ்வின், ஜடேஜா, அக்சர் பட்டேல் ஆகிய சுழல் பந்து வீச்சு ஆல் ரவுண்டர்களை பார்க்க வேண்டுமென பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “கபில் தேவ் நாட்களில் இருந்து இதைப்பற்றி நாம் பேசி வருகிறோம்”
“இந்திய அணியில் எங்களிடம் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர்கள் இல்லை என்று பலரும் பேசுகிறார்கள். அப்படி ஒரு வீரர் இல்லையென்றால் இல்லை என்பதே அர்த்தம். ஆனால் நீங்கள் ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர் போன்ற சுழல் பந்து வீச்சு ஆல் ரவுண்டர்களை பார்க்க வேண்டும். அவர்களைப் போல எங்களிடம் தரமான ஆல் ரவுண்டர்கள் இருக்கின்றனர்”
அஸ்வின், ஜடேஜா, அக்சர் பட்டேல்:
“வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர்களைப் பற்றி தொடர்ந்து பேசும் நாம் அதற்காக அதிலேயே பிடிவாதமாக இருக்கக்கூடாது. இந்த நேரத்தில் எங்களிடம் உள்ள சுழல் பந்துவீச்சு ஆல் ரவுண்டர்களைப் போன்ற வீரர்கள் எத்தனை சர்வதே அணிகளிடம் உள்ளார்கள் என்று என்னிடம் சொல்லுங்கள்? அவர்களின் தரத்தை பற்றி பேசுங்கள். அதுவே முக்கியம்”
இதையும் படிங்க: என் குழந்தைகளை அவரோட கிரிக்கெட்டை பார்த்து வளர சொல்லிருக்கேன்.. இந்திய வீரரை பாராட்டிய இயன் பெல்
“அதிர்ஷ்டவசமாக அது எங்களிடம் இருக்கிறது “என்று கூறினார். அவர் கூறுவது போல உலகின் மற்ற அணிகளில் அஸ்வின், ஜடேஜா, அக்சர் போன்ற 3 சுழல் பந்து வீச்சு ஆல் ரவுண்டர்கள் இல்லை. அந்த மூவரின் அற்புதமான ஆட்டத்தாலேயே கடந்த 2012க்குப்பின் 12 வருடங்களாக உலகின் எந்த அணிக்கு எதிராகவும் இந்தியா சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் கூட தோற்காமல் வெற்றி நடை போட்டு வருவது குறிப்பிடத்தக்கது.



