தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கொல்கத்தாவில் நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 30 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியை சந்தித்தது. அதனால் 15 வருடங்கள் கழித்து இந்தியாவை அதன் மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியில் தோற்கடித்து தென் ஆப்பிரிக்கா சாதனை வெற்றி பெற்றது. மறுபுறம் தங்களுடைய சொந்த மண்ணில் மிகவும் குறைந்தபட்ச இலக்கை (124) சேசிங் செய்ய முடியாமல் இந்தியா மோசமான சாதனை தோல்வியைச் சந்தித்தது.
அந்த தோல்விக்கு கொல்கத்தாவில் அமைக்கப்பட்டிருந்த மோசமான பிட்ச் முக்கிய காரணமாக அமைந்தது. இத்தனைக்கும் கடந்த வருடம் நியூசிலாந்துக்கு எதிராக 3 – 0 (3) என்ற கணக்கில் இந்தியா சொந்த மண்ணில் ஒயிட் வாஸ் அவமானத் தோல்வியை சந்தித்தது. அத்தொடரில் சுழலுக்கு சாதகமான பிட்ச்கள் அமைக்கப்பட்டிருந்ததே இந்தியாவின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.
நாங்க தான் கேட்டு வாங்குனோம்:
ஆனால் அந்த தோல்வியிலிருந்து எந்தப் பாடத்தையும் கற்காத இந்திய அணி மீண்டும் அதே போன்ற பிட்ச்சை அமைத்து படுதோல்வியை சந்தித்துள்ளது. இந்நிலையில் கொல்கத்தாவின் பிட்ச் சுழலுக்கு சாதகமாக இருக்க வேண்டும் என்று தாங்கள் தான் கேட்டு வாங்கியதாக இந்திய அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். ஆனால் அந்த பிட்ச்சில் வெற்றி பெற ஸ்பின்னர்களை சமாளிக்க தெரிந்திருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் தென்னாப்பிரிக்க ஸ்பின்னர்களை இந்திய பேட்ஸ்மேன்கள் சரியாக எதிர்கொள்ளாததே தோல்விக்கு காரணம் என்று கம்பீர் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இது தான் நாங்கள் சரியாக கேட்ட பிட்ச். ஏற்கனவே நான் சொன்னது போல் கொல்கத்தா மைதானத்தின் கியூரேட்டர் எங்களுக்கு உதவிகரமாக இருந்தார்”
கம்பீர் விளக்கம்:
“இது போன்ற ஆடுகளத்தையே நாங்கள் விரும்பினோம். அதுவே எங்களுக்கு சரியாக கிடைத்தது. ஆனால் நீங்கள் நன்றாக விளையாடாத போது தோல்வியே கிடைக்கும். இப்போதும் பிட்ச் எப்படி இருந்தாலும் 124 என்பது சேசிங் செய்யக்கூடிய இலக்கு என்று நான் நம்புகிறேன். உங்களிடம் திடமான தடுப்பாட்டம், உறுதி ஆகியவை இருந்தால் இந்த பிட்ச்சிலும் உங்களால் ரன்கள் அடிக்க முடியும். அது அதிரடியாக விளையாடுவதற்கு உதவாமல் இருக்கலாம்”
இதையும் படிங்க: ஏன் அதை கொல்றிங்க? இந்த பிட்ச்ல சச்சினால் கூட இந்தியாவை ஜெய்க்க வைக்க முடியாது.. ஹர்பஜன் விளாசல்
“ஆனால் உங்களது தலையை தொங்க விட்டு முயற்சித்தால் கண்டிப்பாக இந்த பிட்ச்சிலும் ஸ்கோர் அடிக்க முடியும். அதில் 2 விதமான பவுலர்களுக்கும் சீரற்ற பவுன்ஸ் வந்ததாக எனக்குத் தெரிந்தது. 40 – 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தால் நாங்கள் வெற்றி பெற்றிருப்போம். நீங்கள் அழுத்தத்தை உள்வாங்கி பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தால் பெரிய இலக்கும் சிறிதாக மாறியிருக்கும்” என்று கூறினார்.



